முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தலைமுறைக்கும் நிலைத்திருக்கும் ஓவியங்கள்!

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலையில் ஒரு சிறிய 6 அடிக்கு 6 அடி அளவுள்ள பெட்டி போன்ற கடையில் ஒருவர் மிகவும் நுணுக்கத்துடன் ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார்.

Updated On : 9 ஜூன், 2013 at 8:42 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:37 PM

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலையில் ஒரு சிறிய 6 அடிக்கு 6 அடி அளவுள்ள பெட்டி போன்ற கடையில் ஒருவர் மிகவும் நுணுக்கத்துடன் ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்த போதுதான் தெரிந்தது, அவர் வரைந்து கொண்டிருந்தது தஞ்சாவூர் பாணியிலான ஓவியங்கள் என்று.
 வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன், கஜலட்சுமி, ஊஞ்சல் ராதாகிருஷ்ணன், இலை கிருஷ்ணன், ராமர் பட்டாபிஷேகம், விநாயகர், ஆண்டாள், பெருமாள், தர்பார் கிருஷ்ணர் உள்ளிட்ட ஏராளமான உருவங்களை தஞ்சாவூர் ஓவிய முறையில் வரைந்து விற்பனைக்கு வைத்திருந்தார். ஒவ்வொரு படமும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கின்றன.
 பொதுவாக, தஞ்சாவூர் ஓவியம் என்பது மிகவும் நேர்த்தியாகவும், மிகவும் கவனத்துடனும் வரைய வேண்டிய ஒரு கலை. இந்த ஓவியங்களை வரைவதற்கு அதிக பொறுமையும், ஓவியத்தில் நுணுக்கங்களும் அறிந்திருக்க வேண்டிய அவசியமானது.
 சாதாரணமாக வரையப்படும் ஓவியம்போன்று இல்லாமல், இதில் பல்வேறு நுண்ணிய வேலைப்பாடுகளும், தங்க இழைகளும், வண்ணக் கற்களும் பதிக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது. இந்த வகை ஓவியங்களின் விலை சற்று கூடுதல் தான் என்றாலும், இது இருக்கும் இடத்தின் அழகை மேலும் மெருகூட்டும். இந்த ஓவியங்கள் காண்போரின் கண்களைக் கவர்ந்திழுக்கும் வல்லமை பெற்றது என்றால் அது மிகையல்ல.
 ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரான எஸ்.சுதாகர். இனி சுதாகர்....
 சிறு வயது முதலே ஓவியத்தில் அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வாங்கியுள்ளேன். அதன் பின்னர் தஞ்சாவூர் ஓவியம் கற்றுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள செந்தில்குமார் என்பவரிடம் இதனைக் கற்றுக் கொண்டேன். பல ஆண்டுகள் அவரிடம் கற்றுக் கொண்டு விட்டு, தற்போது தனியாக இந்த ஓவியங்களை வரைந்து வருகிறேன்.
 கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனது ஓவியங்களைப் பார்த்து, மனைவி சத்தியபாமாவும், ஓவியம் வரைவதில் எனக்கு உதவிகளைச் செய்து வருகிறார். மெல்ல அவரும் இதனை கற்று வருகிறார் என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் சுதாகர்.
 தஞ்சாவூர் ஓவியம் வகையிலான ஓவியங்கள் குறைந்தபட்சம் 8 அங்குலத்துக்கு 6 அங்குலம் அளவில் தொடங்கி 20 அங்குலத்துக்கு 16 அங்குலம் வரையில் வரைந்து வருகிறேன். சிறிய படத்தை வரைய சுமார் நான்கு மணி நேரம் தொடங்கி பெரிய படத்துக்கு ஏறத்தாழ 2 நாள்கள் வரை தேவைப்படும்.
 பிளைவுட் அட்டையை உரிய அளவில் எடுத்துக் கொண்டு, அதில் கருவேல மரத்தின் கோந்து மற்றும் சில பொருள்களை கலந்து பூச்சு செய்து விட்டு, அதன் மீது பென்சிலால் ஓவியத்தை வரைய வேண்டும். ஓவியத்தை வரைந்த பின்னர், அந்த படத்தில் ஆடைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை புளியங்கொட்டை பசையைக் கொண்டு சாக் பவுடர் மூலம் ஒரு மேடான பகுதியை ஏற்படுத்தி, அந்த இடத்தில் தங்க இழைகளைக் கொண்டு (தங்க நிற பேப்பர்களும் பயன்படுத்துகின்றனர்) அலங்கரித்தும், வண்ணக் கற்களைப் பதித்து அழகுபடுத்தியும், பின்னர், அந்த உருவத்தின் முகம், கைகள், கால்கள் பிற பொருள்களுக்கு மிக நுணுக்கமாக மூலிகை வண்ணம் மற்றும் ஆயில் பெயிண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வண்ணம் தீட்ட வேண்டும். அதன் பிறகு இந்த படத்தை வைத்து கண்ணாடி கொண்டு பிரேம் செய்தால், மிகவும் அழகான தஞ்சாவூர் ஓவியம் கிடைக்கும் என தஞ்சாவூர் ஓவியத்தை வரையும் முறையை விவரிக்கிறார் சுதாகர். தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் இந்த ஓவியங்களை விற்பனைக்கு அளித்து வருகிறேன்.
 திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடை சிறியதாக இருந்தாலும், இவ்வழியாக வாகனங்களில் வரும் பலர் மாலை நேரங்களில் இறங்கி, ஓவியங்களைப் பார்த்து வாங்கிச் செல்கின்றனர். சிலர் தங்களுக்கு பிடித்த முறையில் புதிதாக செய்து தர ஆர்டரும் கொடுத்து விட்டுச் செல்கின்றனர்.
 ஓவியத்தில் நாட்டம் அதிகமானதால், மேற்கொண்டு படிக்கவில்லை, எனினும் சில இடங்களில் தஞ்சாவூர் ஓவியம் வரைதல் குறித்து பயிற்சியும் அளித்து வருகிறேன். இதற்கு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஓவியர் ராமானுஜம் உதவி வருகிறார்.
 இந்த ஓவியத்தின் அருமையும், பெருமையும் தெரிந்தவர்கள் இந்த ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர். ரூ.1,500 முதல் எத்தனை ஆயிரம் ரூபாய்களுக்கு வேண்டுமானாலும் (அதில் பயன்படுத்தும் தங்க இழை மற்றும் கற்களைப் பொறுத்து) இந்த ஓவியத்தை தயாரிக்க முடியும். மூலிகை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியம் தலைமுறைக்கும் புதிதுபோல் அப்படியே இருக்கும். அது தான் தஞ்சாவூர் ஓவியம் என்று முடித்தார் சுதாகர்.
 சுதாகரின் கலை தாகத்தில் உருவாகும் நேர்த்தியான தஞ்சாவூர் ஓவியங்களிலிருந்து கண்கள் அகல மறுத்தாலும், அவரின் கலைப் பயணம் தொடர வாழ்த்தி விடை பெற்றோம்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.