உலகச் சமையல் உங்கள் விரல் நுனியில்!
சமையல் புத்தகம் ஒரு கையிலும், கரண்டி இன்னொரு கையிலுமாக பெண்கள் சமைத்த காலம் இப்போது மாறிவிட்டது. கணினி யுகமான இப்போது, எதையாவது புதிதாகச் சமைக்க வேண்டும் என்றால், உடனே இணையதளத்தில் பெண்கள் தேட ஆரம்பி
சமையல் புத்தகம் ஒரு கையிலும், கரண்டி இன்னொரு கையிலுமாக பெண்கள் சமைத்த காலம் இப்போது மாறிவிட்டது.
கணினி யுகமான இப்போது, எதையாவது புதிதாகச் சமைக்க வேண்டும் என்றால், உடனே இணையதளத்தில் பெண்கள் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
இணையதளத்தில் சமையல் என்று வந்துவிட்ட பின்பு, உள்ளூர் சமையலைச் சொல்லித் தருவதாக மட்டுமே அது நின்றுவிடக் கூடாது.
உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள சமையல் முறைகளைப் பற்றியும் சொல்லித் தருவதாக அது இருக்க வேண்டும்.
உலகில் உள்ள எல்லா நாடுகளின் உணவுவகைகளைப் பற்றியும் அவற்றைச் சமைக்கும்முறைகளைப் பற்றியும் ஓர் இணையதளம் "லேகாஃபுட்ஸ்.காம்' என்ற பெயரில் உலாவந்து கொண்டிருக்கிறது. அதை உருவாக்கியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் என்றால் ஆச்சரியப்படாதீர்கள். அவர் பெயர்: சித்ரலேகா.
உலகச் சமையல் எல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எப்படித் தெரிய வந்தது? என்ற கேள்வியுடன் சித்ரலேகாவைச் சந்தித்துப் பேசினோம். அவர் கூறியதிலிருந்து...
""நான் எனது சொந்த ஊரான விருதுநகரிலிருந்து 1983 ஆம் ஆண்டில் கோயம்புத்தூருக்குக் குடிபுகுந்தேன். இப்போதுபோல இன்ஸ்டன்ட் பொடிகள் எல்லாம் அப்போது மளிகைக் கடைகளில் தாராளமாகக் கிடைக்காத காலம். இட்லி பொடி கூடக் கிடைக்காது. நாம் ஏன் இட்லி பொடி தயாரித்து விற்பனை செய்யக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. உடனே "லேகா ஃபுட்ஸ்' என்கிற பெயரில் மிகவும் தரமான, சுவையான இட்லி பொடியைத் தயாரித்து கடைகளில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். நல்ல சுவையுடன் அது இருந்ததால், நிறைய ஆர்டர்கள் கிடைத்தன. என் மகள்கள் சுமித்ரா, சுஜாதா ஆகியோரின் உதவியுடன் தயாரித்தாலும் கடைகளுக்குத் தேவையான அளவுக்கு என்னால் இட்லி பொடியைச் செய்து தர முடியவில்லை.
அந்த சமயம் நான் லேகா ரத்னகுமாருடன் விளம்பரத்துறை வேலைகளில் ஈடுபட்டேன். அதனால் இட்லி பொடி தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியவில்லை. அதற்குப் பின்பு சென்னைக்கு வந்துவிட்டோம். இருந்தும் சமையல்கலையில் எனக்கிருந்த ஆர்வம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. சமையல் புத்தகங்களை எழுத ஆரம்பித்தேன். இதுவரை என்னுடைய 11 சமையல் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.
ஆனால், அந்தப் புத்தகங்களில் நான் என் வீட்டில் சமையல் செய்து பார்த்த உணவுவகைகளைப் பற்றி மட்டுமே எழுதினேன். அதனால் நான் எழுதிய சமையல் குறிப்புகளை எந்தச் சந்தேகமுமில்லாமல் என் புத்தகங்களைப் படித்தவர்கள் பயன்படுத்தினார்கள்.
நான் விளம்பரத்துறை வேலைகளைச் செய்து வந்ததால் இத்தாலி, ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உட்பட பல வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைத்தன. பொதுவாக இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், அங்கேயும் நமது நாட்டு உணவுவகைகளைத்தான் தேடியலைவார்கள். ஆனால் நான் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டின் உணவுவகைகளை விரும்பிச் சாப்பிடுவேன். அதுமட்டுமல்ல, அந்த உணவை எப்படிச் செய்வது? என்று கேட்டுத் தெரிந்து கொள்வேன். இதனால் உலகத்தின் பலநாடுகளில் உள்ள உணவுவகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
இப்போது நான் உருவாக்கியுள்ள "கங்ந்ட்ஹச்ர்ர்க்ள்.ஸ்ரீர்ம்'- இல் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உள்ள உணவு வகைகளைத் தயாரிக்கும் முறைகளைச் சொல்லித் தர முடிவதற்கு அதுதான் காரணம்.
அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மெக்ஸிகோ, தாய்லாந்து, ஜப்பான், கிரீஸ், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் பலநாடுகளின் சூப்கள், சாலட்ஸ், ஸ்நாக்ஸ், டெஸர்ட்ஸ், பானங்கள், பேக்கரி உணவு வகைகளைப் பற்றியும் அவற்றைத் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் இந்த இணைய தளத்தில் தந்திருக்கிறேன்.
மைக்ரோவேவ் அடுப்பில் தயாரிக்கப்படும் உணவுவகைகளைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
இந்த இணையதளம் வெறும் சமையல் குறிப்புகளின் தொகுப்பாக இருக்கக் கூடாது என்பதால்,பண்டிகைக்கால உணவு வகைகளைப் பற்றியும், குழந்தைகளுக்கான உணவுவகைகளைப் பற்றியும் இதில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்'' என்றார் மூச்சுவிடாமல் சித்ரலேகா.