முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வயலினில் ஒத்த வார்த்தைகள்!

நவராத்திரி, சென்னையில் கோலாகலமான விழாவாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெறும் கொலு பொம்மைகளைப் படிகளில் வைத்து ரசிப்பதுடன் நின்றுவிடாமல், ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துக்கொண்டு கொலுவை அமைப்பதும்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:45 PM
பகிர்:

நவராத்திரி, சென்னையில் கோலாகலமான விழாவாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெறும் கொலு பொம்மைகளைப் படிகளில் வைத்து ரசிப்பதுடன் நின்றுவிடாமல், ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துக்கொண்டு கொலுவை அமைப்பதும், அதற்காக சில அமைப்புகள் வீடுகளுக்குச் சென்று பார்த்துப் பரிசளிப்பதும் புதிய வழக்கங்களாகிவிட்டன. பெண்களுக்கு உற்சாகத்தை அளிப்பவையாக இருக்கின்றன.

 இதுமட்டுமன்றி நவராத்திரி கொலு என்றாலே அதனுடன் பாட்டும் இசையும் இணைந்தது என்பதனால் கோவில்களிலும் சபாக்களிலும் பல தனியார் தொலைக்காட்சிகளிலும் இசைக் கச்சேரிகள் நடைபெற்றவண்ணம் இருக்கின்றன.

 சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள சி.பி.ராமசாமி அறக்கட்டளை என்ற அமைப்பு கலைக்காகவும் சுற்றுப்புற சூழலைப் பேணுவதற்காகவும் பல மையங்களை நடத்திவருகிறது. இந்த வருடம் இசைக் கச்சேரிகளை நவராத்திரி சமயத்தில் நடத்தி, நமது கலாசாரத்தைப் பேண வேண்டும் என்று விழைந்தது. மூன்று நாட்கள் நடந்த இந்த இசைவிழாவில், முதல் நாள், மூத்த வயலின் கலைஞரான எம். சந்திரசேகருக்கு "சரஸ்வதி' என்ற பட்டம் அளித்து கெüரவித்தது. முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் கிருஷ்ணஸ்வாமி தலைமைதாங்கி இந்த விருதை அளித்தார்.

Advertisement

 ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற கெüரவப் பட்டம் அளிப்பதற்கும் கச்சேரிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார் சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா.

 தொடர்ந்து அர்ச்சா, ஆர்த்தி இருவரும் இசைக் கச்சேரி நிகழ்த்தினர். அடுத்தநாள், லால்குடி ஜெயராமனின் மாணவி ஸ்ரேயா தேவ்நாத்தின் இனிமை நிறைந்த வயலின் கச்சேரி மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

 விளம்ப காலத்தில் அமைந்த துதஜாவந்தி ராகக் கிருதி "அகிலாண்டேஸ்வரி' மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. அதைத் தொடர்ந்து வசந்தா ராகத்தில் "சீதம்மா மாயம்மா...' என்ற கீர்த்தனையைத்

 துரித காலத்தில் வாசித்து ஸ்வரப் பிரஸ்தாரங்களையும் சுவையாக இசைத்தார். தொடர்ந்து மோகன கல்யாணியில் வாசித்த "சங்கீத சாம்ராஜ்ய ஸஞ்சாரிணி' பாடலில், வயலின் கச்சேரிதான் என்றாலும் வார்த்தைகள் ஒலிப்பது போலவே தோன்றியது. லால்குடியின் பாசறையில் உருவானவர் அல்லவா?!

 இறுதியாக லால்குடி இயற்றிய மிஸ்ர மாண்டு ராகத் தில்லானாவுடன் கச்சேரி முடிந்தபோது, ஒன்றரை மணிநேரம் சென்றதையே உணரமுடியவில்லை. மிருதங்கக் கலைஞர் பத்ரியின் மாணவர் ராகவனின் பக்கவாத்தியம் மிக அருமை. நிறைவான கச்சேரி.

 மூன்றாவது நாள், இளம் கலைஞர் பரத் சுந்தரின் வாய்ப்பாட்டுக் கச்சேரி. ஜெயா டி.வி. நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் சென்ற வருடம் முதலிடம் பெற்று பிரபலமானவர். பைரவி ராக ஆலாபனையும் "கொலுவையுன்னாடே' கிருதியும் நல்ல ஜீவனான பிரயோகங்களுடன் நேர்த்தியாக இருந்தன. "ஆரபிமானம் வைத்து ஆதரிப்பார்' என்ற பாடலில் ஒரு வரிக்கு ஒரு ராகம் மாறும். ஒவ்வொரு சரணத்திற்கும் ஸ்வரங்களும் உண்டு. சிரமமான இந்தக் கிருதியை அனாயாசமாகப் பாடி, பாவத்துடன் கையாண்டார் பரத். தொடர்ந்து பாடிய பாரதியாரின் "சந்திரனொளியில் அவளைக் கண்டேன்' நெஞ்சை நெகிழ்த்தியது. இறுதியாக வந்த ராகமாலிகை விருத்தமும் "கற்பகமே கண்பாராய்' என்று பாடி முடித்ததும் அம்பாளை ஆராதிக்கும் நிறைவான முத்தாய்ப்பாக அமைந்தது.

 இளம், வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏற்பாடு செய்த சி.பி.ஆர்ட்ஸ் அமைப்புக்கு பாராட்டுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments