வீட்டிலே ஒரு வேடந்தாங்கல்!
கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரத்தையடுத்த தனலட்சுமிபுரம். அங்கே நுழைகிறோம். அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் நகரமயமாதலுக்கு மத்தியில் எங்கிருந்து வருகிறது இப்படிப் பறவைகளின் ராகம் என்ற வ
கோவை-திருச்சி சாலையில் ராமநாதபுரத்தையடுத்த தனலட்சுமிபுரம். அங்கே நுழைகிறோம். அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் நகரமயமாதலுக்கு மத்தியில் எங்கிருந்து வருகிறது இப்படிப் பறவைகளின் ராகம் என்ற வியப்பு. இனிமையான அந்த சப்தம் வரும் திசையை நோக்கி சென்றாலே அந்த வீட்டை கண்டுபிடித்துவிடலாம்.
பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், சிவப்பு, இன்னும் பல வண்ணங்களில் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் அத்தனை அழகு நிறைந்த வெளிநாட்டுப் பறவைகள் அங்கும் இங்குமாக பறந்து விளையாடிக் கொண்டிருந்தன. சிறிய கூண்டுகளில் லவ்பேர்ட்ஸ் வளர்ப்பதைப் பார்த்திருப்போம். இது அப்படிப்பட்ட சிறிய கூண்டு அல்ல. நாம் அங்கும் இங்கும் ஓடி விளையாடும் அளவுக்கு சுமார் 50 முதல் 60 அடி நீளம், 25 அடி அகலம், 35 அடி உயரத்தில் ஒரு பெரிய அறைக்கு கூரை போட்டு சுற்றிலும் வளை அமைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது அந்த இடம். வீட்டின் நீளத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்துதான் அந்தக் கூண்டிற்கு உள்ளே செல்ல வேண்டும். வீட்டிற்குள் இப்படி ஒரு வேடந்தாங்கலை வைத்திருப்பவர் பெயர் - அபிமன்யு. தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான குரியம் நிறுவனக் குடும்பம் இவருடையது! அவரின் வேடந்தாங்கல் வீட்டைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்...
""இவை எக்சாட்டிக் பேர்ட்ஸ். இவற்றை வீட்டில் வைத்து வளர்க்கலாம். ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகளை வளர்த்து வருகிறோம். இவற்றுக்கு முறையான உரிமம் உண்டு. இவற்றை கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கிறோம் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். காரணம் இவற்றின் தாய் மற்றும் தந்தை அவற்றின் மூதாதையர் என பல தலைமுறைகளாக இவை கூட்டில்தான் வளர்க்கப்படுகின்றன. இவைகளை ஃபார்ம் பேர்ட்ஸ் என்றும் கூறலாம். பண்ணைகளில் இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. கோவை, பெங்களூர், கல்கத்தா, பொள்ளாச்சி உள்ளிட்ட பல நகரங்களில் பண்ணைகள் மற்றும் வீடுகளில் வைத்தே சிலர் இவற்றை இனப்பெருக்கம் செய்கின்றனர். இவற்றை வெளியே பறக்கவிட்டாலும் இவற்றுக்கு இரைதேடி சாப்பிடத் தெரியாது. காரணம் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நாம் கொடுக்கும் உணவை சாப்பிட்டுப் பழகியவை. மேலும் நம் நாட்டு பறவைகளான காகம், கழுகு, ராஜாளி, ஆந்தை போன்ற பறவைகள் இவற்றைக் கொன்றுவிடும்.
பல்வேறு வகையான பறவைகள் இந்தக் கூண்டில் உள்ளன. ஒன்றுடன் ஒன்று சண்டையிடாமல் இருக்கவும், சுதந்திரமாக பறந்து திரியவும், மேலும் இனப்பெருக்க காலத்தில் கூடுகள் அமைத்து முட்டையிட போதிய இடவசதிக்காகவும் இவ்வளவு பெரிய கூண்டு அமைத்தோம். எங்கள் உறவினர் ஒருவர் மூலமாக அமைத்ததால் பெரிதாகச் செலவாகவில்லை. கூண்டுக்கு மாத்திரம் சுமார் ரூ.1 லட்சம் செலவிட்டிருப்போம். மற்றபடி பறவைகளுக்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் ஆகியிருக்கும்.
சன் கன்யூர், ஜன்டே கன்யூர், நன்டே கன்யூர், க்ரே பெரட், லூட்டினோ, ப்ளூ மாஸ்க், எல்லோ ஃபிஷர், ஆரஞ்சு ஃபிஷர், பீச், ஆலிவ் ஃபேஸ், காக்டெயில் எல்லோ ரிங் நெக், ப்ளூ ரிங் நெக், கோல்டன் ஃபெசன்ட், ஃபிளையிங் டக் போன்றவற்றை வளர்த்து வருகிறோம். ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடி வாங்கினோம். இப்போது ஒவ்வொரு வகையிலும் 4 முதல் 5 பறவைகள் உள்ளன. இவற்றிற்கு, பழங்கள், கொட்டைகள், பருப்பு வகைகள், சூரிய காந்தி விதை, தினை, மக்கா சோளம் போன்றவற்றை உணவாகக் கொடுக்கிறோம். மேலும் இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகளும் கொடுக்கிறோம்.
என் தந்தை கே.எம்.செந்திலுக்குப் பிராணிகள் என்றால் ரொம்பப் பிரியம். தனியாக இடம் வாங்கி அங்கு 15- க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்த்து வருகிறோம். வீட்டில் இப்போது ராட்வீலர் வைத்துள்ளோம். முதலில் வீட்டில் ஆஸ்திரேலிய பிஞ்சஸ் வைத்திருந்தோம். அளவில் சிறியதாக இருப்பதால் அவை கூண்டின் கம்பி வளைகளைப் பிடித்து அமர்ந்திருக்கும்போது வெளியே இருந்து கூண்டை நோக்கி வேகமாகப் பறந்து வரும் காகம், கழுகு போன்றவை அடித்து விடும். தற்போது உள்ளவை அளவில் பெரிய பறவைகள். எளிதாக இடம்மாறிவிடும். இப்படியான செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது மனஅழுத்தம் குறையும்'' என்றார்.