ஞாயிறு கொண்டாட்டம்

விடியவிடிய வில்லுப்பாட்டு!

ஒரு காலத்தில் கிராமங்களில் கோவில் திருவிழா என்றால், வில்லுப்பாட்டுக் கச்சேரி நிச்சயம் உண்டு. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் உள்ள சில பகுதிகளைக் கதையாகச் சொல்லுவது வில்லுப்பாட்டின் சிறப்பாகும்.

எஸ்.​ பால​சுந்​த​ர​ராஜ்

ஒரு காலத்தில் கிராமங்களில் கோவில் திருவிழா என்றால், வில்லுப்பாட்டுக் கச்சேரி நிச்சயம் உண்டு. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் உள்ள சில பகுதிகளைக் கதையாகச் சொல்லுவது வில்லுப்பாட்டின் சிறப்பாகும். இதனால் இதைக் கேட்கும் மக்கள் மனதில் ஒழுக்கம், தெய்வ நம்பிக்கை வளர்ந்தன.

 கோவில் திருவிழா என்றால், வில்லுப்பாட்டு கச்சேரிக்குத்தான் முதலில் முன்பணம் வழங்குவார்கள். அந்த அளவுக்கு வில்லுப்பாட்டுக் கச்சேரி புகழ் பெற்றிருந்தது. தற்போது வீட்டுக்கு வீடு டி.வி. வந்துவிட்டது. வாழ்க்கை வீட்டினுள் முடங்கிவிட்டது.

 வில்லுப்பாட்டுக் கச்சேரி செய்து கலைமாமணி விருது பெற்றவர் விருதுநகர் மாவட்டம், சிவகாசி ப.காந்திமதி. ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த அவர், இன்றைக்கு எப்போது கச்சேரி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வாடகை வீட்டில் காத்திருக்கிறார். எனினும் அவரின் கணீர் குரல் மட்டும் மாறவில்லை. சுமார் 4,000 கச்சேரி செய்து சாதனைபுரிந்த அவரின் கலைப் பயணம் குறித்து கேட்டோம்.

 ""நான் எட்டாவது வரை சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். எனது தந்தை பட்ராயர். தாய் சொரிமுத்தம்மாள். எனது உறவினர்கள் சிலர் வில்லுப்பாட்டுக் கச்சேரி செய்து வந்ததால் எனக்கும் வில்லுப்பாட்டுக் கச்சேரி மீது ஈர்ப்பு வந்தது.

 1975-ம் ஆண்டு சின்னக்காமன்பட்டி அய்யப்பனைக் குருவாக ஏற்று, அவருடன் ஒரு வருடம் கச்சேரிக்குச் சென்று வந்தேன். 1976-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியில் அங்கீகாரம் பெற்ற கலைஞரானேன். வானொலியில் புராணக் கதை, வேளாண்மை குறித்த விழிப்புணர்வுக் கதை, குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வுக் கதை போன்றவற்றைப் பாடியுள்ளேன். இதனால் எனது திறமையை வளர்த்துக் கொள்ள முடிந்தது.

 வில்லுப்பாட்டுக்கு நேரம் மிகவும் முக்கியம். ஏதாவது தவறு வந்தால் உடனடியாகத் திருத்திக்கொள்ள வேண்டும். அப்படி திருத்திக்கொள்வது கேட்பவர்களுக்குத் தெரியக் கூடாது.

 கருத்துமிக்க நகைச்சுவை இருக்க வேண்டும். இவை போன்றவற்றை நான் எனது குருநாதரிடம் படித்தேன். மேலும், தொழிலில் இருந்த ஆர்வம், முழு ஈடுபாடு என்னை பல புத்தகங்களைப் படிக்க வைத்தது. வானொலியில் கதையின் தலைப்பைக் கொடுத்துவிட்டு, அதற்கான புத்தகங்களைக் கொடுப்பார்கள். அதிலிருந்து தேவையானவற்றை எடுத்து கதையாக்க வேண்டும். இந்த திறமையைக் கடவுள் எனக்குக் கொடுத்த பரிசாகவே எண்ணுகிறேன். இதனால் என்னால் பல புதிய விஷயங்கள் குறித்த கதைகளைக் கூற முடிந்தது.

 வில்லுப்பாட்டு குழுவில் 6 பேர் இருப்பார்கள். எனது தொடக்கக் காலத்தில் எனது குழுவில் ஆர்மோனியம் இயக்கியவர் மாரியப்பன். விருதுநகர் மகாலிங்கம் டோலக். சுந்தர்ராஜன் உடுக்கை. ஜக்கையா குடம்.

 அந்தக் காலத்தில் மழை பெய்யாமல் வறட்சியாக இருந்தால், மகாபாரதத்தில் உள்ள விராடபருவம் என்ற பகுதியை வில்லுப்பாட்டாகப் படிக்கச் சொல்வார்கள். மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் முடிந்து, மறைந்து வாழ விராடநாடு என்ற பகுதிக்குச் செல்வார்கள்.

 விராட நாடு மிகவும் செழிப்பான பகுதி. வறட்சியே இருக்காது. எனவே விராடபருவம் பகுதியைப் பாட்டாகப் படிக்கும் பழக்கம் இருந்தது. 1993-ம் ஆண்டு என நினைக்கிறேன். ராமநாதபுரத்தில் மழை இல்லாமல் இருந்தது. எனவே விராடபருவம் கச்சேரி செய்ய வேண்டும் என என்னை அழைத்திருந்தார்கள்.

 நான் எனது குழுவினருடன் அங்குள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் முன்பு கச்சேரியை தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. நல்ல மழை பெய்தது. மழையால் கச்சேரியைத் தொடர இயலவில்லை. மழை பெய்ததும் ஊர்க்காரர்களுக்கு மிகுந்த சந்தோஷம். எனக்கு உரிய பணத்தைக் கொடுத்து அனுப்பினார்கள். இது ஒரு மறக்க முடியாத சம்பவம். இது போன்று பல இடங்களில் பாடிய பின்னர் மழை பெய்துள்ளது.

 1990-ம் ஆண்டு தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம் "சிறந்த கலைஞர்' என்ற விருதை

 எனக்கு வழங்கியது. 1995-ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள அனைத்து கிராமிய கலைஞர்கள் நலவாழ்வுச் சங்கம் "கலைச் செம்மல்' என்ற விருதினை வழங்கியது.

 1998-ம் ஆண்டு தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் கலைமாமணி விருது வழங்கியது. 2006-ம் ஆண்டு சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் முத்தமிழ் சாதனையாளர் விருது வழங்கியது. 1990-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நான் கச்சேரி செய்தபோது, ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் ரசித்துக் கேட்டார்கள். அதையும் நான் விருதாகவே கருதுகிறேன்.

 தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கோவில் விழாக்களில் வில்லுப்பாட்டு கச்சேரி செய்து வருகிறேன். சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கோவில் திருவிழாக்களிலும் கச்சேரி செய்து வந்துள்ளேன். மேலும், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். நலிவடைந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் மாதம் ரூபாய் ஆயிரம் வருகிறது. நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவினர்களின் உதவியால் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? வேல்முருகன்

SCROLL FOR NEXT