தங்கள் வரவு நல்வரவாகுக!
திருமணங்களுக்குச் செல்லும் போது இதை நீங்கள் பார்த்திருக்கலாம். மண்டபத்தில் நுழைவாயிலில் ஒரு மேசை அதில் ஒரு தட்டில் வெற்றிலை- பாக்கு பழம், கல்கண்டு, சந்தனம், குங்குமம், இவற்றை எடுத்துக் கொடுக்கவும் பன்
திருமணங்களுக்குச் செல்லும் போது இதை நீங்கள் பார்த்திருக்கலாம். மண்டபத்தில் நுழைவாயிலில் ஒரு மேசை அதில் ஒரு தட்டில் வெற்றிலை- பாக்கு பழம், கல்கண்டு, சந்தனம், குங்குமம், இவற்றை எடுத்துக் கொடுக்கவும் பன்னீர் தெளிக்க நான்கைந்து இளம் பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு மங்கலகரமாக முகத்தில் புன்னகையுடன் நிற்பார்கள். குடும்ப விழாக்களில் இப்படியான வரவேற்பு பெண்மணிகளுக்கு குறைவு இருக்காது. கார்பரேட் விழாக்களுக்கு..? அரசு நடத்தும் விழாக்களுக்கு..?
இருக்கவே இருக்கிறார்கள் "வெல்கம் கேர்ள்ஸ்'. மிடுக்காய் உடையணிந்து உதட்டில் சிவப்புச்சாயம் பூசி, கொஞ்சம் மஸ்காரா, ஐலைனர், என தங்களுக்கே உரித்தான அம்சமான அலங்காரத்துடன் ஜொலித்தபடி விழா அரங்கின் நுழைவாயிலை அலங்கரிப்பர்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். விழா நாயகர் அருகில் நின்றபடி ரிப்பன் வெட்ட கத்திரிக்கோல் கொடுக்கவும், குத்துவிளக்கேற்ற மெழுகுவர்த்தி நீட்டவும், பொன்னாடை போர்த்தும்போது- நினைவுப் பரிசு வழங்கும்போது அவற்றை தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து மேடையில் கொடுப்பது போன்றவற்றை செய்வதுதான் இவர்களின் பணி.
வெல்கம் கேர்ள்ஸ் பற்றி கேள்விப் பட்டு அவற்றை நடத்தும் பி.அகிலா (22) மற்றும் எம்.யமுனா (22) இருவரையும் சந்தித்தோம்.
அது என்ன வெல்கம் கேர்ள்ஸ்?
தற்போது கோவை நகரில் மாதம் ஒன்றுக்கு 20 முதல் 30 விழாக்கள். கல்லூரி திறப்பு விழா, மருத்துவûனை திறப்பு, வணிக வளாகங்களில் புதிய விற்பனையகங்கள், கார்ப்ரேட் நிறுவன மாதாந்திர விழாக்கள், திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா என எல்லாவற்றிலும் வரவேற்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதைத்தான் செய்கிறோம். வருபவர்களை வருக... வருக... அல்லது வெல்கம் என்கிறோம். அதைத்தான் "வெல்கம் கேர்ள்ஸ்' என்றாகிவிட்டது.
தம்தம் அலுவலக ஊழியர்களை வரவேற்பு பணியில் ஈடுபடுத்துவதற்கும் உங்களுக்கு உள்ள வித்தியாசம்?
தற்போதுள்ள காலகட்டத்தில் எல்லோரும் விஐபி போல இருக்கத்தான் விரும்புகிறார்கள். மேலும் வரவேற்பவர்கள் அலுவலகத்தில் தங்களுக்கு வேண்டாதவர்கள் என பாரபட்சம் பார்த்து முறையாக வரவேற்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்ளலாம்.
அதே போல் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் திருமணம் அல்லது தங்கள் அலுவலக விழாக்களில் அரங்கிற்குள் அமர்ந்து விழாவை ரசிக்கவே விரும்புவார்கள். மாறாக நுழைவுவாயிலில் நிற்பதைத் தவிர்த்து விடுவார்கள். நுழைவுவாயிலில் நின்று முகமலர்ச்சியுடன் வரவேற்பது என்பது ஒரு கலை. பொதுவாக இளம் பெண்களைத் தான் வரவேற்பில் நிறுத்துவது அந்தக் காலம் முதற்கொண்டு பழக்கத்தில் உள்ள ஒன்று.
இதை எப்போது தொடங்கினீர்கள் எப்படி இந்த எண்ணம் உருவானது?
நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போது ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்வு ஒன்றைப் பார்த்தோம். அதை செய்த எங்கள் நண்பர் மூலமாக அது குறித்த தகவல்களை சேகரித்தோம். அந்த அளவுக்குப் பிரமாண்டமாக செய்ய முதலீடு தேவை என்பதால் இப்படி ஒரு திட்டத்தை ஆரம்பித்தோம்.
அதனால் எங்கள் கல்லூரி, மற்ற கல்லூரிகளில் எங்கள் தெரிந்த நண்பர்களிடம் இது பற்றி பேசினோம். எல்லோரும் சரி என்று சொல்ல 2007ஆம் ஆண்டு கல்லூரி விடுமுறை நாட்கள் அல்லது கல்லூரி முடிந்து மாலை நேர விழாக்களில் எங்கள் பணியைத் தொடங்கினோம். எங்கள் படிப்புச் செலவை நாங்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்குச் சம்பாதித்தோம்.
தற்போது இதுவே முழு நேர பணியாகச் செய்கிறோம்.
எங்கு விழாக்கள் நடக்கின்றன என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள்?
நகரில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்கள் வணிக வளாகங்கள், மருத்துவமனை போன்றவற்றைப் பார்த்துக்கொள்வோம் சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்தித்து, விழாக்களை புக் செய்வோம். புதிய மால்களில் மேலாளரைச் சந்தித்து புதிய கடைகள் திறக்கும் விபரங்களைப் பெறுவோம். மேலும் நாங்கள் செல்லும் விழாக்களுக்கு வரும் மற்ற விஐபிக்களின் பிஏக்களிடம் எங்கள் விசிட்டிங் கார்டுகளை கொடுப்போம். நகரில் உள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களிடம் பேசி அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து ஆர்டர்களைப் பெறுவோம்.
எத்தனை பேர் உங்கள் குழுவில் உள்ளீர்கள்? விழாக்களுக்கு எந்த மாதிரி உடை அணிவீர்கள்?
குழு என்று எதுவும் கிடையாது. இரண்டு பேரில் ஆரம்பித்து 20 பேர் வரைகூட விழாக்களில் பங்கேற்போம். இரண்டு பேர் போதும் எனும் பட்சத்தில் நாங்கள் இருவரும் செல்வோம். கூடுதலாக நபர்கள் செல்ல வேண்டிய நிலையில் எங்கள் நண்பர்களைச் செல்போனில் தொடர்பு கொள்வோம். ஓய்வு நேரத்தில் இருப்பவர்கள் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். புதுமனை புகுவிழா, திருமணங்கள், போன்றவற்றிற்க்குப் பட்டுப்புடவை, அல்லது ஃபேன்ஸி சாரி அணிவோம். கார்ப்ரேட் விழாக்களுக்கு பிளேசர், ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிவோம். எல்லாமே ஆர்டர் புக் செய்பவர்களின் விருப்பம்தான்.
இதற்காக எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள்?
திருமண வரவேற்பில் நபர் ஒன்றுக்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் நின்று வரவேற்க ரூ. ஆயிரம் முதல் 2ஆயிரம் வரை. அதே போல் ரிசப்ஷன், பிறந்த நாள் விழாக்களில் அருகில் நின்று கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கிவைப்போம் அதற்கு 750 முதல் ஆயிரம் வரை.
அதே போல் நிறுவனங்களின் மாதாந்திர விழாக்களில் சிறு விளையாட்டுப் போட்டி போன்றவற்றை நடத்த 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பெறுவோம். ஒரு மாதம் நடக்கும் பெரிய கண்காட்சிகளில் ஸ்டால்களில் வாடிக்கையாளர்களின் விலாசங்களைப் பதிவு செய்யும் பணி போன்றவைக்கு ரூ.800 வாங்குகிறோம். ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறோம்.
உங்களுடன் ஆண்களும் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்களா?
உண்டு. ஆனால் அவர்களுக்குப் பெரிய வரவேற்பு இல்லை. சில பொருள்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளில் மட்டுமே ஒரு சில இடங்களில் பங்கேற்கின்றனர். காரணம் பெண்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு அவர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதில்லை.
இதைத் தொடங்க எவ்வளவு முதலீடு செய்தீர்கள்?
முதலீடு இல்லை. ஆனால் உழைப்பு உண்டு. 3 மணி நேரம் நின்று இன்முகத்துடன் வேலை பார்த்தால்தான் கையில் காசைப் பார்க்க முடியும். கல்லூரி நாட்களில் பார்ட் டைம் வேலையாக ஆரம்பித்தோம். இப்போது இதுவே ஃபுல் டைம் வேலையாகிவிட்டது.