முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அந்த நாளும் வந்திடாதோ

எம்.எஸ். போன்ற குரல் வளமும் இயற்கையான ஞானமும் பெற்றவர்கள்புகழின்சிகரத்தைத் தொட முடிந்தது. அதைவிடரசிகர்களின் ஆன்மாவைத் தொட முடிந்தது! "எனக்கு எதற்கு "இந்தியாவின் நைட்டிங்கேல்' என்ற பட்டம்? அது இவருக்கல

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:41 PM
பகிர்:

எம்.எஸ். போன்ற குரல் வளமும் இயற்கையான ஞானமும் பெற்றவர்கள்புகழின்சிகரத்தைத் தொட முடிந்தது. அதைவிடரசிகர்களின் ஆன்மாவைத் தொட முடிந்தது!

"எனக்கு எதற்கு "இந்தியாவின் நைட்டிங்கேல்' என்ற பட்டம்? அது இவருக்கல்லவா மிகவும் பொருத்தம்''என்று கவிக்குயில் சரோஜினியால் பாராட்டப்பட்டவர்;

""இந்த இசையரசிக்கு முன் நான் எம்மாத்திரம்? வெறும் நாட்டின் பிரதம மந்திரிதானே''என்று நேருவால் சிலாகிக்கப்பட்டவர்; "சூரிய சந்திரர்கள் உள்ள வரை உன் பாட்டும் நிலைத்திருக்கும்' என்று காஞ்சி மஹா பெரியவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். வேறு யாருமல்ல! இசையால் இந்திய மக்களைக் கவர்ந்து, தன் குரல் வளத்தால் பலப்பல நற்பணிகளுக்கு நிதி உதவி செய்து, வயது வித்தியாசமின்றி பாட்டைக் கேட்பவர்களிடம் தாமும் பாட வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டி மதுரையில் பிறந்து மங்காத புகழுடன் வாழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் அவர்.

Advertisement

சென்னை கிருஷ்ணகான சபையில் கர்நாடக உலகில் புகழ்பெற்று இசையுலகை வலம் வந்து கொண்டிருக்கும் இளம் பெண் கலைஞர்கள் இணைந்து "கீதம் மதுரம்' என்ற நிகழ்ச்சியை எம்.எஸ்.ஸின் 95-வது பிறந்தநாளையொட்டி வழங்கினார்கள்.

வயலின், மிருதங்கம், கடம், கீபோர்டு, தபலா ஆகிய பக்கவாத்தியங்களையும் பெண்களே வாசித்துப் புதுமை செய்தனர்.

எம்.எஸ். என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரக்கூடிய பாடல்களான "ரங்கபுரவிஹாரா', "டோலாயாம்', "நாகேந்திரஹாராய ஜகதோ தாரணா',"காற்றினிலே வரும் கீதம்', "கிரிதரகோபாலா ப்ரூஹி முகுந்தேதி', "பாவயாமி கோபாலபாலம்', "குறையொன்றுமில்லை', "அந்த நாளும் வந்திடாதோ'...போன்ற எவர்கிரீன் பாடல்களை மிகவும் சிரத்தையாகப் பயின்று பாவத்துடன் பாடி, ரசிகர்களைப் பரவசப்படுத்தினர்.

கர்நாடக இசையை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த பத்து இளம் பெண் கலைஞர்களை ஒரு கண்ணோட்டம் பார்க்கலாமா?

சைந்தவி: கர்நாட சங்கீதத்திலும், இந்துஸ்தானி இசையிலும் நல்ல பயிற்சி பெற்றவர். ஏறத்தாழ 600 பாடல்கள் தென்னிந்திய மொழிகளில் சினிமாவிற்காகப் பாடியிருக்கிறார். "யுவகலா பாரதி' பட்டம் பெற்றவர். கச்சேரியில், "ப்ருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த' மற்றும் "மதுகுங்குரே' என்ற மீரா பஜன் இரண்டையும் தன் இனிமையான குரலில் பாடி கைதட்டல்களை அள்ளிச் சென்றார்.

மானஸி பிரசாத் சங்கீத நாடக அகாதெமியின் "பிஸ்மில்லாதான் யுவபுரஸ்கர் விருது' பெற்ற கன்னடத்துக் குயில். பல முக்கிய இசைப் போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர். நிகழ்ச்சியில் "ஜகதோ தாரணா' பாடலை அருமையாகப் பாடி நெகிழ வைத்தார்.

பாடகி சுபஸ்ரீ, பத்மபூஷண் திருச்சூர் ராமச்சந்திரன் மற்றும் கலைமாமணி சாருமதி ராமச்சந்திரன் இசைத் தம்பதியரின் இசை வாரிசு. கர்நாடக இசையையே சுவாசித்து வளர்ந்த இவர், இந்துஸ்தானி இசையையும் முறையாகப் பயின்றவர். "யுவகலா பாரதி' போன்ற பல பட்டங்கள் இவருக்கு உண்டு. "நகுமோமு கனவே', "நாராயணா நின்ன நாமஸ்மரணே' பாடல்களைப் பாடி தன் குருகுலத்திற்கே உரிய இனிய ப்ருகாக்களுடன் கேட்பவர் நெஞ்சை அள்ளினார்.

கிருத்திகா சுரஜித், கர்நாடக இசையிலும் தாயிடமிருந்து கற்ற பரதநாட்டியத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். "எனது உள்ளமே' பாடலையும், "காற்றினிலே வரும் கீதம்' பாடலையும் மிக அருமையாகப் பாடினார்.

ஸôஸ்வதி பிரபு, கிருஷ்ணகான சபையின் செயலாளர் மறைந்த இசை ஆர்வலர், யக்ஞராமனின் பெயர்த்தி. லால்குடி ஜெயராமனின் பாசறையில் உருவான பாடகி. மனோதத்துவ ஆராய்ச்சியாளரான இவர், இசை மூலம் மனதுக்கு அமைதி கொடுக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து அந்த இசை வடிவங்களை குறுந்தகடுகளாக வெளியிட்டிருக்கிறார். "பாவயாமி கோபாலம்', "குறையொன்றுமில்லை' ஆகிய பாடல்களை பாவத்துடன் கணீரென்ற குரலில் இசைத்து நம்மை ரசிக்க வைத்தார்.

ஜனனி, "கலை இளமணி' பட்டம் பெற்றவர். டாக்டர் பாலமுரளியின் மாணவி. இந்துஸ்தானி இசை பயின்று, மேல்நாட்டு சங்கீதத்திலும், கீபோர்ட் கற்றுக்கொண்டு இசையமைக்கவும் செய்கிறார். நிகழ்ச்சி முழுவதும் கீபோர்ட் வாசித்ததுடன், "பஜரேயதுநாதம்' பாடலை சிறப்பாகப் பாடவும் செய்தார். விருத்தம் மிக அருமை, இனிமை.

நந்தினி, வானொலியில் ஏ கிரேட் வயலின் கலைஞர். "பாலகலா ரத்னா' போன்ற பல விருதுகள் பெற்றவர். பரதநாட்டியத்திற்கும் இவரது வயலின் ஒலிக்கிறது. நிகழ்ச்சி முழுவதும் இவரது பக்க வாத்தியம், சுருதி சுத்தமாகவும் சுநாதமாகவும் இருந்தது.

லாவண்யா, ஒரு மிருதங்கக் கலைஞர். முதலில் வி.ராஜா மணியிடமும், பிறகு குருவாயூர் துரையிடமும் பயின்றவர். விப்ரோ நிறுவனத்தில் சாஃப்ட்வோர் என்ஜினியராக பணிபுரியும் இவர் ஹார்ட்வேர் ஆன மிருதங்கத்தை நேசிக்கிறார்.

பளிச்சென்ற தீர்மானங்கள், பாடுபவர் முகத்தையே பார்த்தபடி பாடலுக்கு ஏற்ற இறக்கங்கள் என கச்சேரியை பரிமளிக்க வைத்தார்.

ரெட்னா ஸ்ரீ, தபலா வாசிப்பில் ஈடுபட்டுள்ள முதல் பெண். கேரளத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், மேல் படிப்பையும் தபலா வாசிப்பது பற்றியே தேர்ந்தெடுத்திருக்கிறார். ஜகதோ தாரணா, மீராபஜன் ஆகிய உருப்படிகளில் தபலா வாசிப்பு தனித்து நின்றது.

ரம்யா, விக்கு வினாயகராமின் சீடரான லால்குடி வி.ராஜசேகரின் மாணவி, பத்து வருடங்களாக கடம் பயின்று வருகிறார். திருச்சியில் தனது கல்லூரியில் பல இசை நிகழ்ச்சிகள் புதுமையாக நடத்தியும் அனைத்துக் கல்லூரிப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றும் இளைஞர் வட்டாரத்தில் மிகவும் பாப்புலர்.

எம்.எஸ். போன்ற குரல் வளமும் இயற்கையான ஞானமும் பெற்றவர்கள் புகழின் சிகரத்தைத் தொட முடிந்தது. அதைவிட ரசிகர்களின் ஆன்மாவைத் தொட முடிந்தது!

இந்த நாளிலும் இது சாத்தியம்தான். கலையிலேயே ஆழ்ந்து,அமிழ்ந்து, மூச்சடக்கி முத்தெடுப்பது போல பயின்று, தவமாக நினைத்து செயல்பட்டு, விருது, புகழ் இவற்றின் எதிர்பார்ப்புகள் இன்றி அர்ப்பணிக்கும்போது, எந்தக் கலையும் முழுமை பெறும். ஆனால் இந்த மனோபாவம் எளிதல்ல என்பதும் நிதர்சனம்!

இந்த அவசரயுகத்தின் பிடிகளிலிருந்து விடுபட்டு ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகும். அந்த நாளும் வந்திடோதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments