கால்கள் இல்லாமலும் கார் ஓட்டலாம்!
சாலையில் நடந்து போகவே பயப்படும் காலம் இது. அந்த அளவுக்கு வாகன நெரிசல். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் "சர்புர்'ரென்று செல்லும் வாகன ஓட்டிகள் சாலைப் பயணத்தை ஆபத்து நிறைந்ததாக மாற்றியிருக்கிறார்கள்.
சாலையில் நடந்து போகவே பயப்படும் காலம் இது. அந்த அளவுக்கு வாகன நெரிசல். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் "சர்புர்'ரென்று செல்லும் வாகன ஓட்டிகள் சாலைப் பயணத்தை ஆபத்து நிறைந்ததாக மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில் சென்னையிலிருந்து தில்லி வரை காரை நிறுத்தாமல் செலுத்தி கின்னஸ் சாதனை செய்யத் திட்டமிட்டிருக்கிறார் ரவி. ஆம்பூர் அருகே பாலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவர். சிறுவயதில் போலியோ தாக்குதலினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட அவர், தனது காரை மாற்றுத் திறனாளிகள் இயக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து....
""இப்போது மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள் வந்துவிட்டன. 1991 இல் அப்படிப்பட்ட இரு சக்கர வாகனம் ஒன்று கூட இல்லை. நான் அப்போது வாங்கிய இரு சக்கர வாகனத்தில் இரு பக்கங்களிலும் சக்கரங்களைப் பொருத்தி மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும்விதமாக வடிவமைத்தேன். அதற்குப் பின்பும் பல இருசக்கர வாகனங்கள், கார்கள் வாங்கி அவற்றில் மாறுதல்கள் செய்து பயன்படுத்தியிருக்கிறேன்.
கடந்த ஆண்டு நான் வாங்கிய காரில் சில மாற்றங்களைச் செய்து இருக்கிறேன். இந்த மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்படி மாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளங்களில் தேடினேன். உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை.
கேரளாவில் திருச்சூர் அருகே முஸ்தபா என்பவர் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் காரை மாற்றியமைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைப் போய்ப் பார்த்தேன். ஆனால் அவர் மாற்றியமைத்த காரில் அதிக வேகத்தில் செல்ல முடியாது. சென்னை மாதவரத்தில் சங்கர் என்பவர் கார்களை மாற்றியமைக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவர் மூலமாக கோயம்புத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் எனது காரை மாற்றியமைத்தேன்.
என் போன்ற மாற்றுத் திறனாளிகளால் கால்களைப் பயன்படுத்த முடியாது. பிரேக் பிடிப்பது, ஆக்ஸிலேட்டரை அழுத்துவது, கிளட்ச்சைப் பயன்படுத்துவது எல்லாவற்றுக்கும் கால்களைத்தான் வழக்கமான காரில் பயன்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் கைகளைக் கொண்டு இயக்குமாறு மாற்ற வேண்டும். பிரேக் பிடிக்கும்போது கிளட்ச்சை வேலை செய்ய வைக்க வேண்டும்.
மாற்றியமைக்கப்பட்ட எனது காரில் பிரேக்கை அழுத்தியவுடன் தானாகவே கிளட்ச் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதுபோல கியர் மாற்றும்போதும் கிளட்ச் தானாக வேலை செய்யும். இதற்கு ஒரு சென்ஸôர் ஆக்ஸிலேட்டர் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
இடது கை பக்கத்தில் ஆக்ஸிலேட்டர், பிரேக், கிளட்ச், கியர் எல்லாவற்றையும் இயக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கார் விளக்கை "டிம் டிப்' செய்ய, மழை பெய்யும்போது வைப்ரேட்டரை இயக்க எல்லாம் வலது கை பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படி மாறுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு முறையான அங்கீகாரம் வாங்க வேண்டும். வாங்கவில்லை என்றால் ரோடு டாக்ஸ், எக்ûஸஸ் வரி, இன்சூரன்ஸ் போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரப்படும் விலக்கு கிடைக்காது. வாகனத்தை ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்க முடியாது. எனவே மாற்றியமைக்கப்பட்ட எனது வாகனத்துக்கு அங்கீகாரம் வாங்கினேன். டிரைவிங் லைசென்ஸýம் வாங்கினேன்.
இப்போதுள்ள காரில் கடந்த ஓராண்டில் மட்டும் 55 ஆயிரம் கி.மீ. பயணம் செய்திருக்கிறேன். தமிழ்நாட்டுக்குள் பல ஊர்களுக்குள் சென்று வந்திருக்கிறேன். அதுபோல இரவு நேரத்திலும் கூட கார் ஓட்டுவேன். கின்னஸ் சாதனைக்காக சென்னையிலிருந்து தில்லி வரை பயணம் செய்யப் போகிறேன். பெட்ரோல் போடுவதற்காகவும், டோல் ஃபிரீ உள்ள இடங்களிலும் மட்டுமே காரை நிறுத்துவேன். இதை கின்னஸ் சாதனைக்காக என நான் திட்டமிட்டிருந்தாலும் முக்கியமான நோக்கம், மாற்றுத் திறனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.
மாற்றுத் திறனாளிகளுக்கு டூ வீலர் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்குவதே இப்போது சிரமம். டிவிஎஸ் ஸ்கூட்டி வண்டி வைத்திருந்தால் மட்டுமே லைசென்ஸ் வாங்க முடியும் என்ற நிலையே உள்ளது. அந்த ஒரு வண்டியை மட்டுமே இப்போது அங்கீகரித்திருக்கிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளின் இரு சக்கர வாகனத்தில் பொருத்துவதற்குப் பயன்படும் கிட் பூனாவில் தயாரிக்கப்படுகிறது. அங்கே அதைப் பயன்படுத்துவதை அங்கீகரித்திருக்கிறார்கள். அந்த "கிட்'டை வேறு சில மாநிலங்களில் பொருத்தினால் அங்கீகரிப்பதில்லை. அப்படிப் பொருத்தப்பட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு அங்கே லைசென்ஸýம் தரமாட்டார்கள். மீறி ஓட்டினால் இன்ஸþரன்ஸ் கிடைக்காது. விபத்து ஏற்பட்டால் மிகச் சிரமமாகிவிடும்.
நான் சென்னை முதல் தில்லி வரை பயணம் செய்து கின்னஸ் சாதனை செய்தால், பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு, ஆலோசனைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.
இப்போதே காரில் மாற்றம் செய்து நான் பயன்படுத்துகிறேன் என்று கேள்விப்பட்ட பலர் என்னைத் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார்கள். 50 பேருக்கும் மேற்பட்டோர் என் ஆலோசனைகளைக் கேட்டு தங்களுடைய காரிலும் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்'' என்கிறார் ரவி.