முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கித்தார் மீன்

வானத்தில் கூட்டம்,கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதைப் போல கடலுக்குள் ஜாலியாக சுற்றித் திரிபவையே கித்தார் மீன்கள். பார்ப்பதற்குக் கித்தார் இசைக்கருவி போலவே தோற்றம் இருப்பதால் இதனை கித்தார் மீன்கள் என்கிற

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

வானத்தில் கூட்டம்,கூட்டமாக பறவைகள் பறந்து செல்வதைப் போல கடலுக்குள் ஜாலியாக சுற்றித் திரிபவையே கித்தார் மீன்கள். பார்ப்பதற்குக் கித்தார் இசைக்கருவி போலவே தோற்றம் இருப்பதால் இதனை கித்தார் மீன்கள் என்கிறார்களாம். இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியதாவது..

""ரைனோபாட்டிடே என்ற விலங்கியல் பெயரைக் கொண்டது கித்தார் மீன்கள். தோற்றத்தில் திருக்கை மீன்களின் வடிவத்தில் இருந்தாலும் மற்ற சாதாரண மீன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மை உடையவை. நீளமான ஒரு கித்தார் இசைக்கருவி வடிவத்தில் உடலும், தட்டையான முன்புற தலையும்,சிறிய இறக்கை போன்ற துடுப்புகளையும் உடையதாக இருக்கிறது.

கடலுக்குள் பெரும் கூட்டங்களாக வாழும் இவற்றின் இடப்பெயர்ச்சிகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.கடலில் வெப்பம் அதிகமுள்ள பகுதிகளில் வேறுபட்ட சிற்றினங்களும் தென்படுகின்றன.

இம்மீன்கள் திருக்கை இன வகைப்பட்டியலில் சேர்ந்திருந்தாலும் சுறாவுக்கும் இதற்கும் பல தொடர்புகள் உண்டு. சுறாக்களைப் போன்றே வாலும், பக்கவாட்டு துடுப்புகளும் உடையதாகவும் இருக்கிறது. ஆனால் தலைப்பகுதியோ முக்கோணம் போல் அதாவது பொக்லைன் வடிவில் அமைந்திருக்கிறது. பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் காணப்படும் இம்மீன்களில் சிற்றினங்கள் பலவும் இருக்கின்றன. சுமார் 6 அடி வரை வளரக்கூடியது. இம்மீனின் ஈரலில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை எண்ணெய் சிறந்த மருத்துவ குணமுடையதாக இருப்பதால் அதன் விலையும் அதிகமாக இருக்கிறது.

கடலுக்கு அடியில் மணலிலும், சகதியிலும் புதைந்து கிடக்கும் சங்குகளும், சிப்பிகளும் தான் இவற்றின் விருப்ப உணவு. அவற்றை தோண்டி லாகவமாக எடுத்து, கடித்து தின்பதற்கு ஏற்றவாறு இம்மீனின் தாடைகள் கூர்மையாகவும் மணலை அள்ளும் சவுல் போலவும் அமைந்திருக்கின்றன. மணலைத் தோண்டி உணவுகளை எடுத்து உண்பதால் இந்த கித்தார் மீனுக்கு உழும் மீன் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

வசதிகள் நிறைந்த நவீன விசைப்படகுகளின் வரவும், புதுப்புது மீன்பிடி வலைகளின் அறிமுகமும் கடந்த 50 ஆண்டுகளில் மீன்பிடிக்கும் தொழிலை 4 மடங்கு அதிகரித்திருப்பதால் இந்த மீன்களின் எண்ணிக்கை கடலில் கூட்டம், கூட்டமாக காணப்பட்டாலும் ஓரளவு குறைந்து கொண்டே இருக்கிறது. இம்மீனின் அடிப்பகுதி வெண்மையாக இருப்பதால் கடலில் நீந்தும் போது கீழிருந்து பார்க்கும் மற்ற எதிரி மீன்களின் கண்களில் பட்டுவிடாமல் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலிகளாகவும் இருக்கின்றன'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →