அமெரிக்க நாட்டில் உள்ள மாநிலங்களில் கனடா நாட்டு எல்லைக்கு அருகே அமைந்துள்ளது மினசோட்டா மாநிலம். சென்ற ஆண்டு இம்மாநிலத்தைக் கண்டு மகிழ்வதற்கான வாய்ப்பு அங்கு பணிபுரிந்துவரும் எனது மகன் - மருமகளால் கிடைத்தது. இம்மாநிலம் அதிக அளவில் ஏரிகள் உள்ள பகுதி ஆகும்.
தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை ஏரிகள்-குளங்கள் அதிகம் உள்ளதால் "ஏரி மாவட்டங்கள்' எனக் குறிப்பிடுவர். அது போன்று மினசோட்டா, ஏரி மாநிலமாகத் திகழ்கிறது.
"மிசிசிபி' நதி பாய்ந்து வளப்படுத்தும் இம்மாநிலத்தில் இந்தியக் குடிமக்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். ஊசியிலை மரம் போன்று விளங்கும் (நம்மூர் சவுக்கு மரம் போல்) "ரெட்பைன்' இம்மாநில மரமாக விளங்குகிறது.
இங்கு ஏரிகள் அதிகம் உள்ளதால் மாநிலப் பறவையாக கருநிறமுடைய வாத்து விளங்குகிறது. இதனை common loon எனக் கூறுகின்றனர். இதற்கு தீங்கு ஏதும் செய்யக் கூடாது. அது கூட்டமாக சாலையைக் கடக்கும்போது, கார்களை ஓட்டுபவர்கள் நிறுத்திவிடுவதைப் பார்க்கலாம். செல்லும் வழியெல்லாம் பசுமையான புல்வெளிகள், மரங்கள் சூழ்ந்த ஏரிகளைக் காணலாம். இதில் படகுகள் பாய்ந்து செல்கின்றன. பொழுதுபோக்காக மீன் பிடிக்கின்றனர். அமெரிக்க மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விசைப்படகு இல்லாமல் இருக்காது.
இம்மாநிலத்தின் தலைநகரம் மினியாபொலிஸ் என்பதாகும். இதனை அடுத்துள்ளது செயின்ட் பால் என்னும் பகுதி. இதனை இரட்டை நகரங்கள் என அழைக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ளது போலவே (ஹைதராபாத் - செகந்தராபாத்) இங்கும் இரண்டு நகர் பகுதிகள் அருகருகே அமைந்துள்ளன.
இங்குள்ள மினசோட்டா பல்கலைக் கழகம் மிகப் பெரியது. அழகிய இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள ஏரிகளின் அருகே அமைந்துள்ள பூங்காக்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. பூங்காக்களைப் பராமரிக்க தனித்துறை நிர்வாகமே உள்ளது.
மினசோட்டா பல்கலைக் கழகத்தின் வளாகத்தில் உள்ள கோமா பார்க்கில் பல வண்ணப் பூச்செடிகளையும், அரிய தாவரங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. செயின்ட் பால் நகரில் ஓடும் "மிசிசிபி' ஆற்றின் கரையில், அறிவியல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் கற்காலத்திலிருந்து தற்காலம் வரை அறிவியல் எவ்வாறு முன்னேறியுள்ளது என்பதைக் காட்சியாக அமைத்துள்ள முறை சிறப்பானது.
சிறிய குழந்தைகள்- மாணவர்கள் அறிவியலை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் செயல் முறை விளக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் செயல்முறையை செய்து பார்க்கலாம்.
நாங்கள் சென்றிருந்த போது, மத்திய தரைக்கடல் பகுதியில் கிடைத்த, dead sea scrolls பற்றிய சிறப்புக் கண்காட்சி நடைபெற்றது. இது கிறிஸ்துவர்களின் பைபிள் 2000 ஆண்டுகளுக்கு முன் சுவடியில் எழுதப்பட்டதாகும். கும்பரான் என்ற இடத்தில் மலை குகையில் 1947}ஆம் ஆண்டு கண்டுபிடித்த சிறந்த தொல்லியல் வரலாற்றுச் சான்றாகும். தொல்லியல் துறையில் பணியாற்றிய நான் மிக ஆர்வத்துடன் அதனைப் பார்த்து மகிழ்ந்தேன். இங்குள்ள மின்னேஹஹா பார்க்கில் (minnehaha) சிறிய நீர்வீழ்ச்சியைக் கண்டு மகிழலாம். இந்தப் பூங்காவைச் சுற்றி வர சைக்கிள் ரிக்ஷா போன்ற வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நாமே சுற்றி வரலாம். அரிய அனுபவம்! சுவையானதும்கூட. மகிழலாம்.
மினியா பொலிஸ் நகரின் மற்றொரு பகுதியான புளுமிங்டன் என்னும் பகுதியில் "மால் ஆஃப் அமெரிக்கா'(mall of america) என்ற அங்காடி உள்ளது. இதில் 520 கடைகள், 50 சிற்றுண்டிச் சாலைகள் உள்ளன. இங்கு 1000}க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த வசதி உண்டு. இந்த அங்காடி அமெரிக்க நாட்டிலேயே மிகவும் பெரியது என்ற பெருமை உடையது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் பொழுதுபோக்க பல அம்சங்கள் உள்ளன.
மினசோட்டா மாநிலத்தின் வட பகுதியில் கனடா நாட்டு எல்லையில் "லேக் சுப்பீரியர்' என்ற மிகப் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதனை "ஏரி' என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் கடல் போன்று மிகவும் ஆழமானது. மிகப்பெரிய கப்பல்கள் இதில் சென்று வருகின்றன.
இங்குள்ள டுலுத் என்ற இடத்தில் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு முன்பு பயன்பாட்டில் இருந்த கலங்கரை விளக்கத்தையும், அங்கு பணியாற்றிய அதிகாரி இருந்த வீட்டையும் தொன்மை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.
இம்மாநிலத்தில் உள்ள ஏரிகள் அனைத்தும் குளிர் காலத்தில் முழுதும் ஐஸ் கட்டியாகிவிடும். ஏரியிலேயே காரில் செல்வார்களாம். மினியா பொலிஸ் நகரில் இந்திய உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் உள்ளன. அதுபோன்று இந்திய உணவு சாப்பிட சிற்றுண்டி சாலைகளும் உள்ளன.
இந்நகரில் மேப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து கோயில் உள்ளது. இக்கோயிலில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. விழாக்கள் - பண்டிகைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. யோகா வகுப்புகளும் நடைபெறுகின்றன. இதில் அமெரிக்கர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். மேலும் golden valley என்ற இடத்தில் வெங்கடேசுவரர் திருக்கோயிலும் உள்ளது. ஆன்மிகப் பணிகளுடன் சிறப்பாக மக்கள் சேவையும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் இம்மாநிலத்தில் "மினசோட்டா தமிழ்ச்சங்கம்' என்ற அமைப்பு உள்ளது. இதில் ஆண்டுதோறும் "முத்தமிழ்விழா' நடத்துகின்றனர். "சிலம்பம்' பயிற்சி முகாமும் நடைபெறுகிறது. மினசோட்டா தமிழ்ச்சங்கப் பள்ளிக்கூடமும் நடைபெற்று வருகிறது. இதில் திருக்குறள்,ஆத்திச்சூடி, தமிழ்ப்பேச்சு, இலக்கணம் போன்றவற்றை கற்றுத் தருகின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் பணியினைத் தமிழ்ச்சங்கம் சிறப்பாகச் செய்து வருகிறது.
நான் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவனானதால் மின சோட்டா சென்றிருந்த பொழுது நடைபெற்ற முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பண்டைய தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி, தமிழகத் திருக்கோயில்களின் வரலாற்றுச் சிறப்பு - கலைச் சிறப்பு பற்றிய படங்களுடன் சொற்பொழிவு ஆற்ற வாய்ப்பு கிடைத்தது. விழாவிற்கு வந்த 300}க்கும் மேற்பட்ட தமிழ் அன்பர்கள் மகிழ்ந்து பாராட்டியதை என்னால் மறக்க இயலாது. ஏரிகள் நிறைந்த மினசோட்டா மாநிலம் அமெரிக்கா நாட்டில் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.