தண்ணீரில் கோலம் போடலாம்!
நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுச்
நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுச் சுவர்களுக்கு பெயின்ட் அடிப்பது இயலாத செயல். வாசல் தெளித்துக் கோலம் போட வாசல் இல்லை. என்னதான் செய்வது என்று கவலைப்படுகிறீர்களா?
""வாசல் இல்லாவிட்டாலும் கோலம் போட முடியும்'' என்கிறார் சரஸ்வதி ஸ்ரீநிவாசன்.
வீட்டு உள் அலங்கார நிபுணரான அவர், இது தொடர்பாக "அழகான வீடு', "இல்லமும் இன்ட்டீரியரும்' என்று இரண்டு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர், வாசல் இல்லாமல் கோலம் போடவும், வீட்டைச் சுத்தம் செய்வதற்குமான ஆலோசனைகளைக் கூறுகிறார்:
""பொங்கல் அன்றோ, அதற்கு முதல் நாளோ சிலர் வீட்டைச் சுத்தம் செய்வதற்காக இறங்குவார்கள். ஒரு முழுநாளும் அதற்கே போய்விடும். பொங்கலை நன்றாகக் கொண்டாட முடியாமல் போய்விடும்.
வீட்டைச் சுத்தம் செய்வதை ஒரு வழக்கமான செயலாக எப்போதுமே செய்துவந்தால் விழாக் காலங்களில் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்காது.
பெண்களே சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், வீட்டிலுள்ள ஆண் குழந்தைகளும் முடிந்த அளவுக்குச் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்ய வேண்டும். உயரமான இடங்களில் உள்ள பொருட்களைச் சுத்தம் செய்வது, மின்விசிறிகளைத் துடைப்பது போன்றவற்றை ஆண்கள் செய்யலாம். இப்போது வேக்குவம் கிளீனரை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் கூட அவற்றைப் பயன்படுத்தலாம்.
வீட்டைச் சுத்தம் செய்வதையும் திட்டமிட்டுச் செய்யலாம். திங்கள் கிழமை இன்ன பொருட்களைச் சுத்தம் செய்ய வேண்டும், செவ்வாய்க்கிழமை பூஜை சாமான்களைச் சுத்தம் செய்ய வேண்டும், புதன் கிழமை சமையலறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாரத்தில் ஐந்து நாட்களையும் சுத்தம் செய்வதற்குத் திட்டமிட்டுச் சுத்தம் செய்தால், வாரத்தின் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியோடு கழிக்க முடியும்.
வீட்டில் உள்ள கண்ணாடிப் பொருட்களைத் துடைக்க தினமும் காலை 10 நிமிடம், மாலை 10 நிமிடம் ஒதுக்கினால் சிரமம் தெரியாது.
சமையலறையில் இன்ன பொருட்களை இந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று முறைப்படுத்தினாலே சுத்தம் வந்துவிடும்.
பயன்பாடற்ற பாட்டில்களை, டப்பாக்களை, பாலிதின் கவர்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. உடனே அவற்றைக் குப்பைக் கூடையில் போட்டுவிட வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ளவர்கள் கோலம் போட முடியாது, அதற்கு இடம் இல்லை என்று பொங்கலன்று வருத்தப்படத் தேவையில்லை. கோலத்தைத் தரையில்தான் போட முடியாது. தட்டுகளில் போடலாம். தட்டுகளில் பூக்களை வைத்துக் கோலம் போடலாம். தண்ணீரில் கோலம் போடலாம். வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ரோஜா இதழ்களையோ, செவ்வந்திப் பூக்களையோ தண்ணீர் தெரியாத அளவுக்கு மிதக்கவிட வேண்டும். அதற்கு மேல் தரையில் கோலம் போடுவதைப் போல, பல வண்ண பூக்களை வைத்துக் கோலம் போட்டால், மிக அழகாக இருக்கும். கோலம் போடும் பல வண்ணப் பூக்களுக்கு அடியில் ரோஜா இதழ்களோ, செவ்வந்திப் பூக்களோ இருப்பதால், அதன் மேல் வைக்கும் பூக்கள் அங்குமிங்கும் நகராது.
இப்போது தொட்டிகளில் வளர்க்கும் வாழை மரங்கள் கிடைக்கின்றன. இரண்டு வாழை மரத் தொட்டிகளை வாங்கி வாசல் கதவின் வெளிப்புறத்தில் இரு பக்கமும் வைத்தால், விழாக்களை நமது வீட்டுக்கு வந்துவிடும்.
மண் பானையில் சோறு வடித்தது போய், ரைஸ் குக்கர் வந்துவிட்டது. மண்பானையில் செய்த பொங்கலை ரைஸ் குக்கரில் இப்போது செய்கிறோம். இவற்றை நாம் இயல்பாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். அதுபோல வாசலில் போட்ட கோலங்களை தட்டுகளிலோ, தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களில் பூக்களின் மீதோ போட வேண்டியதுதானே?'' என்கிறார் சரஸ்வதி ஸ்ரீநிவாசன் சிரிப்புடன்.