முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தேசியத்தை நினைவூட்டும் திலகர் வித்யாலயா பள்ளி!

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சியில் கிராமியச் சூழலில் கல்வி போதிக்கும் திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கல்லிடைக்குறிச்சியில் கிராமியச் சூழலில் கல்வி போதிக்கும் திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
 இப் பள்ளி 1911-ஆம் ஆண்டு 210 மாணவர்களுடன் நடுநிலைப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. எஸ்.எஸ். சங்கரய்யர், ஆர்.எஸ்.ஏ. லெட்சுமணஅய்யர், ஜி. ராமசேஷ அய்யர், ஏ. ராமுஅய்யர், கே.எஸ். கனகசபாபதி பிள்ளை ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் இந்தப் பள்ளியை நடத்தி வந்தனர்.
 5-ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு இப் பள்ளி ஆரம்பத்தில் ஜார்ஜ் மிடில் ஸ்கூல் என அழைக்கப்பட்டது. 3 ஏக்கரில் அமைந்துள்ள இப் பள்ளிக்கு 12.12.1911-இல் அப்போதைய சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் அடிக்கல் நாட்டினார். பள்ளிக்கு அரசு மானியமாக ரூ.12,625-ஆம் வழங்கப்பட்டது. அரசு மானியம் மற்றும் செல்வந்தர்களின் நிதி உதவியுடன் ரூ. 26,000 செலவில் பள்ளிக்கு கட்டடம் கட்டப்பட்டது.
 பள்ளியை நிர்வகிக்க எஸ்.எஸ். சங்கரய்யர், ஆர்.எஸ்.ஏ. லெட்சுமணஅய்யர், ஜி. ராமசேஷ அய்யர், ஏ. ராமுஅய்யர், கே.எஸ். கனகசபாபதிபிள்ளை ஆகிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு "கல்லிடை வித்யா சங்கம்' என்று அழைக்கப்பட்டது.
 இப் பள்ளியை தேசிய கல்விக் கூடமாக மாற்ற நடவடிக்கை எடுத்தனர். தேசிய கல்விக் கூடமாக மாற்ற வேண்டுமானால் அரசு வழங்கிய மானியத் தொகையை திரும்பச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அத்தொகை திரும்பச் செலுத்தப்பட்டது.
 பள்ளிக்கு தேசியத் தலைவர் பாலகங்காதர திலகரின் பெயரை இணைத்து திலகர் வித்யாலயம் என பெயரிடப்பட்டது. பள்ளியில் கல்வி முறை மாற்றப்பட்டது. இங்கு பயின்ற மாணவர்களுக்கு பிற பாடங்களுடன் கைராட்டினம் சுற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
 1919-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் வித்யா சங்கம் அங்கீகரிக்கப்பட்டது.
 நாளடைவில் தேசிய கல்வி அளித்து வந்த இப் பள்ளியின் மீது ஆங்கிலேய அரசுக்கு கோபம் ஏற்பட்டு, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. பள்ளிக்கு வழங்கப்பட்டு வந்த அரசு மானியமும் நிறுத்தப்பட்டது.
 இதையறிந்த கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கரய்யர், லெட்சுமிஅம்மாள், யக்ஞேசுவரசர்மா, கோமதிசங்கரதீட்சிதர், தினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் ஆகியோர் பள்ளியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என முயற்சி செய்தனர். (ஏ.என். சிவராமன் இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்).
 அரசு உதவியின்றித் தவித்த இப் பள்ளிக்கு ஊர்ப் பொதுமக்கள் பலர் உதவி செய்தனர். இருப்பினும் பள்ளியைத் தொடர்ந்து நிர்வகிக்க முடியாமல் திணறினர். அரசின் உதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி 1931-ல் ஜார்ஜ் மிடில் ஸ்கூல் என பெயர் மாற்றப்பட்டது.
 தொடர்ந்து வித்யா சங்கத்தின் கடும் முயற்சியால் இப் பள்ளி 1945-ல் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகச் செயல்படத் தொடங்கியது.
 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இப் பள்ளிக்கு மீண்டும் "திலகர் வித்யாலயம்' என பெயர் சூட்டப்பட்டது. 1980-ல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1981-இல் ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டது. திலகர் பெயரைச் சூட்டி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பொன்விழா கொண்டாடப்பட்டது.
 1919-ஆம் ஆண்டு முதல் "வித்யா சங்கம்' நிர்வகித்து வரும் இப் பள்ளியில் தற்போது 2100 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 42 வகுப்புகளுடன் பள்ளி இயங்கி வருகிறது.
 கல்லிடைக்குறிச்சி அருகே பொன்மாநகர் காலனியில் பள்ளி விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு லோகமான்ய பாலகங்காதர திலகர் மினி விளையாட்டு மைதானம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய 7.94 ஏக்கர் நிலம் பள்ளி சார்பில் அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
 இப் பள்ளியின் நூற்றாண்டு விழா இம் மாதம் 23-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை 6 தினங்கள் நடைபெறுகிறது.
 நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் பள்ளியில் நூற்றாண்டு நினைவுக் கட்டடம், நினைவு வளைவு கட்டப்பட்டுள்ளது. பள்ளியை கே.எஸ். சங்கரசுப்பிரமணியன் 1973-ஆம் ஆண்டில் இருந்து செயலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →