முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பயங்காட்டும் வள்ளி

சன் தொலைக்காட்சியில் புதியதாகத் துவங்கியிருக்கும் விளையாட்டு நிகழ்ச்சி "தங்கமழை'. இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னதிரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியிருக்கிறார் தேஜேஸ்வினி. தங்கக் காசுகளை வாரி வழங்கும் ப

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:39 PM
பகிர்:

சன் தொலைக்காட்சியில் புதியதாகத் துவங்கியிருக்கும் விளையாட்டு நிகழ்ச்சி "தங்கமழை'. இந்நிகழ்ச்சியின் மூலம் சின்னதிரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியிருக்கிறார் தேஜேஸ்வினி. தங்கக் காசுகளை வாரி வழங்கும் பெண் சாந்தமாகப் பேசும் என்று பார்த்தால் "நான் ரொம்ப அதிரடியான பொண்ணு. எல்லோரையும் அழ வைக்கவேண்டும்'' என்று நீலாம்பரியாகப் பேசுகிறார். யாரை அவர் அழவைக்க ஆசைப்படுகிறார் என்பதைப் படியுங்கள்:

"தங்கமழை' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

மாடலிங் செய்துகொண்டிருந்தேன்.  சரவணா ஸ்டோர்ஸ், லலிதா ஜூவல்லரி போன்ற சில பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்திருக்கிறேன். சன் தொலைக்காட்சியில்  தங்க மழை நிகழ்ச்சி தொடங்குவதாக என் நண்பர் ஒருவர் மூலம் அறிந்து விண்ணப்பித்தேன். தேர்வுக்குப் போனபோது நான் பேசின விதம் அவர்களுக்குப் பிடித்துப் போய்த் தேர்வானேன். மக்கள் மத்தியிலும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

பொது அறிவு கேள்வி பதில்களை எல்லாம் எப்படி, யார் தேர்வு செய்கிறார்கள்?

நடிகை ராதிகாவோட,ராடன் நிறுவனத்தின் நிகழ்ச்சி இது. உலகம் முழுக்க உள்ள தமிழர்களை இந்த நிகழ்ச்சி சென்றடைவதால், நாங்கள் கொடுக்கிற தகவல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவிதம் சரியாக இருக்க வேண்டும் என்பதால், ராடன் நிறுவனத்தின் அசோஸியேட் ஜெ.எஸ்.எஸ் என்பவர் தான் நிறைய புத்தகங்களை ஆராய்ந்து இந்தக் கேள்வி-பதில்களைத் தயார் செய்கிறார். ஒவ்வொரு ரவுண்டுக்கும் யார் வரப் போகிறார்களோ, அவர்களுக்கு தகுந்தாற் போல் தான் கேள்விகளைத் தயார் செய்கிறோம். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே எல்லோரும் பரிசுகள் வாங்க வேண்டும் என்பதுதான். அதனால் குழந்தையிடம் கேள்வி கேட்கிறபோது அவர்களுக்குத் தகுந்தாற்போலும், பெரியவர்களிடம் கேட்கிறபோது அவர்களுக்குத் தகுந்தாற்போலும் கேள்விகள் கேட்கிறோம்.

தமிழில் தடையில்லாமல் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?

எனக்குத் தாய்மொழி தெலுங்கு. பிறந்தது தர்மபுரியில். ஆனால் நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அதனால் தமிழில் பேசும் பொழுதே பாதி ஆங்கிலம் கலந்து தான் பேசுவேன். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு ஐந்து நாள் ஆங்கிலம் கலக்காமல் சரளமாக எப்படித் தமிழில் பேச வேண்டுமென்பதை இயக்குனர் பத்ரிவெங்கட்டின் உதவி இயக்குனர் கே.கே. பயிற்சி கொடுத்தார்.  நானும் செய்தித்தாள் வாசிப்பது, புத்தகங்கள் படிப்பது என்று வீட்டிலேயே பயிற்சி எடுத்து வருகிறேன்

தொடர்களில் நடிக்கும் எண்ணம் உண்டா?

ஆசையிருக்கிறது. ஆனால் அழுகிற மாதிரியான, மற்றவர்களுக்கு அடங்கிப் போகிற மாதிரியான கதாபாத்திரங்கள் வந்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். ஏனென்றால் "நான் ரொம்ப அதிரடியான பொண்ணு'. மற்றவர்களை அழவைக்கிற வில்லி மாதிரியான கதாபாத்திரமாக வந்தால் கண்டிப்பாகச் செய்வேன். ரம்யாகிருஷ்ணனைப்போல நீலாம்பரி கதாபாத்திரம் என்றால் டபுள் ஓ.கே.

உங்கள் வருங்காலத் திட்டம்?

ரொம்ப வித்தியாசமானது. தெரு நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கும் காப்பகம் நடத்த வேண்டும்  என்று ஆசையிருக்கிறது. தி.நகரில் இருக்கும் என் இல்லத்திலேயே துவங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன். யாராவது அவர்கள் தெருக்களில் அனாதையாகக் கிடக்கும் நாய்க் குட்டிகள், பூனைக்குட்டிகள், நாய்கள் பற்றி எனக்குத் தகவல் கொடுத்தாலோ அல்லது அந்த நாய்குட்டிகளைக் கொண்டு வந்து விட்டாலோ அதைப் பாதுகாத்து வளர்க்க ஏற்பாடுகள் செய்து வருகிறேன். அதற்காக கிரின்வேஸ் ரோட்டில் பெட் கிளினிக் வைத்திருக்கும் வெட்னரி டாக்டர்.முகமது அலியும் நானும் சேர்ந்து இந்தக் காப்பகத்தை உருவாக்க உள்ளோம்.  

உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கே?

அப்பா, அம்மா, இரண்டு பேருக்கும் தமிழ் மீது அதிக ஆர்வம் உண்டு. அதனால் எனக்கும் என் தங்கைக்கும் இரண்டு தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். என் நிஜப் பெயர் பங்கயத்தார் குழல் வள்ளி, என் தங்கை பேரு மட்டுவார்குழலம்மை. ஆனால் தேஜேஸ்வினி என்று ஸ்கூலில் கொடுத்ததால் அந்தப் பெயரிலேயே வெளியில் கூப்பிடுறாங்க. தேஜேஸ்வினி என்றால் சூரியஒளியைப் போன்று பிரகாசமான வெளிச்சம் என்று பொருள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.