முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வண்ணக் களஞ்சிய ஓவியர்!

"அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்' என்று பாடினார் பாரதியார். ராஜன் கோபாலகிருஷ்ணன் அதைத் தம் ஓவியங்களாலும், புகைப்படங்களாலும் அவர் பாடியது உண்மையே என்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:22 PM
பகிர்:

"அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம்' என்று பாடினார் பாரதியார். ராஜன் கோபாலகிருஷ்ணன் அதைத் தம் ஓவியங்களாலும், புகைப்படங்களாலும் அவர் பாடியது உண்மையே என்று காண்பித்திருக்கிறார்.
 ராஜன் கோபாலகிருஷ்ணன் ஓவியர் மட்டுமல்ல. புகைப்படக் கலைஞர். விளம்பரப் படங்கள் தயாரிப்பதில் பல புதுமைகளைப் புகுத்திய நிபுணர். ஒரு பொருளை விற்பனையின் உச்சத்தில் கொண்டு செல்ல என்ன உத்தியைக் கையாள வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிந்தவர். கோயில் சிற்பங்கள், கோயில் கட்டடக் கலை ஆகியவற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ஆனால் அவர் படித்தது என்னவோ ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஒலிப்பதிவு மற்றும் ஒலிப் பொறியியல் துறை!
 ""நான் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும்போது என் சக மாணவர்கள் ராஜீவ் மேனன், நாசர் போன்றோர். 1984 முதல் 1992 வரை ஏவி.எம் ஸ்டூடியோவிலும், பிரசாத் ஸ்டூடியோவிலும் டயலாக் மிக்ஸிங், சவுண்ட் ரெகார்டிங் என்று வேலை பார்த்தேன். "வெற்றிவிழா' முதல் "அபூர்வ சகோதரர்கள்' வரை பல படங்கள். சில மலையாளப்படங்களும் அதில் உண்டு..' என்கிறார் ராஜன்.
 அப்போதே அவருக்குள் கலையுணர்வும், புதிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் இருந்திருக்கிறது. மத்திய சர்வீஸ் கமிஷன் தேர்வில் ராஜன் வெற்றி பெற்று இந்திய தகவல் மற்றும் செய்தித் தொடர்பு அமைச்சகத்துக்குப் போனார். ஏராளமான டாகுமென்டரி படங்களில் பணி செய்தார்.
 ""ஆர். வெங்கட்ராமன் குடியரசுத்தலைவராக இருந்த போது அவருடன் டாகுமென்டரி செய்திப் படமெடுக்கும் காமிராமேனாக சீன நாடு சென்றேன். வி.பி. சிங், நரசிம்ம ராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போது, அவர்களுடன் ஃபிலிம் டிவிஷன் சார்பில் பங்களாதேஷில் நடந்த சார்க் மாநாட்டுக்கும், ஐ.நா. பாரீசில் நடத்திய காந்தி விழாவுக்கும் போயிருக்கிறேன்'' என்கிறார் ராஜன்.
 விளம்பரப்பட உலகில் பணியாற்றியபோது ஏராளமான படங்கள் தயாரிக்க உதவியிருக்கிறார். ஒரு படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் காமிராமேன் ஆகப் பணியாற்றினாராம். அது ஓர் ஆயுர்வேத சோப்புக்கான விளம்பரம். துளசியையும் மஞ்சளையும் கலந்து தயாரித்தால்தான் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தில் அது விற்பனையாகும். மக்கள் எதை ஏற்பார்கள் என்று அறிந்திருக்க வேண்டும். விளம்பரப்படங்கள் தயாரிப்பது எளிதல்ல...'' என்கிறார் மதுரைக்காரரான ராஜன்.
 இவர் வண்ணமயமாக வரையும் ஓவியங்கள் இவருடைய கற்பனை வளத்தைப் பறை சாற்றுகின்றன. எனக்கு குரு என்று யாரும் இல்லை. எனக்கு ஆதாரமாக எந்தப் பயிற்சியும் கிடையாது. நானாக வரைந்து வரைந்து உருவாக்கிய வண்ண ஓவியங்கள் இவை.
 வித்தியாசமாக இருக்கின்றன. வண்ணங்கள் பல பிணைந்திருக்கின்றன. வெவ்வேறு ஆழமான வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று இணையும் போது அவை உருவாக்கும் கவர்ச்சி, தனித்தன்மையோடு இருக்கிறது. பார்த்தால் சந்தோஷம் வரணும். வண்ணமயமாக, மகிழ்ச்சிகரமாக இருக்க வேணும் என்று நினைப்பவன் நான். அதனால்தான் அந்த வண்ணங்களை அப்படியே சேர்த்து இணைக்கிறேன்...'' என்கிறார் ராஜன். இவர் எடுத்த புகைப்படங்கள் இவை ஓவியமா அல்லது புகைப்படங்களா? என்ற கேள்வியை எழுப்புகின்றன.
 திருவலஞ்சுழி, திருவானைக்காவல், தாராசுரம் கோயில் படங்கள் "லைட் அன்ட் ஷேட்' அம்சத்தில் கண் முன்னே நாம் பார்ப்பது போல் இருக்கின்றன.
 ""கோயிலுக்குப் போனால் அரைமணி ஒருமணி நேரம் பார்த்துக்கொண்டே இருப்பேன். அந்தக் காட்சியில் ஆழ்ந்து ரசிப்பேன்'' என்கிறார் ராஜன்.
 ""அப்படியானால் சில்பி போன்று வரைந்து பார்த்தது உண்டா?''
 ""பத்துப் பன்னிரண்டு கோயில்கள், சிற்பங்கள் வரைந்திருக்கிறேன். அவ்வளவுதான். அவை தாராசுரம் கோயில் சிற்பங்கள்.
 ஆனால் அவற்றை எல்லாம் வரைய சாமுத்ரிகா லட்சணம் எல்லாம் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். புருவம் ஏறி இருக்க வேண்டுமா, இறங்கி இருக்க வேண்டுமா? என்பதெல்லாம் அறிந்திருக்க வேண்டும்...'' என்கிறார்.
 கலை உணர்வுடன் காமிராவைக் கையாளும்போது, காட்சிகள் ஓவியமாக மாறிவிடுகின்றன. கோயில் தூண்களின் நிழல் இருக்கட்டும். அந்த அணில், புகைப்படமாகவா தெரிகிறது? ஒரு கிளையில் உயிரோடு இருப்பது போல் அல்லவா இருக்கிறது!
 ராஜன் கோபாலகிருஷ்ணனின் ஓவியக் கண்காட்சி சென்னை கே.கே. நகர் லக்ஷ்மணசாமி சாலையில் உள்ள அசலம் ஆர்ட் கேலரியில் இம்மாதம் 26ஆம் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →