ஞாயிறு கொண்டாட்டம்

இலக்கியம், விளையாட்டான விஷயம் இல்லை!

காமன்வெல்த் என்றாலே, மைதானம் உள்ளிட்டவை அமைப்பதில் முறைகேடு, போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களைக் குவித்தது என்பதே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு காமன்வெல்த் நாடு

ஜெயப்பாண்டி

காமன்வெல்த் என்றாலே, மைதானம் உள்ளிட்டவை அமைப்பதில் முறைகேடு, போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களைக் குவித்தது என்பதே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு காமன்வெல்த் நாடுகளின் இலக்கிய விவாதக் கூட்டம் நடந்தது பலருக்கும் தெரியாத சங்கதி.

இந்த இலக்கியக் கூட்டத்திற்குத் தமிழகத்திலிருந்து 3 பேர் தேர்வு செய்யப்பட்டு புதுதில்லிக்கு சென்றுவந்துள்ளனர். அவர்களில் மதுரை முற்போக்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன், கவிஞர்கள்  வெண்ணிலா, சக்திஜோதி ஆகியோர் இடம்பெற்றனர்.

இவர்களில், மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் "காவல்கோட்டம்' நாவலை எழுதி, நவீன இலக்கிய ஓட்டத்தில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சு.வெங்கடேசனைச் சந்தித்து பேசினோம்.

காமன்வெல்த் இலக்கிய நிகழ்ச்சி பற்றிக் கூறுங்களேன்?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு மத்திய சாகித்ய அகாதெமி சார்பில், "காமன்வெல்த்தில் வரலாற்று மரபுரிமையும் எழுத்தும்' எனும் பொருளில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா,சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 25 நாட்டு இலக்கியவாதிகள் இதில் பங்கேற்றனர். நமது நாட்டில் இருந்து 25 உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு இலக்கியம் குறித்து பேசினர்.

சாகித்ய அகாதெமி அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. மூன்று நாள் நடந்த இலக்கிய கருத்தரங்கில் ஆங்கில எழுத்தாளர் படைப்புகளையே பிரதானமாக எடுத்து விவாதித்தனர். ஆனால், அந்தந்த வட்டார மொழிகளில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை என்பதால் அவர்களது படைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இங்கிலாந்தில் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதுகிற எழுத்தாளர்களை வைத்தே இந்திய இலக்கியத்தையும், பண்பாட்டையும் பார்க்கிற போக்கும் மதிப்பீடு செய்யும் நிலையும் உள்ளது. பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 53 நாடுகளின் கூட்டமைப்புதான் காமன்வெல்த். அதைப் பிரதிபலிப்பதாக இந்தக் கூட்டம் இருந்துவிடக்கூடாது என்று விழாவைத் துவக்கி வைத்த கிரிஷ்கர்னாட் கூறினார்.

அதைப் பிரதிபலிப்பதாகவே விழா அமைந்துவிட்டது. ஆங்கில மொழியானது பிற பிராந்திய மொழியையும், அவற்றின் வளர்ச்சியையும் பாதிப்பதாகவே கொள்ளலாம். இந்தப் போக்கு காமன்வெல்த் கருத்தரங்கிலும் எதிரொலித்ததைக் காணமுடிந்தது. காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா சாதித்திருக்கலாம். காமன்வெல்த் இலக்கிய நிகழ்ச்சியில் சோபிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

கருத்தரங்கில் தமிழ் இலக்கியப் பார்வை எப்படி அமைந்தது?கடந்த 1970}ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் எழுதப்பட்ட இலக்கியம் குறித்த பரிச்சயம், இக்கருத்தரங்கில் பங்கேற்று தமிழ் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இல்லை என்பதையே அறியமுடிந்தது. ஆக கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியம் குறித்தே அதில் கட்டுரை வாசித்தவர்கள் பேசினர்.



தமிழில் எத்தகைய இலக்கியம் குறித்து பேசினார்கள்? மற்ற மொழி இலக்கியவாதிகள் நிலை எவ்வாறு இருந்தது?

எழுத்தாளர்களே அடையாளம் காணமுடியாத படைப்பாளர்கள் குறித்தே கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. மற்ற மாநிலத்தவர்கள் பாரதியையும் சுட்டிக்காட்டிப் பேசியதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் தமது மாநில இலக்கிய வளர்ச்சியையும் அவர்கள் தற்கால நிலை வரையில் பேசியதை ஊகிக்க முடிந்தது. மொத்ததில் காமன்வெல்த் இலக்கியக் கருத்தரங்கமானது ஆங்கில எழுத்தாளர் குறித்த மதிப்பீடுகளையும் உரையாடல்களையும் மட்டுமே

நிகழ்த்தியது.



வாசிக்கும் சமூகத்தை மீண்டும் மீட்டெடுப்பது எப்படி என்பதை இலக்கிய வட்டாரம் சிந்திக்கிறதா?

நவீன இலக்கிய வாசிப்பு என்பது கடந்த காலத்தை ஒப்பிடுகையில் அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. நல்ல நாவல்கள் அதிகம் விற்கப்படுகின்றன. புத்தகக் கண்காட்சிகள் அதிகம் நடத்தப்படுகின்றன. ஆனால், அரசு நூலகங்கள் நிலையை நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது. ஆண்டுக்கு ரூ. 130 கோடி நூலக வரியாக பொதுமக்களிடம் வசூலிக்கும் அரசு, ஆண்டுதோறும் நூல்கள் வாங்க ரூ.10 கோடிதானே ஒதுக்கீடு செய்கிறது! கிராமப்புற நூலகங்கள் நூலாம்படை (சிலந்திவலை) அடைந்ததாகவே இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT