முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சாகித்திய அகடமிக்குக் காரணம் நேருவா, ஆசாதா?

சாகித்திய அகடமியை சென்னையிலிருந்து பெங்களூருக்குக் கடத்திக்கொண்டு போகவிருந்ததைத் தடுத்து நிறுத்தி, சென்னையில் ஒரு கிளை அலுவலகம் இயங்கக் காரணமான

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:50 AM
பகிர்:

சாகித்திய அகடமியில் "சாகித்திய' என்பது சமஸ்கிருதச் சொல். "அகடமி' என்பது கிரேக்கச் சொல் என்றார் எழுத்தாளர் சா. கந்தசாமி. இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்ததுதான் இந்தியாவின் தலைமை இலக்கிய அமைப்பான சாகித்திய அகடமியின் பெயராயிற்று - என்றார் சா.க.

சாகித்திய அகடமியை சென்னையிலிருந்து பெங்களூருக்குக் கடத்திக்கொண்டு போகவிருந்ததைத் தடுத்து நிறுத்தி, சென்னையில் ஒரு கிளை அலுவலகம் இயங்கக் காரணமான ஈரோடு தமிழன்பனுக்கு நன்றியும் தெரிவித்தார் சா. கந்தசாமி.

சாகித்திய அகடமி 1954ல் தொடங்கப்பட்டது. இந்திய மொழிகள் எல்லாவற்றையும் இணைத்தால் இந்தியர்கள் எல்லோரையும் இணைத்த மாதிரி இருக்கும் என்று அன்றைய பிரதமர்

ஜவாகர்லால் நேரு நினைத்தாராம்.

அதன் விளைவாகத் தோன்றியதுதான் சாகித்திய அகடமி. இந்த சாகித்திய அகடமியின் ஐம்பத்தொன்பதாவது நிறுவன நாளை, செவ்வாய் மாலை பாரதிய வித்யா பவனில் கொண்டாடியபோது இன்னும் ஒரு வருடம் காத்திருந்தால் அறுபதாம் ஆண்டில் வைர விழா கொண்டாடியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.  ஒருவேளை அடுத்த ஆண்டு பிரமாதமாகக் கொண்டாட இது அச்சாரமாகவும் இருக்கலாம்.

தெலுங்கு எழுத்தாளர் மாலதி செந்தூர், தாம் புதுமைப்பித்தன், கலைஞர் கருணாநிதி, சிவசங்கரி ஆகியோரின் படைப்புகளைத் தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்குக் கொண்டு சென்றிருந்தாலும், தாம் தமிழில் பேசினால் நகைப்புக்கிடமாகிவிடும் என்று ஆங்கிலத்திலேயே சமாளித்துவிட்டார்.

அசோகமித்திரன் பேசும்போது, ""சாகித்திய அகடமி துவங்கக் காரணமானவர் அன்றைய மத்திய கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத் அவர்கள்தான். காந்திஜிக்கு மிக நெருங்கியவர் ஆசாத். அவர் எழுதிய "இந்தியா விடுதலை பெற்றது' என்ற நூலை எல்லோரும் படிக்க வேண்டும். ஆசாத் தனிமைச் சிறையில் இருந்த போது அவருக்கு வெளியுலகத்தைப் பார்க்க இருந்தது ஒரே ஒரு சன்னல்தான். அதன் வழியே அவர் நகரும் மேகங்களையும், பறவைகளையும், பார்த்து ரசிப்பாராம். அதைக் குறித்து அவர் "யோஜனா' இதழில் எழுதினார். அப்போது "யோஜனா'வுக்கு ஆசிரியர் குஷ்வந்த் சிங்'' என்றார் அசோகமித்திரன்.

ஈரோடு தமிழன்பன், ""சாகித்திய அகடமிக்குக் காரணகர்த்தா நேருதான்'' என்றார்.    தமிழன்பன் நிறைய யோசனைகள் சொன்னார். ""எல்லா தடவையும் தில்லியிலேயே பரிசு வழங்காமல், வேறு தலைநகர்களில் வழங்கலாம். கோவாவிலும் பெங்களூரிலும் ஒவ்வொரு முறை நடந்ததது. முந்தைய மூன்று வருடங்களில் வெளியான நூல்கள் என்று பரிசுக்கு உரிய நூலைத் தேர்ந்தெடுப்பதை விட, படைப்பாளியின் படைப்பை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்'' என்றார்.

ஒரு முறை நேரு, சாகித்திய அகடமிக்குள் நுழையும்போது, சற்றுத் தடுமாறிவிட்டாராம்.  உடனே பின்னால் வந்துகொண்டிருந்த இந்தி கவிஞர் தினகர் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டாராம். ""அரசியல் தடுமாறும்போது, இலக்கியம் தாங்கிப் பிடித்துக்கொள்ளும்...'' என்று நேரு அப்போது குறிப்பிட்டதை கவிக்கோ அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

""தில்லியில் இலக்கியக் கூட்டத்துக்கு பாகிஸ்தான் கவிஞர் பைஸ் அகமது பைஸ் வரவழைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் ஆனதும், அமைப்பாளர்கள் பிரதமர் இந்திரா காந்தியிடம் சொல்ல, அவர் உடனடியாக தொலைபேசியை

எடுத்து அதற்கான வேண்டுகோளை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து, அவரை வரவழைத்துவிட்டார்'' என்றார் அப்துல் ரகுமான்.

கவிஞர் மு. மேத்தா வாசித்த இரண்டு கவிதைகளுமே நன்றாக இருந்தன. ஒன்றின் தலைப்பு, "நாய் நாடு' இன்னொன்று, "செருப்புடன் கவிஞர் நடத்திய பேட்டி'. காரம், குணம், மணம் நிறைந்த கவிதைகளில் நக்கலும் நகைச்சுவையும் கலந்திருந்தன.

கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்பார் என்றார்கள். வரவேற்புரையில்கூட வந்துகொண்டிருக்கிறார் என்றார்கள். வராமலே போனார் வைரமுத்து. அவர் நாற்காலி மட்டும் கடைசிவரை காலியாகவே இருந்தது.

இராம. குருநாதன் வரவேற்புரை, அறிமுகவுரை, நன்றியுரை என்று மூன்று பணிகளையும் முழுமையாகச் செய்தார். பொன்னாடை போர்த்துகிறேன், பூமாலை சாத்துகிறேன் என்றெல்லாம் நேரத்தை வீணடிக்கவில்லை.  

சந்தேகம் மட்டும் தீரவில்லை. சாகித்திய அகடமிக்குக் காரணம் நேருவா, ஆசாதா?

முழு கட்டுரையைப் படிக்க →