சபாவைப் பாராட்டிய சபா!
சண்முகப்ரியா' என்ற இசை அமைப்பு, மயிலையில் பதினாறு ஆண்டுகளாக இசை சேவை புரிந்து வரும் "சாந்தி ஆர்ட்ஸ்' சபாவின் பொறுப்பாளர் ராமபத்திரனை, சென்னை, சுவாமி அரங்கத்தில் பாராட்டி கௌரவித்தது. வெற்றிகரமாக ஒரு சப
சண்முகப்ரியா' என்ற இசை அமைப்பு, மயிலையில் பதினாறு ஆண்டுகளாக இசை சேவை புரிந்து வரும் "சாந்தி ஆர்ட்ஸ்' சபாவின் பொறுப்பாளர் ராமபத்திரனை, சென்னை, சுவாமி அரங்கத்தில் பாராட்டி கௌரவித்தது. வெற்றிகரமாக ஒரு சபாவை நடத்துவதில் உள்ள இடர்பாடுகளும் சிரமங்களும் மற்றொரு சபா உரிமையாளருக்குத்தானே புரியும்!
சாந்தி ஆர்ட்ஸ் சபாவின் பொறுப்பாளர் ராமபத்ரன், இளம் வயதிலிருந்தே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தான் செல்லும் இடமெல்லாம் ஒரு சங்கீத அமைப்பை உருவாக்குவது அவரது வழக்கம்.
அவ்வகையில் மும்பையில் பாபா அணு சக்தி மையத்தில் பொறுப்பான பதவியில் இருந்தபோதே "மியூசிக் டிரையாங்கிள்' என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தியதால் பாராட்டப்பட்டவர் ராமபத்ரன். பிறகு அமெரிக்கா சென்று, அங்கேயும் இசைக் கச்சேரிகள் நடத்திப் பூரிப்படைந்தார்.
Advertisement
இந்நிலையில் பணி ஓய்வு பெற்று சென்னை வந்த ராமபத்ரனின் வாழ்வில் ஒரு சோக நிகழ்வு நடந்தது.
அவரைப் போலவே இசையிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் ஆர்வம்கொண்ட அவரது மகள் சாந்தி திடீரெனக் காலமானார். எனவே தனது மகளின் நினைவாக "சாந்தி ஆர்ட்ஸ்' என்ற அமைப்பை தொடங்கினார் ராமபத்ரன். இந்த அமைப்பின் மூலம் திறமைகள் இருந்தும் சாதிக்க வாய்ப்பு கிடைக்காத இளம் கலைஞர்களுக்கு மேடையேறும் வாய்ப்பளித்தார்.
வசதி இல்லாத, சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களுக்கு மூத்த கலைஞர்கள் மூலம் சங்கீதம் கற்றுக்கொடுக்கிறார். பல கலைஞர்களுக்கு மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளையும் வாங்கிக் கொடுத்து வருகிறார். மேலும் இந்த அமைப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவி செய்கிறார். சுனாமி பாதிப்பின்போதுகூட தனது அமைப்பின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார் ராமபத்ரன்.
இசை சேவையின் தொடர்ச்சியாக மூத்த கலைஞர்கள் மூவருக்கு ஆண்டு தோறும் பணமுடிப்பும் பட்டமும் அளித்து கெüரவிக்கிறார். பத்தாவது ஆண்டு விழாவில் பத்து கலைஞர்களுக்கு "சங்கீத சப்தசாகரா' என்ற பட்டம் அளித்து அசத்தினார். இவை அனைத்தையும் அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி ஆத்மார்த்தமாக செய்து வரும் ராமபத்ரனை பாராட்டியது சரிதானே! விழாவிற்கு ஏற்பாடு செய்த "சண்முகப்ரியா' சபாவின் உரிமையாளர் பிருந்தா வெங்கடரமணன் மற்றும் செயலாளர்களான அப்பாத்துரையும் பாராட்டத்தக்கவர்கள்.
ஒருவாரம் நடக்கவிருக்கும் இசை விழாவைத் தொடங்கி வைத்து ராமபத்ரனின் இசைச் சேவையை நெஞ்சாரப் புகழ்ந்தனர் பி.எஸ். நாராயணஸ்வாமி, சுதா ரகுநாதன், கிளீவ்லேண்ட் சுந்தரம் மற்றும் வா.வே.சு. ஆகியோர்.
ஒருவாரம் நடக்கும் இந்த இசை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக சந்தீப் நாராயணனின் கச்சேரி, நல்ல ஆரம்பம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியிடம் இசை பயின்ற இவர், தனது குரு உருவாக்கிய கதனகுதூகல ராகத்தில் அமைந்த வர்ணத்துடன் தொடங்கினார்.
கலகலப்பான ஆரம்பம். அடுத்து கல்யாணியில், "தேரில் ஏறினான் வாசுதேவன்' என்று தொடங்கும் பாபனாசம் சிவன் பாடல். அதிகம் மேடையில் கையாளப்படாத இந்த உருப்படியை பாடிய பாடகருக்கு பாராட்டுகள். சல நாட்டையில் "ஏதய்யா கதி'யும் ஆபேரியில் "பஜரே மானஸ'வும் ரசிக்கும்படி இருந்தது. தர்பாரி கானடாவில் "கோவர்த்தன கிரி' பாடலில் நல்ல பாவம்!
கல்யாணராமன் இயற்றிய தில்லானா விறுவிறுப்பாக அமைந்தது. "காவத்திராகம்' என்றார் பாடகர்.
சென்னைக்கும் அமெரிக்காவிற்கும் பறந்துகொண்டிருந்த சந்தீப் இங்கேயே தங்கிவிட முடிவு செய்தது, நல்ல முடிவு. ஐந்து வருடங்களாக சஞ்சய் சுப்ரமணியத்திடம் இசை பயிலும் இவருக்கு, குருவின் வழி நடத்துதலுடன் உழைப்பும் சேர்ந்தால் பிரகாசமான எதிர்காலம் இசை உலகில் உண்டு.
திறமை நிறைந்த இளம் கலைஞர்களை இனம் கண்டு மேடை வாய்ப்பு தரும் சண்முகப்ரியா அமைப்புக்கு மீண்டும் ஒரு சபாஷ்!