நல்லதோர்
டம்மீஸ் நாடகக்குழுவின் ஸ்ரீவத்ஸன் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதன் நுனி வரை ஆராய்ந்து பார்த்துவிடுவார். கதையில் ஒரு மையக் கருத்து இருக்கும். அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் வசனத்தில் ஆங்காங்கே அழுத்தமும் இருக்கும்.
டம்மீஸ் நாடகக்குழுவின் ஸ்ரீவத்ஸன் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதன் நுனி வரை ஆராய்ந்து பார்த்துவிடுவார். கதையில் ஒரு மையக் கருத்து இருக்கும். அந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் வசனத்தில் ஆங்காங்கே அழுத்தமும் இருக்கும். வெறுமனே சிக்க வைத்துவிட்டுக் கடையைக் கட்டிக்கொண்டு போகிறவரல்லர் அவர்.
தமிழ் மேடை நாடகங்களின் தரத்தை உயர்த்துவதற்காகவே உருவான ஸ்ரத்தா நாடக அமைப்புக்காக, ஸ்ரீவத்ஸன் வழங்கியிருக்கும் "நல்லதோர் வீணை', அவருடைய புதிய நாடகத்துக்குக் கிடைத்த அருமையான தலைப்பு. சின்னத்திரையில் ரியலிடி ஷோ நடத்துகிற கூத்தை அங்குலம் அங்குலமாகப் பாசோதித்துவிட்டுத்தான் கதையை அமைத்திருக்கிறார். வசனத்தின் கூர்மை குத்துவது மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கிறது.
குரல் வளம் உள்ள இளம் பாடகர்களைப் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லிவிட்டு, பெற்றோர் படும் அவஸ்தை, கைவிட்டுப்போகும் பணம், இழக்கும் நிம்மதி எல்லாம்தான் நல்லதோர் வீணையின் அடி நாதம். ராமரத்னத்தின் பெண் வர்ஷிணி, வீட்டுக் கொலுவில் பாடுவதைக் கேட்ட நண்பர் அவளை ஸ்பெஷல் சிங்கர் சீசன் 5இல் கலந்துகொள்ளத் தூண்டுவதில் இருந்து ஆரம்பமாகிறது சீரழிவின் பாய்ச்சல். பெண் சின்னத்திரையில் தோன்றுகிறாள் என்பதே பெற்றோருக்கு பிரம்மாண்ட சாதனையாக இருக்கும்போது, அவளுக்காக ஆரம்பத்தில் செலவழிக்கும் ஆடம்பரத்தை அவர்களால் தவிர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை மெல்ல மெல்ல அவர்களை நொக்கையில் படும் அவஸ்தை ஒரு புறம். வாய்ஸ் கல்ச்சர் என்றும் மூவ்மென்ட்ஸ் என்றும் காஸ்ட்யூம்ஸ் என்றும் அடித்துப் பிடுங்காத குறையாக ஆயிரக்கணக்கில் செலவு வைக்கும் கூத்து ஒரு புறம். பெண் நன்றாகப் பாடுகிறாள் என்பதற்காக அவளுடைய திறமைக்கு மட்டுமே மதிப்பு அளிக்கும் கட்டம் மாறி, சின்னத்திரையின் சூறாவளிப் பாய்ச்சலுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் போராட்டமான கட்டம் வரும்போதுதான் பெற்றோர் புரிந்துகொள்கின்றனர்.
அதை வெளிப்படையாக எடுத்துச் சொல்ல பழைய பாட்டு டீச்சர் வர வேண்டியிருக்கிறது
மேலோட்டமாகப் பார்க்கையில் கர்நாடக இசைக்கு வரிந்துகட்டாமலே வக்காளத்து வாங்குவது மாதி தெரியலாம். ஆனால் பெண் எத்தனை அழகாகப் பாடுகிறாள் என்ற பாசம் நிறைந்த பரவசம், அவள் ஒவ்வொரு ரவுண்டாக வென்று வருகையில் அவள் குரலிலும், உடை-நடை பாவனையிலும் படிப்படியான மாற்றங்களை உண்டாக்குகிற போது, அவர்களுக்கு அவை சாட்டையடியாக மாறுகின்றன. ஸ்ரீவத்ஸனின் முடிவு பெற்றோருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் உரைக்கிற மாதிரி அமைந்திருப்பது நாடகத்தின் உச்சம். நலங்கெடப் புழுதியில் நல்லதோர் வீணை எறியப்படவில்லை.
வசனத்தில் அசட்டுப் பிசட்டு நகைச்சுவை கிடையாது. நாசுக்கான நகைச்சுவை கைதட்டி ரசிக்க வைக்கிறது. சில இடங்கள் உண்மையிலேயே ரியலிடி ஷோக்களில் சிக்கிக்கொண்டு தவிக்கும் அப்பாவி ஆத்மாக்களை விழித்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்கிறது. கொலு செட் ஆகட்டும், வீட்டு முகப்பு செட் ஆகட்டும், சிங்கர் சீன் செட் ஆகட்டும் எல்லாவற்றிலுமே பிய்த்து உதறியிருக்கிறார் அவற்றை உருவாக்கிய கலைஞர்.
இங்கே எல்லாமே கொஞ்சம் பிளஸ், பிளஸ், பிளஸ்தான் என்று ஷோ நடத்துநர் சூரி சொல்வது, அப்படியொன்றும் அதிகப்படுத்தப்படாத வார்த்தை அல்ல என்று நம்ப வைக்கிறாரே ஸ்ரீவத்ஸன், அங்கேதான் அவர் வெல்கிறார்.
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அமரும் அரங்கை நிறைக்க வைக்க மட்டுமல்ல, ஐடி துறை வி.ஐ.பி.க்களையும், வைஜயந்திமாலா போன்ற கலையுலக ரசிகர்களையும், கே.பி. போன்ற இயக்குநர்களையும் ஈர்த்து உட்கார வைக்க முடிகிறதே, அதற்கே ஸ்ரீவத்ஸனுக்குப் பாராட்டைச் சொல்லலாம்.