பெண்கள்தான் ஹீரோக்கள்!
சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட பெரியதிரையின் பிரபல நாயகியான கஸ்தூரியை அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக் கூடத்தில் சந்தி
சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் மீண்டும் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்ட பெரியதிரையின் பிரபல நாயகியான கஸ்தூரியை அந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்புக் கூடத்தில் சந்தித்தோம். அங்கே இருந்த பரபரப்பின் ஊடே நம்முடைய
கேள்விகளுக்குச் சுடச்சுட பதிலளித்தார்.
பெரியதிரையில் வாய்ப்புகள் இருக்கும்பொழுது எப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வந்தீர்கள்?
சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் அதை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. வெளிநாட்டில் இருக்கும் என் குடும்பத்தினர்கள் அனைவரும் பார்த்து மகிழ்கிறார்கள்.
சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அது பட்டி தொட்டி எல்லாம் பரவிவிடும். இந்த மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் தொகுப்பாளினியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து ஒத்துக்கொண்டேன்.
நான் எதிர்பார்த்தது போலவே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியின் மூலம். வெகு நாட்களுக்கு பிறகு என் முகம் ஒரு சில நிமிடமே டிவியில் வந்து போனாலும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எத்தனை பேர் எனக்கு போன் செய்து மறுபடியும் எப்போது சினிமாவிற்கு வந்தீர்கள்.
சின்னத்திரையில் உங்களைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று சொன்னார்கள். சின்னத்திரையின் வளர்ச்சியைக் கண்டு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.
ஏன் டி.வி. சீரியலில்களில் நடிப்பதில்லை?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடருக்கு நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அப்படியில்லாமல் வேறு டிவி சேனலாக இருந்தால் அதுவும் உலகமெங்கும் தெரியக்கூடிய டிவியாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நானே மாதத்தில் பாதிநாள் ஜெர்மனியில்தான் இருக்கிறேன்.
அந்த நேரங்களில் நான் நடித்ததைப் பார்க்க எனக்கே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால்தான். அது குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகளில்தான் சாத்தியம். அந்த மாதிரி முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகளில் கண்டிப்பாக நடிப்பேன்.
தெலுங்கு, மலையாளம் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் இருந்து நடிக்க கேட்கிறார்கள். இப்போது சினிமா வாய்ப்புகள் நிறைய வந்து கொண்டு இருப்பதால் நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சின்னத்திரையைப் பொருத்தவரை எனக்கு ரோல் மாடலாக ரம்யா கிருஷ்ணனைத்தான் நினைக்கிறேன். அவர்கள் இரண்டு துறையிலும் கலக்குகிறார்கள். அது போல செய்ய முடிந்தால் கண்டிப்பாகச் செய்வேன்.
பெரிய திரை நடிகைகள் நிறைய பேர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
சின்னத்திரைதானே என்று சொல்லி ஒதுக்கிய காலம் எல்லாம் எப்போதோ மலையேறிவிட்டது. ஒருமுறை இயக்குநர் வாசு சொன்னார். "முன்பெல்லாம் தியேட்டரில் சினிமாவைத் தேடிப் போய் பார்ப்பார்கள். ஆனால் இப்போது சினிமா வீட்டுக்கே தேடி வருகிறது.
அதைப் பார்க்கக்கூட மக்கள் விரும்புவது இல்லை. தொடர்கள், கிரிக்கெட் என்று உலகத்தில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சின்னத்திரையா,பெரியதிரையா என்ற பேச்சுக்கே இடமில்லை.
அப்படிபார்த்தால், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ரியாஸ்கான் போன்றவர்கள் எல்லாம் சின்னத்திரையில் இருந்து போய்தான் பெரியதிரையில் கலக்கிகிட்டு இருக்காங்க. அவ்வளவு ஏன் டான்ஸ் மாஸ்டர் முதல் கொண்டு தொலைக்காட்சியில் இருந்து பெரியத்திரைக்குப் போகிறார்கள்.
அது அவரவர் மனதைப் பொருத்தது. எங்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அங்கு வேலை செய்கிறார்கள்' என்றார். இதுதான் என் கருத்தும்.
சின்னத்திரை, பெரியதிரை இரண்டிலும் ஒரே நேரத்தில் நல்ல லீடிங் ரோல் வந்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
இன்றைய சூழ்நிலையில் நான் கேரக்டர் ரோலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதே போல டான்ஸ் என்றாலும் ஒ.கே. கலக்கலா ஆறு நிமிடம் வந்தாலும் அந்த ஆறு நிமிடத்தில் ஸ்கோர் செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
பெரியதிரையைப் பொருத்தவரை படம் முழுக்க ஹீரோயினாக நடித்தாலும் நல்ல கதை அமையவில்லை என்றால் ஸ்கோர் செய்வது ரொம்ப கஷ்டம். சின்னத் திரையில் அப்படியில்லை.
பெண்கள்தான் ஒவ்வொரு கதையிலும் ஹீரோ. தினமும் ஒவ்வொருவருடைய வீட்டிற்கே சென்று அவர்களோட வீட்டில் ஒருவராக வாழ்கிறார்கள் சின்னத்திரை ஹீரோயின்கள்.
சன் குடும்ப நிகழ்ச்சிக்கானத் தேர்வு வேலைகள் செய்து கொண்டு இருக்கும்போதுதான் தெரிந்தது சின்னத்திரை நடிகைகளுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் இருக்கிறது என்று. எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. "திருமதி செல்வம்' என்ற தொடரில் நடித்த அபிதாவுக்குச் சினிமாவில் கிடைக்காத வெற்றியை சின்னத்திரை கொடுத்திருக்கிறது.
அவருக்கு இனி பெரியதிரை பக்கம் போகவேண்டும் என்கிற எண்ணம் கூட வருமா என்று தெரியவில்லை. அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?
சின்னத்திரை வளர்ச்சியினால் பெரியதிரை பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்களே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்கள் வந்த போது கூத்து கொஞ்சம் நசுங்கி போனது. அடுத்து சினிமா வந்த போது நாடகங்கள் நலிந்து போனது. இப்போது டிவி வந்தபோது சினிமா கொஞ்சம் நலிந்து தான் போனது.
இந்த மாதிரி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப வளர்ச்சி மாறிக்கிட்டே இருக்கிறது. எத்தனையோ மேடை நாடக கலைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டவர்கள் இன்று டிவி வந்த பிறகு ரொம்ப பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்கள் தான். அந்த வகையில் சின்னத்திரை ஒரு முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்கள். உங்கள் கணவரோட ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?
என் கணவர் டாக்டர் குமார். அவருக்கு நான் நடிப்பதைப் பற்றி எந்தவித ஆட்சேபனையும் இல்லை. நான் நடிப்பதை ரொம்ப விரும்பிப் பார்ப்பார். அதற்காக எல்லா விதத்திலும் சப்போர்ட் செய்வார். ஆனால் நடிப்பதற்காக அவரைப் பிரிந்திருப்பதில்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம்.