மேற்கத்திய இசைக்கு நடனமாடும் குதிரை!
மிகவும் அழகாக, சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கண் சிமிட்டாமல் உற்று நோக்கும் வகையில் இருந்தது அந்த நாட்டியக் குதிரை.
மிகவும் அழகாக, சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கண் சிமிட்டாமல் உற்று நோக்கும் வகையில் இருந்தது அந்த நாட்டியக் குதிரை. அதன் நடன அழகே அழகு.
ராமநாதபுரத்தில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடக்கிறது. மணமகன் வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் திருமண மண்டபத்தை நோக்கி மேளதாளங்களுடன் அழைத்து வரப்படுகிறார். ஊர்வலத்தின் முன்னே கேரள செண்டை மேளத்தினரின் வாசிப்புக்கு ஏற்ற வகையில் அந்த நாட்டியக் குதிரை நடனம் ஆடிக்கொண்டே வந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்ததும் இந்த நாட்டியக் குதிரையை வளர்த்து, பயிற்சியளித்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா, ஒப்பிலான் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த அன்வரிடம் பேசினோம்:
""எனக்கு 12 வயது இருக்கும் போதே குதிரைகள் மீது ஒரு தணியாத ஆர்வம் இருந்தது. அப்போதிருந்தே ஒரு குதிரையை வாங்கி அதை செல்லப் பிள்ளையாக வீட்டில் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. நான் படித்தது, வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர் தான். எனது தாயகம் இந்தியா. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டுப் போவேன். அந்த மாதிரி ஒரு தடவை என்னுடைய சொந்த கிராமமான ஒப்பிலானுக்கு வந்திருந்தபோது ஒரு வசதியானவர் வீட்டுக் கல்யாணத்தில் நாட்டியக் குதிரை வந்து ஆடியது. அது ஊரைவிட்டுப் போகும்வரை அதன் பக்கத்திலேயே நின்று வீட்டுக்கே போகாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எப்படி ஆடுகிறது என்று பார்த்தேன்.
நாமும் இதே மாதிரி ஓர் அழகான குதிரையை வாங்கி கல்யாணத்துக்கு அழைத்துச் சென்று நாட்டியம் ஆட வைத்து, நிறையச் சம்பாதிக்கலாம் என்று நினைத்து ஒரு வெள்ளைக் குதிரையை வாங்கினேன்.
அந்தக் குதிரையை நான் ஆடப் பழக்கினேன். அதைக் கொஞ்சம், கொஞ்சமாக கோவில் திருவிழாக்களுக்கும்,கல்யாணங்களுக்கும் அழைத்துக் கொண்டு போக ஆரம்பித்தேன். சிங்கப்பூர் போகும் போது வாங்கிய குதிரையை விற்றுவிடுவேன். மீண்டும் இந்தியா வரும் போது குதிரையை வாங்கி, அதைப் பழக்குவேன்,
இது மாதிரி மொத்தம் 4 குதிரைகளை வாங்கிவிட்டேன். இது நாலாவது நாட்டியக் குதிரை.
பொதுவாக உதைக்கிறதும்,கடிக்கிறதும் குதிரையின் குணம். ஆனால் இந்தக் குதிரை கடிக்கவோ, உதைக்கவோ செய்யாது. சொல்லிக் கொடுத்தவுடனே புரிந்து
கொண்டது.
இதனுடைய கம்பீரமான தோற்றம்,காந்தப் பார்வை,ஆஜானுபாகுவான உயரத்துடன் கூடிய அழகு, எனது மனைவி மற்றும் குழந்தைகளோடு பாசமாக விளையாடுவது இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால் இந்தக் குதிரை மேல் எனக்கு ஒரு பாசம் ஏற்பட்டுவிட்டது. இந்தக் குதிரைக்கு மும்தாஜ் என்று பெயர்
வைத்தோம்.
இதை பஞ்சாப்பில் வாங்கினேன். விலை ரூ.3லட்சம். இது நொக்கராங்கிற ரகம். உடம்புல எந்த இடத்துலேயும் புள்ளியோ, கருப்போ இருக்காது. பியூர் ஒயிட். இந்தக் குதிரைக்கு ஏற்கெனவே ஓரளவுக்கு நாட்டியமும் தெரிந்திருந்தது. ஓரளவுக்கு ஹிந்தியில் சொல்வதைப் புரிந்து கொள்ளும் திறனும் இருந்தது. இப்போது ஹிந்தியும், தமிழும் கலந்த கட்டளைகளைப் பிறப்பிப்பேன். அதற்கேற்றவாறு நடனமாட பயிற்சியளித்துள்ளேன்.
காரட், அருகம்புல், கொள்ளுப் பயிறு,பார்லி தவிடு, சிறிதளவு சோள மாவு கலந்த கோதுமை தவிடு இவற்றையெல்லாம் உணவாகக் கொடுத்து பாதுகாத்து வருகிறேன். பொதுவாகக் குதிரை நிற்கும் போது படுக்கச் சொன்னால் படுக்காது. ஆனால் நான் இதை படு என்று சொன்னவுடனே தரையில் படுத்துவிடும். முக்கியப் பிரமுகர்களுக்கு வணக்கம் சொல்லும், டேபிள், தாம்பாலத்திலும் நாட்டியம் ஆடும். நான் கடிவாளத்தைப் பிடித்திருந்தால் மட்டும் தான் நடனமாடும். வேறு யாராவது கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு ஆடச் சொன்னால் ஆடாது.
கேரளா,கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கு மும்தாஜை அழைத்துப் போகிறேன். பேண்டு வாத்தியம்,கேரள சென்டை மேளம்,நையாண்டி மேளம், வாடிப்பட்டி தப்புத்தாளம் உள்ளிட்ட எந்த மேளத்துக்கும் நாட்டியமாடும். தெம்மாங்குப் பாடல்கள், சினிமாப் பாடல்கள் உள்பட மேற்கத்திய இசைக்கும் நடனமாடும். "வால மீனுக்கும்,விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' என்ற பாட்டு மும்தாஜ்க்கு மிகவும் பிடித்த பாட்டு. இந்தப் பாட்டுக்கு ரொம்ப சந்தோஷமாகத் துள்ளிக் குதித்து ஆடும். இது என் மீது வைத்திருக்கிற காதலால் நான் சிங்கப்பூர் போவதையே மறந்துவிட்டேன்'' என்கிறார் அன்வர்.