முள்ளம் பன்றி போன்ற தோற்றத்தில் இருக்கும், ஆனால் இது முள்ளம்பன்றி இல்லை. மன்னார் வளைகுடா கடலில் வாழும் விநோத உயிரினங்கள் பலவற்றில் கடல் முட்தோலியும் ஓர் அரியவகை உயிரினம். உருண்டையான உடலமைப்புடைய இதன் உடலைச் சுற்றிலும் முட்கள் இருக்கும். இந்த கடல் முட்தோலிகளின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது...
உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்ற இந்த உயிரினத்தின் விலங்கியல் பெயர் ஈக்கினாய்டியா என்பதாகும். ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் இதன் வகைகள் மாறுபட்டு இருந்தாலும் இதன் உடலானது 5 சமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கடல் அட்டைகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களின் குடும்ப வகையைச் சேர்ந்த நெருங்கிய உறவுமுறை எனலாம். இதன் அடிப்பகுதியில் உள்ள குழாய்க் கால்கள் மூலம் மெதுவாக நகர்ந்து கடலின் அடிப்பகுதிகளிலும், பாறைகளின் உள்புறத்திலும் ஒட்டி உயிர் வாழ்கின்றன. பாறைகளில் ஒட்டிக் கொள்ள வசதியாக இதன் அடிப்பகுதி தட்டையாகவும், மற்ற இடங்களில் ஒட்டுவதற்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது. இக்குழாய்க் கால்கள் மூலம் அது மணலில் குழிதோண்டி உள்ளே போகவும் முடியும். குழாய்க் கால்களில் 24 மணி நேரமும் கடல் நீர் உள்ளே போவதும், வருவதுமாக இருந்து கொண்டேயிருக்கும். இதன் உதவியால்தான் கடல் முட்தோலிகள் நகர முடிகிறது.
உடலின் மேற்புறத்தில் கூம்பு வடிவில் இருக்கும் பல குச்சி முள்களை எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நேரமும் அசைத்துக் கொண்டேயிருக்கும். இந்த முள்கள் மனிதரைக் குத்தினால் பல மணி நேரம் வரை வலி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் உயிருக்கு பாதிப்பு வராது.
பரமசாதுவான பிராணியாக இருந்தாலும் கடலுக்குள் ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் இதன் முள்கள் குத்திவிடாமல் கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும். அதே நேரத்தில் மனிதர்களை விரட்டி வந்து குத்துவதும் இல்லை. ஆனால் டையாடியா என்ற வகை மட்டும் கொடிய விஷம் உடையது எனத் தெரிய வந்துள்ளது.
உடலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வாய்ப்பகுதியைச் சுற்றி நுண்ணிய எலும்புத்துண்டுகள் இருப்பதால் கடினமான கடல் செடிகளையும் பிடுங்கித் தின்பதற்கு வசதியாக உள்ளது. இந்த உயிரினத்தின் உள்புறத்தில் உள்ள இனப்பெருக்க உறுப்புக்களை வைத்தே இவை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்து கொள்ள முடியும். மற்றபடி இவை இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பெண் முதிர்ச்சியடைந்தவுடன் முட்டைகளைத் தண்ணீரில் விட்டுவிட, ஆண் அதன் விந்தை முட்டைகள் மீது செலுத்தி கருவுறுதல் நடந்து லார்வாக் குஞ்சுகளாக மாறுகின்றன.
உயிரியல் ஆராய்ச்சிகள் பலவற்றுக்கு கடல் முட்தோலி ஒரு மாதிரி உயிரியாகவும் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக, கரு உருவாதல் ஆராய்ச்சிக்கும் ஸ்பெர்ம் செல் ஆராய்ச்சிக்கும் பேருதவியாக
உள்ளது.
உடல் முழுவதும் உள்ள நரம்புகள் மூலம் கடல்நீர் உட்புகுந்து உள்ளே செல்கிறது. இதன் மூலமாகத்தான் சுவாசமும், கழிவு நீக்கமும் நடைபெறுகின்றன. கடல் தாவரங்களை மட்டுமே இவை விரும்பிச் சாப்பிடும். கடல் நாய்கள், விலாங்கு மீன்கள், துப்பாக்கி மீன்கள் போன்றவை கடல் முட்தோலிகளையும் தின்றுதான் உயிர் வாழ்கின்றன.
உடலில் உள்ள முள்களை மட்டும் அகற்றி விட்டு இதன் உருண்டையாக உள்ள பகுதியை மட்டும் எடுத்து சமைத்து சாப்பிடுவது ஜப்பானியர்களின் வழக்கம். இந்த உணவுக்கு சஸ்மி, சுஸி என்றும் அவர்கள் பெயர் வைத்துள்ளனர். அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட இரு நாடுகளில் இருந்தும் கடல் முட்தோலிகளை இறக்குமதி செய்தும் சுவைமிக்க உணவாக்கி, ஜப்பானில் நட்சத்திர ஹோட்டல்களில் விற்பனை செய்கின்றனர்.
இந்த உயிரினத்தின் உடலில் உள்ள அற்புத காந்த சக்தியை ப் பற்றிய ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. தொடுதல், வெளிச்சம், வேதியியல் அமிலங்கள் உடலில் படுவதை உடனே உணர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு காந்த சக்தியே பெரிதும் உதவியாக இருக்கிறது. கண்களே இல்லாமல் கடலுக்கடியில் வசிக்கும் ஓர் அபூர்வ ஜீவன் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.