ஞாயிறு கொண்டாட்டம்

வெங்காயத்தின் விலையைக் குறைப்பது எப்படி?

கடந்த சனிக்கிழமை. அடை மழையால் சென்னையின் பகுதிகள் எல்லாம் குளிர்ந்திருந்த மாலைப் பொழுதில் வாணி மஹாலிலோ இடி, மின்னலுடன் கூடிய

பா. சரவணகுமரன்

கடந்த சனிக்கிழமை. அடை மழையால் சென்னையின் பகுதிகள் எல்லாம் குளிர்ந்திருந்த மாலைப் பொழுதில் வாணி மஹாலிலோ இடி, மின்னலுடன் கூடிய அரசியல் புயல் வீசிக்கொண்டிருந்தது. துக்ளக் சத்யாவின் கதை வசனத்தில், டி.வி. வரதராஜனின் நாடக ஆக்கம், இயக்கத்தில், யுனைடெட் விஷுவல் உருவாக்கியிருந்த ""இது நம்ம நாடு'' நாடகத்தில் இடம்பெற்றிருந்த அரசியல் நையாண்டிதான் மழையின் குளிர்ச்சியையும் தாண்டி அனல் வீசியது.
 ""ஒரு செருப்பு அறுந்து நடக்குறவங்களைப் பார்த்திருக்கேன். அறுந்த ரெண்டு செருப்போடும் நடக்கிறவங்க நீங்கதான்'' என்று மனைவி பாக்கியம் கிண்டல் செய்யும் அளவிற்கு ஜவுளிக் கடையில் பில் போடும் வேலை பார்க்கும் வறுமை நிலையில் இருப்பவர்
 பட்டாபிராமன்.
 அவருக்கு தாத்தாவின் சொத்திலிருந்து திடீரென 25 கோடி ரூபாய் கிடைக்கிறது. அதை வைத்து என்ன செய்வது என்று யோசிக்க, முதலில் படம் எடுக்கிறார்கள். அதற்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகள். பிறகு பத்திரிகை தொடங்குகிறார்கள். அதற்கும் அதே நிலை. பிறகு அரசியல் கட்சி தொடங்க, அதன் பின் நடக்கும் நிகழ்வுகளே நாடகத்தை இறுதி வரை கலகலப்பாகவும், கருத்தோட்டத்துடனும் நகர்த்திச்
 செல்கிறது.
 பட்டாபிராமனுக்கு 25 கோடி ரூபாய் பணம் கிடைத்ததும், உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு உபசரிப்பதும், பட்டாபிராமன் உட்கார நாற்காலி போடுவதும், பணம் இன்னும் கைக்கு வரவில்லை என்று தெரிந்ததும் பட்டாபிராமன் உட்காரும் நேரத்தில் நாற்காலியை எடுப்பதும், பட்டாபிராமன் விழுவதும் குபீர் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்.
 தனது நண்பர் ராமசேஷனுடன் இணைந்து படம் எடுக்கும் பட்டாபிராமன் அதற்கு "பிளாட்ஃபாரம்' என்று தலைப்பு வைக்கிறார். ""அப்பதான் படம் சீக்கிரம் முடியும். மெட்ரோ ரயில்னு டைட்டில் வைச்சா சீக்கிரம் முடியாது'' என்று அதற்கு விளக்கம் சொல்லும் போது அரங்கு நிறைந்த கைத்தட்டல்கள். பிளாட்ஃபாரத்தில் வசிப்பவர்கள் சார்பாக ஒருவர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலாட்டா செய்வது நம்மை சிரிக்க வைக்கிறது.
 டி.வி. பேட்டியைப் பார்த்துவிட்டு ஏழைகள் முன்னேற்றக் கழகத் தலைவர் அய்யாசாமியின் ஆட்களான கந்தசாமியும் குப்புசாமியும் பணம் கேட்டு மிரட்ட, திரைப்பட ஆசையை விட்டுவிட்டு "தண்டசோறு' என்ற தலைப்பில் பத்திரிகை நடத்த முடிவு செய்கிறார்கள் பட்டாபிராமனும், ராமசேஷனும். பரம ஏழைகள் முன்னேற்றக் கழகத்தின் மூத்த அமைச்சர் முருகேசனைப் பற்றி எழுதிவிட, பத்திரிகை அலுவலகம் நொறுக்கப்படுகிறது. அதன்பிறகுதான் 25 கோடி ரூபாயில் மிச்சமுள்ள தொகையைக் கொண்டு அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற தலைப்பில், அதாவது அ.பா.மு.க. என்ற பெயரில் பட்டாபிராமனும் ராமசேஷனும் கட்சி தொடங்கு
 கிறார்கள்.
 பத்திரிகையாளர் சந்திப்பில் ""நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எந்தத் தொந்தரவும் செய்யமாட்டோம். ஒரு ஓரமாக நாங்கள் ஆட்சி நடத்திக்கொண்டிருப்போம். மக்கள் ஒரு ஓரமாக அவர்களின் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்'' என்று சொல்வதாகட்டும்,
 ""வெங்காயத்தின் விலையைக் குறைக்க வெங்காயத்தை யாரும் சாப்பிடக்கூடாது என்று சட்டம் போடுவோம். மீறி சாப்பிட்டால் ஊதச் சொல்லுவோம். வாசம் வந்தால் ஜெயிலில் போடுவோம்'' என்பதாகட்டும், ""டாஸ்மாக் மாவட்டம் ஏற்படுத்துவோம்'' ""தமிழ் வளர்ச்சிக்கு 9 ஆயிரம் அடி உயரத்தில் ஒளவையாருக்கு சிலை வைப்போம். பள்ளிகளில் இங்கிலீஸ் பாடத்தை தமிழில் நடத்தச் சொல்வோம்'' என்று கூறுவதாகட்டும்... பட்டாபிராமனும், ராமசேஷனும் வசன உச்சரிப்பில் கைத்தட்டல் வாங்குகிறார்கள்.
 இறுதியில் ரெய்டில் சிக்கி குற்றவாளிக் கூண்டுகளில் நிற்கும் போது அய்யாசாமியையும், முருகேசனையும் பட்டாபிராமனும், ராமசேஷனும் கேட்கும் கேள்விகள் சிந்திக்க வைக்கின்றன. ""கள்ள ஓட்டு போட்டா ஒரு வருடம் ஜெயில், நல்ல ஓட்டு போட்டா ஐந்து வருடம் ஜெயில்'' என்ற வசனம் நல்ல பஞ்ச். என்றாலும் தொடர்ச்சியான வசனங்களில் தென்படும் பிரச்சார நெடி நாடகத்தின் இயல்பைக் குறைக்கிறது.
 பட்டாபிராமானாக டி.வி. வரதராஜனும், ராமசேஷனாக சங்கர் குமாரும் சிறப்பாக நடித்துள்ளனர். பாக்கியமாக நடித்துள்ள துளசி காட்சிக்குத் தகுந்தாற்போல் வசன உச்சரிப்பில் வித்தியாசம் காட்டுகிறார். எம்.பி.யாக தேர்வு பெற்ற கணவனை "அண்ணன் வாழ்க அண்ணன் வாழ்க' என்று சொல்வதாகட்டும், டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் போதாகட்டும், இயல்பாக நடித்துள்ளார். அரசியல் ரவுடிகளாக வரும் கந்தசாமியும், குப்புசாமியும் சென்னைத் தமிழில் சிரிக்க வைக்
 கிறார்கள்.
 அய்யாசாமியாக நடித்துள்ள அனந்த பத்மநாபன், வழக்கறிஞராக நடித்துள்ள இளங்கோ, தண்டபாணி மாமாவாக நடித்துள்ள பின்னி ராமச்சந்திரன், அபேசிங்காக நடித்துள்ள ராமானுஜம் உட்பட யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஆங்காங்கே பாரதியின் பாடல்களையும், 25 கோடி ரூபாய் பற்றிய காட்சிகள் வரும் போதெல்லாம் ""காசு பணம் துட்டு மணி மணி'' பாடலையும் ஒலிக்க விட்டது சுவாரஸ்யம். பின்னணி இசையும் ""இது நம்ம நாடு'' நாடகத்திற்கு வலு சேர்க்கிறது.
 இந்தக் கலைஞர்களின் திறனோடு, துக்ளக் சத்யாவின் வசனமும் இணைந்து பாரபட்சம் பார்க்காமல் தற்கால அரசியல் நிகழ்வுகளை "தகர அடி' அடித்
 திருக்கிறது.
 நாடகத்தின் தொடக்கத்தில் சொன்னதுபோல் ""இதுவா நம்ம நாடு'' என்ற நிலை மாறி ""இது நம்ம நாடு'' என்று பெருமைப்படும் காலம் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது இந்த நாடகம்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

கத்தாரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: ஹமாஸ் தலைவர்கள் பலி?

ஆசியக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாததன் காரணம் இதுதானா? அமித் மிஸ்ரா கூறுவதென்ன?

SCROLL FOR NEXT