முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மனவளம் போற்றும் மகத்தான பயிற்சி!

இந்தியாவின் வலிமையே மனிதவளம்தான். உலக மக்கள் தொகையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். அந்த மக்கள் தொகையில் 40 சதவீதம் அளவுக்கு இளைஞர்களைக் கொண்டவர்கள் நாம். உலகில் உள்ள மொத்த இளைஞர்களில் 19 சதவீதம் பேர்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:33 PM
பகிர்:

இந்தியாவின் வலிமையே மனிதவளம்தான். உலக மக்கள் தொகையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். அந்த மக்கள் தொகையில் 40 சதவீதம் அளவுக்கு இளைஞர்களைக் கொண்டவர்கள் நாம். உலகில் உள்ள மொத்த இளைஞர்களில் 19 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். இதனாலேதான் நாளைய இந்தியா என இளைஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.

இதனடிப்படையிலேயே ஒரு புதிய முயற்சியை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாநில அளவிலேயே முதன் முறையாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையுடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள 295 ஆசிரியர்களுக்கு உளவியல் கலந்தாய்வாளர் பயிற்சியை அளித்துள்ளது. இளைஞர்களின் மனப் பிரச்னைக்கான மருத்துவ தேவை குறித்து வேலூர் சிஎம்சி மனநல மருத்துவத்துறைத் தலைவர் மருத்துவர் பால் எஸ்.எஸ். ரசலிடம் கேட்டோம்.

""இந்தியாவில் குழந்தைகள் அளவிலேயே ஏராளமானோருக்கு மனநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மனநோய் மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. நோய் தாக்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிது. வளர்இளம் பருவத்திலேயே இதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துகிறது. இப்பணி வெற்றி பெறும்போது நாட்டிற்கு இது ஒருவழி காட்டியாக இருக்கும்.

மனநோய் என்பது நோயாளிக்கு மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும், சமூகத்தையும் பாதிக்கக் கூடியது. பிறநோய்கள் வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும், மனநோய் வருவதை முன்கூட்டியே தடுத்துவிட முடியும். இதையும் மீறி நோய் வரும்போது அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் பலன் கிடைக்கும். துரதிருஷ்டவசமாக நம்மிடையே மனநோய் குறித்த விழிப்புணர்வு இல்லை.

இதனால் பள்ளி மாணவர்களில் 28 சதவீத மாணவர்கள் மனநலன் பாதிப்புக்கு உள்ளவர்களாக இருக்கின்றனர். மனநலன் பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டுபிடிக்கும் வழியை ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிட முடியும். ஆனால் 84 சதவீத ஆசிரியர்கள் மனநலன் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பயிற்சியைப் பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.

குழந்தைப் பருவத்திலிருந்து வாலிப பருவத்தை அடையும் காலமே வளர்இளம் பருவம் என்றழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கிட வேண்டியது அவசியமானதாகும். மனநோய் தோன்றுவதற்கான ஆரம்பக் கட்டம் இந்த வயதில்தான். வளர் இளம் பருவத்தில்தான் மன அழுத்தம் அதிகமாகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களில் 6வது காரணமாக மனஅழுத்தம் இடம் பிடிக்கிறது. இந்த இளம் பருவத்தில்தான் பெற்றோர்களிடமிருந்து விலகி, போதைப் பொருளுக்கு அடிமையாகி, தான் தனித்து விடப்பட்டதாக இளைஞர்கள் கருதும் பருவம். இது போன்றவர்களின் வாழ்வில் சரியான நேரத்தில் குறுக்கிட்டு அவர்களை நல்வழிப்படுத்தினால் அவர்களையும் அறிஞர்களாக மாற்ற முடியும். வாழ்க்கைக்கு ஆதாரமானது நம்பிக்கை என்னும் மனநலன்தான். வளர் இளம் பருவத்தினரின் மனதளவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு, மாணவர்களுடன் அதிக நேரத்தை செலவிடும் ஆசிரியர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்துவதற்கான பயிற்சி அளித்து ஆசிரியர்களை உளவியல் கலந்தாய்வாளர்களாக உருவாக்கினால் வளர் இளம்பருவத்தினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்'' என்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதை முதல்முறையாக துவங்குவதற்கு ஆவன செய்த ஆட்சியர் மா.வள்ளலார், ""சில பெற்றோர்கள் தங்களால் சாதிக்க முடியாததை தங்களது பிள்ளைகள் மூலம் சாதிக்க முயற்சிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு விருப்பமான துறைகளில் இலக்கினை நிர்ணயிக்காமல் தங்களது ஆசையை இலக்காக நிர்ணயிக்கும்போது குழந்தைகளின் மனதில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இடைவெளி உருவாகி, தான் தனித்து விடப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கருதுவதால் மனநலன் பாதிக்கப்படுகிறது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை மனநல மருத்துவத் துறையினரைக் கொண்டு பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் காணும் வகையிலும், அவர்களுக்கு கலந்தாய்வினை ஆசிரியர்களே மேற்கொள்ளும் வகையிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இப்பணியில் மனப்பூர்வமாக ஈடுபட்டு செயல்படும்போது சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் இது ஒரு வழிகாட்டியாக இருக்கும்''  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments