பாயகரமான வளைவுகள், திடீர்த் திருப்பங்கள், காட்டாறுகள், தேயிலைத் தோட்டங்கள், பசுமைப் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைப் புழுதி பறக்கக் கடந்து செல்கின்றன கார்கள். ஆங்கிலப்படத்தில் வரும் கார் சேஸிங் காட்சிகளை நம் கண்முன் கொண்டுவரும் இந்த நிஜக் காட்சியை நாம் பார்த்தது, உதகையில் நடந்த கார் பந்தயத்தில்! உதகையிலாவது, கார் பந்தயமாவது? இதென்ன கலாட்டா? என்பவர்களுக்குத்தான் இந்த செய்தி.
இந்தியாவின் முன்னணி கார் பந்தயங்களுள் ஒன்றான, "மஹிந்திரா எஸ்கேப் கார் பந்தயம்' தமிழகத்தில் முதன்முறையாக உதகையில் நடந்தது. பெயருக்கு போட்டி என்று நடத்தினார்களே தவிர, பங்கேற்றவர்கள் அனைவருக்குமே ஊக்கப்பரிசுகளை வழங்கினர்.
இந்தியாவில் முன்னணி கார் பந்தய நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தப் பந்தயம் இதற்கு முன்னர் கேரளத்தில் மூணாறு, கர்நாடகத்தில் கூர்க், மும்பை, கோவா, சிக்மகளூர் மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 60 வாகனங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற வாகனங்கள் 50 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு சவால் நிறைந்த பாதைகளில் சீறிப்பாய்ந்து சென்றன. அபாயகரமான வளைவுகள், திடீர்த் திருப்பங்கள், காட்டாறுகள், தேயிலைத் தோட்டங்கள், பசுமைப் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை கடந்து "டெர்பி கிரீன்' என்ற இடத்துக்கு வந்தடைந்தன. இந்தப் போட்டியில் 4ல4 டிரைவிங்கைப் பிரபலப்படுத்தவும் மண் சாலை, மலைப்பாங்கான இடம் முதலான பகுதிகளில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு சில நுட்பங்களைத் கற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை ஜே டயர், பாஷ் மற்றும் சர்வோ லூப்ரிகண்டஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்தின. வாகனங்கள் தடங்கலின்றி செல்வதற்கான வழி முன்னரே தேர்வு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்ச்சியும் தடங்கலின்றி நடைபெற ஒரு சர்வீஸ் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கடந்த 1996ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ஒருநாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு பரவலாக கிடைத்த வரவேற்பையடுத்து பிரமிப்பூட்டும் வார இறுதி நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. வாகனங்கள் செல்லும் வழி சவால்கள் நிறைந்ததாக தேர்வு செய்யப்பட்டாலும், பாதுகாப்பு அம்சத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. உதவி தேவைப்படுவோருக்கு வழியெங்கும் பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், கரடுமுரடான பகுதிகளில் செல்வோருக்கு உதவியாக நிபுணர்களும் வழிகாட்டிகளும் உதவினர்.
""உதகையில் முதன்முறையாக இந்நிகழ்ச்சியை நடத்துவது பெரும் மகிழ்ச்சி. கண்ணுக்கு குளிர்ச்சியான பகுதிகளிலும், கரடுமுரடான இடங்களிலும், பல்வேறு சிக்கலான பகுதிகளிலும் எங்களுடைய வாகனங்கள் எப்படிப்பட்ட உறுதியான ஆற்றலுடன் செயல்படுகின்றன என்பதை வாடிக்கையாளர்கள் நேரடியாக அறிந்துகொள்ள இதுவொரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்நிகழ்ச்சி ஏற்படுத்திய பரபரப்பை அனைவரிடத்திலும் காணமுடிந்தது. டிவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருந்தது. இதற்கு கிடைத்த அமோக வரவேற்பு உதகையில் மீண்டும் மற்றுமொரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது'' என்று மகேந்திரா நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.