ஞாயிறு கொண்டாட்டம்

என்ன பொருத்தம்:நாடக விமர்சனம்

கோடை நாடக விழா வந்தால், ஒன்றிரண்டு நல்ல நாடகங்கள் தேறாதா என்ற நப்பாசை உள்ள ரசிகர் பட்டியலில் அடியேனும் ஒருவன். (நாம் எழுதியிருப்பதுதான் சிறந்தது என்று எல்லா நாடகாசிரியர்களும் நாடகத்தை எழுதி முடித்தவுட

சாருகேசி

கோடை நாடக விழா வந்தால், ஒன்றிரண்டு நல்ல நாடகங்கள் தேறாதா என்ற நப்பாசை உள்ள ரசிகர் பட்டியலில் அடியேனும் ஒருவன். (நாம் எழுதியிருப்பதுதான் சிறந்தது என்று எல்லா நாடகாசிரியர்களும் நாடகத்தை எழுதி முடித்தவுடன் நினைக்காமல், (நாடக உலக) நண்பர்களைக் கலந்து ஆலோசித்து நாடகத்தை உருவாக்கினால் இன்னும் நாலைந்து சிறப்பான நாடகங்கள் மேடைக்குக் கிடைக்கலாமே என்பது அடுத்த நப்பாசை)

 கதை ஓரளவு நம்பும்படியாக இருக்க வேண்டும். வசனம் ஓரளவு இயல்பாக இருக்க வேண்டும். இது நாடகம்தான், நிஜம் இல்லை என்று ஒவ்வொரு காட்சியும் செயற்கையாக இல்லாமல், நடிப்பும் ஓரளவு இயற்கையாக இருக்க வேண்டும். இந்த மூன்றும் இருந்துவிட்டால், அப்புறம் என்ன, ஏஸி ஹாலில், ஹாய்யாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நாடகத்தை ரசித்துப் பார்க்க வேண்டியதுதான்.

 மேற்படி மூன்று அம்சங்களும் எண்பது சதவிகிதத்துக்கு மேல் இருந்த "என்ன பொருத்தம்' நாடகத்தை சென்ற வாரம் நாரத கான சபாவில் பார்த்த போது, அப்பாடா, நாடகத்தனம் அதிகம் இல்லாத ஒரு நாடகம் பார்த்தோம் என்ற ஆறுதல்

 உண்டாயிற்று.

 தொடக்கத்தில் ஒருமணி நேரம் கலகலப்பான உரையாடலில் கதை தென்றலாக வீசுகிறது. மகனுக்கு (எஸ்.ஜி.கார்த்திக்) திருமணம் நிச்சயிக்கிறார்கள். மருமகள் (பூர்வஜா) பொருத்தமாகவே கிடைத்துவிடுகிறாள். மாமியார் (மாலதி சம்பத்) அணில் சினேகிதி என்றால், மருமகளாக வரவிருப்பவள் குருவி இனம் ஏன் அழிந்து வருகிறது என்று ஆய்வு செய்யும் இயற்கை ரசிகை. என்ன

 பொருத்தம்!

 அப்புறம்தான் தென்றல் போய், புயல் வீசத் தொடங்குகிறது நாடக மேடையில். சாதாரண விஷயம்கூட ஊதிப் பெரிதாக்கப்பட்டு, ஊடலின் பரிமாணமும் பரிணாமமும் பயங்கரமாக உருவெடுக்கின்றன. தம்பதிக்குள் நடக்கிற சிறு விஷயம் செல்போனில் உடனுக்குடன் சுடச்சுட அப்பா-அம்மாவுக்குப் போய்ச்சேரும்போது அது அசுர உருவம் எடுத்துவிடுகிறது. அப்புறம் இரண்டு பக்கங்களிலுமே கோப-தீப ஆராதனைதான். வெறுப்புக்கு வெண்சாமரம்தான். பெற்றோர் வீட்டுக்குப் போன பெண்ணை எப்படி திரும்ப அழைப்பது என்று துவங்கி, "எனக்கு ஏம்மா கல்யாணம் பண்ணி வச்சே...' என்று மகன் கேள்வி கேட்கிற அளவிற்குப் போய்விடுகிறது. தம்பதி சிக்கலை நன்றாகவே அலசியிருக்கிறார் நாடகாசிரியர் மூர்த்தி.

 இங்கேதான் மனநல மருத்துவர் அறிமுகம் ஆகிறார். மனநல மருத்துவர் (விசுவநாதன் ரமேஷ்) இரண்டு பேரிடமும் நைச்சியமாகப் பேசி, இருவரும் எப்படி அற்பமான செயலுக்காகத் தங்கள் மனசைக் குழப்பிக்கொண்டு, சந்தேகத்துக்கு இடம் கொடுத்து, விரோதத்தை வளர்த்துக்கொண்டார்கள் என்பதை எடுத்துச் சொல்லும்போது, இளம் தம்பதி தங்கள் தவறைப் புரிந்துகொள்கிறார்கள். பெற்றோரும்தான்.

 கடைசியில் மனநல மருத்துவரின் பேச்சுக்குக் கொஞ்சம் கத்திரிக்கோல் போட்டிருந்தால், நாடகம் ஏ-1 என்று மனமாரப் பாராட்டியிருக்கலாம்.. அவர் இயல்பாக நடித்ததும், வசனத்தை இயல்பாகச் சொன்னதும்தான் அவருடைய பாத்திரத்துக்குக் கொஞ்சம் வலு அமைத்துக் கொடுத்தது. அவரும் பூர்ணத்தின் பட்டறையில் தயாரானவர் என்பதால், தன் பாத்திரத்துக்கு நம்பகத்தன்மையை அளித்தார்.

 "குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி' எம்.பி. மூர்த்தி எழுதி, இயக்கியிருக்கும் "என்ன பொருத்தம்' நாடகம், இளைய தலைமுறை எங்கே தவறு செய்கிறது என யோசிக்க வைக்கிறது. முதல் பாதியில் சிரிக்கவைக்கிற மூர்த்தி, இரண்டாம் பாதியில் சிந்திக்க வைக்கிறார். இந்தக் கலவை அவருக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகராட்சி நிா்வாகத்துறைக்கு எதிரான வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பெரியாறு அணை: 18-ஆம் கால்வாயில் இன்று முதல் தண்ணீா் திறக்க உத்தரவு

பேச்சாளருக்கான இலக்கணத்தை வகுத்தவா் ஜீவா: எழுத்தாளா் த.ஸ்டாலின் குணசேகரன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT