ஞாயிறு கொண்டாட்டம்

எஸ்.எம்.எஸ்.ஸில் சுனாமி எச்சரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சி மடத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிராம வள மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் ஆர்.ஸ்ரீகிருபா. மீனவர்கள் கடலி

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சி மடத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிராம வள மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் ஆர்.ஸ்ரீகிருபா.

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கப் போகும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரிவித்தல், கடலில் மீன்வளம் அதிகமாகவுள்ள இடங்களைப் பற்றிய விவரங்களை செயற்கைக் கோள் மூலம் பெற்று அதை மீனவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல்களாக அனுப்புதல், கடற்கரையோரங்களைப் பாதுகாக்கும் முறைகள் மற்றும் கடலில் வாழும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஏழ்மை நிலையில் உள்ள மீனவப் பெண்களைக் கண்டறிந்து அவர்கள் வசிக்கும் குக்கிராமங்களுக்கே நேரில் சென்று கடல் உணவின் முக்கியத்துவம் குறித்தும் மதிப்புக்கூட்டப்பட்ட மீன் உணவுப்பொருட்களைத் தயாரிப்பது குறித்தும் பயிற்சி அளித்து பொருளாதாரரீதியாக அவர்களை முன்னேற்றுதல் ஆகிய பணிகளைச் செய்துவருகிறார் ஆர். ஸ்ரீகிருபா. இனி அவரிடம் பேசியதிலிருந்து...

மீனவர்களின் பாதுகாப்புக்காக என்னென்ன செய்கிறீர்கள்?

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 கடற்கரையோர கிராமங்களைத் தேர்வு செய்து, அந்த ஊர்களில் சுனாமி எச்சரிக்கை கருவிகளை நிறுவியுள்ளோம். சுனாமி வருவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்பாக இக்கருவி சைரன் ஒலி எழுப்பிவிடும்.

உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மீனவர்கள் சென்றுவிட முடியும். மேலும் இக்கருவியின் மூலம் கடல் அலையின் வேகம், உயரம், காற்றின் வேகம், புயல் எச்சரிக்கை பற்றிய அறிவிப்புகள் மற்றும் மீன்வளம் அதிகம் உள்ள இடங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

இக்கருவிக்கு எப்படி இதுபோன்ற தகவல்கள் கிடைக்கின்றன?

"இஸ்ரோ'வின் செயற்கைக்கோள் மூலமாக ஹைதராபாத்தில் உள்ள "இன்காய்ஸ்' எனப்படும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் இதனைப் பெற்று இக்கருவிகளுக்கு அனுப்பிவைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் தகவல்களை மீனவர்கள், கடற்படை, கடலோரக் காவல் படை, மீன்வளத்துறை அதிகாரிகள் உள்பட சுமார் 600}க்கும் மேற்பட்டோரின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கிறோம். இது ஓர் இலவச சேவை.

மீனவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் வேறு என்னென்ன உதவிகளை செய்கிறீர்கள்?

படகுகளில் உள்ள என்ஜின்களின் பழுதுகளை நீக்கும் மெக்கானிசம் கற்றுத் தருகிறோம். ஆபத்துக் காலங்களில் உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையிலும் மீனவர்களுக்கு எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வகையில் ஹெல்ப்லைன் வசதியும் எங்களிடம் உள்ளது. மீன் பிடித்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட சந்தேகங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள அவ்வப்போது தொலைபேசி வழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கிறோம்.

கடலுக்கடியில் பாறைகள் இருந்தால் சத்தம் தரும் "எக்கோ சவுண்டர்' கருவி மற்றும் ஆமைகள் வலையில் பிடிபடுவதைத் தவிர்க்கும் டி.இ.டி.கருவி பயன்படுத்துவது எப்படி எனவும் சொல்லிக் கொடுக்கிறோம். கடலில் படகு எந்தப்பக்கம் செல்கிறது என்பதைத் தெரியப்படுத்தும் ஜி.பி.எஸ். கருவியை எப்படிப் பயன்படுத்துவது என ஏராளமான மீனவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறோம்.

எங்களின் ஹெல்ப்லைன் எண்கள்: 9282442311, 9282442312.

மீனவப் பெண்களின் முன்னேற்றத்துக்காக எதுவும் பயிற்சியளிக்கிறீர்களா?

இறால் மீனிலிருந்து வடை, பக்கோடா, கோலா உருண்டை, பிரியாணி, ஆம்லேட், வடகம், கருவாடு, கூனிப்பொடி, மீன்களில் இருந்து முறுக்கு, பஜ்ஜி, கட்லெட், மஞ்சூரியன், ஊறுகாய், சூப் ஆகியனவும் செய்ய பயிற்சியளிக்கிறோம். நண்டுகளில் இருந்து வடை, சூப் தயாரிக்கவும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இப்பயிற்சியின் போது வேறு எதையெல்லாம் சொல்லித் தருகிறீர்கள்?

வடகம், பஜ்ஜி, முறுக்கு உள்பட எந்த வகைகளைத் தயாரிக்க எந்த வகையான மீன்களைத் தேர்வு செய்வது, மீன்களை கையாளும் விதங்கள், மீன் ஊறுகாய் கெடாமல் இருக்க பாட்டில்களை தேர்வு செய்து அதில் அடைக்கும் விதம், பாட்டில்களை சுத்தம் செய்யும்

முறைகள், முக்கியமாக தனிநபர் சுகாதாரம், கற்பனைத்திறன், வாய்ப்புகளைத் தேடும் விதங்கள், புதுமைகளை புகுத்துதல், தர நிர்ணயம், திட்ட அறிக்கைகள் தயாரித்தல், செய்யும் தொழிலை வருமானம் பெருக்கும் தொழிலாக மாற்றும் நுட்பங்கள், பாக்டீரியாக்கள் வராமல் பாதுகாத்தல், மீன்களைப் பதப்படுத்தும் முறைகள் உள்பட அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம்.

இப்பயிற்சியை தேவைப்படும் ஊர்களுக்கு நேரில் வந்து சொல்லித் தருவீர்களா?

மூலப்பொருளும், சந்தைப்படுத்துதலும், கடல் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலைப் பொறுத்தவரை மிகவும் சுலபமானதும், அதிக வருவாயைத் தரும் தொழிலுமாகும். சுமார் 25 உறுப்பினர்களுக்குக் குறையாமல் பெண்களோ அல்லது ஆண்களோ இருந்தால் அவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே கூட வந்து சொல்லித் தரத் தயாராக இருக்கிறோம்.

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு உங்கள் அறிவுரை என்ன?

பிரச்னைகளை மனிதன் தீர்ப்பதில்லை. இயற்கை ஒவ்வொரு பிரச்னைக்கும் முடிவை அதனுடனே வைத்துத்தான் அனுப்புகிறது என்று ஒரு பழங்கால பழமொழி இருக்கிறது. எதையும் தெளிந்த மனதோடும்,துணிவோடும் செய்தால் சாதனைகள் என்பது சாதாரணமாகி விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT