முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கிளிஞ்சான்

அதிக தேவையுள்ள அலங்கார மீன் இனம். உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டுமே 20 வகைகள் இருக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்,கீழக்கரை,ஏர்வாடி

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:23 PM
பகிர்:

அதிக தேவையுள்ள அலங்கார மீன் இனம். உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டுமே 20 வகைகள் இருக்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்,கீழக்கரை,ஏர்வாடி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாக காணப்படுகின்றன.

பவளப் பாறைகளில் உள்ள குழிகளில் மட்டுமே ஜாலியாக சுற்றித் திரியும் இந்த அரிய ஜீவன்கள் பவளப்பாறைகளில் ஒட்டியுள்ள பாசிகளை சுரண்டி தின்று அவற்றைச் சுத்தமாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்கிறது. இதன் உணவு வகைகளும்,சிறப்புகளும் மிகவும் வியப்பூட்டும் வகையில் இருப்பதாக தெரிவிக்கிறார் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையின் இயக்குநர் அ.முருகன். 

""கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள் மிகவும் பளபளப்பாக இருந்தால் அங்கே கிளிஞ்சான்கள் அதிகம் இருப்பதாக அறிந்து கொள்ளலாம். பெரிய மீன்கள் சாப்பிடும்போது தவறி விழும் துகள்கள், சின்னஞ்சிறு சிப்பிகள், சங்குகள், நண்டுகள், இறால் குஞ்சுகள் இப்படியாக இவற்றின் உணவுப் பட்டியல் நீள்கிறது. மற்ற மீன்களின் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளையும் தின்று அந்த மீனின் உடலையும் பளபளப்பாக ஆக்கி விடும். பிற மீன்கள் மற்றும் பவளப் பாறைகளில் உள்ள அசுத்தங்களைத் தின்பதால் இந்த இனத்தை வேறு எந்த மீனும் சாப்பிடுவதில்லை. கூர்மையான பற்களால் பவளப் பாறைகளை சுரண்டி தின்பதால் உதடுகள்,செதில்களும் சிறிது பெரிதாக இருக்கின்றன.

Advertisement

மற்ற மீன்களின் உடலையும் சுத்தமாக்குவதால் இந்த மீன்களை மீன் பண்ணைகளில் வளர்க்க அதன் உரிமையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்தக் காரணத்தாலும் இம்மீனின் விலை அதிகமாகி விட்டது. தொடர்ந்து 30 வருடங்கள் வரை உயிர்வாழும் இந்த உயிரினம் லட்சக் கணக்கில் முட்டையிட்டு பல்கிப் பெருகினாலும் இளம் பருவத்திலேயே இதனை அதிகமாகப் பிடிப்பதால் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.

ஆண் இனத்தில் வால் சிறிது பெரிதாக இருப்பதை வைத்தே இது ஆணா,பெண்ணா என்று அறிய முடியும். ஒரு ஆண் மீன் எப்போதும் பல பெண் மீன்களைத் துணைக்கு வைத்துக் கொள்ளும். ஆனால் காதலித்து ஜோடி சேர்ந்துவிட்டால் ஆயுள் வரை அதே ஜோடிதான் துணையாக இருக்கும். பவளப் பாறைகளில்கூட ஜோடியாகத்தான் ஜாலியாக பவனி வருவார்கள்.

ஆண் இனம் பெண் மீன் சுரக்கும் பெரோமோன் எனும் திரவப் பொருளை வைத்தே இது தனது ஆள்தான் என்று கண்டு பிடித்துக் கொண்டு காதல் நடை போடுகின்றன. மற்றவர்கள் பார்க்கிறார்களே என்றுகூட கொஞ்சமும் கவலைப்படாமல் பவளப் பாறைகளில் எந்த நேரமும் ஜோடியாகவே ஜாலியாக வீதியுலா வரும் இந்த மீன் இனத்தில் ஆண் இறந்து விட்டால் அடுத்த நிமிடமே பெண் மீன் ஆணாக மாறிவிடும் அற்புதச் சிறப்புடைய அழகிய ஜீவன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.