முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அமெரிக்காவிலும் குடும்ப வன்முறை உண்டு!

வீட்டில் உள்ள பெண்களைக் குடித்துவிட்டு வந்து ஆண்கள் அடிக்கிறார்கள். போதைப் பழக்கம் அதிகமாக உள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:55 AM
பகிர்:

வீட்டில் உள்ள பெண்களைக் குடித்துவிட்டு வந்து ஆண்கள் அடிக்கிறார்கள். போதைப் பழக்கம் அதிகமாக உள்ளது. குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. இப்படியெல்லாம் சொன்னால், தெரிந்த கதைதானே இது? என்று நினைப்பீர்கள்.
 தெரிந்த கதைதான். ஆனால் இவை நடப்பது அமெரிக்காவில். ""என்றாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் பல நடவடிக்கைகளை அங்கே மேற்கொள்கிறார்கள்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த
 வழக்கறிஞர் செல்வகோமதி.
 
 அமெரிக்காவில் உள்ள அரசுத்துறையின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் கலாசாரப் பரிவர்த்தனைத் துறை, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்தது. அந்த ஒருவர்தான் செல்வகோமதி.
 ""இந்தியாவிலிருந்து நானும், இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களும் அமெரிக்காவுக்குச் சென்றோம். அங்கு சென்று குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை எவ்விதம் பாதுகாக்கிறார்கள்? பெண்களுக்கு எப்படிப்பட்ட சட்ட உதவிகள் தருகிறார்கள்? என்பனவற்றையெல்லாம் தெரிந்து கொண்டோம்
 நமது நாட்டில் கணவனால் தாக்கப்படும் ஒரு பெண் அதைத் தாங்கிக் கொள்கிறாள். பொறுத்துக் கொள்கிறாள். இதற்குக் காரணம் கணவனை நம்பி அவள் வாழ வேண்டியிருக்கிறது. அடிக்கிற கணவனிடம் இருந்து பிரிந்து வீட்டை விட்டு வெளியே சென்றால், அவளுக்குப் போக்கிடம் இல்லை. பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் அவளுக்குப் புகலிடம் அளிக்கத் தயங்குகிறார்கள். அமெரிக்காவில் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிறையத் தங்குமிடங்களை அங்கே வைத்திருக்கிறார்கள். இந்தத் தங்குமிடங்களை அரசே ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக கணவனுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
 அமெரிக்காவில் சட்டக் கல்லூரிகள் மாணவர்களின் மூலமாகப் பெண்களுக்கு சட்ட உதவிகளைச் செய்கிறது. அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த "வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் லா' என்ற சட்டக் கல்லூரிக்கு நாங்கள் சென்றோம். மாணவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதை நேரில் பார்த்தோம்.
 அமெரிக்காவின் சாண்டியாகோ, டால்லஸ், நியூயார்க் போன்ற நகரங்களில் நிறைய குடும்ப நீதி மையங்களைப் பார்த்தோம். இந்த குடும்ப நீதி மையங்களில் காவல்துறையினர் இருப்பார்கள். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரின் அடிப்படையில் அவர்கள் விசாரணை செய்வார்கள். கணவனின் தாக்குதலினால் ஏற்பட்ட உடல்ரீதியான பாதிப்புகளைச் சரி செய்ய மருத்துவமனையும் அங்கே உள்ளது. பெண்கள் தங்குவதற்கான இல்லமும் உள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சட்ட உதவி செய்யும் வழக்கறிஞர் குழுவும் உள்ளது. இவ்வாறு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் ஏற்பாடுகள் எல்லாமும் ஓரே இடத்திலேயே உள்ளன.
 குடும்ப வன்முறையால் தாக்குதலுக்குள்ளான ஒரு பெண் அமெரிக்காவில் ஒரு மருத்துவரைப் பார்க்கச் சென்றால், மருத்துவர் உடனே காவல்துறைக்குக்கு புகார் கொடுத்துவிடுகிறார். வழக்கைக் காவல்துறை பதிவு செய்து உடனே நடவடிக்கைகளில் இறங்குகிறது. நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவ்வாறு உதவி செய்ய ஒரு பிரிவே இயங்குகிறது.
 அமெரிக்கா வளர்ந்த நாடாயிற்றே, அங்கே குடும்ப வன்முறைகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறதா? } என்று கேட்கலாம். அமெரிக்காவில் படிக்காத பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் நீயா? நானா? என்ற ஈகோ அங்கே அதிகமாக உள்ளது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக மனோபாவங்கள் அங்கும் இருக்கின்றன. இவையெல்லாம் குடும்ப வன்முறை அமெரிக்காவில் அதிகமாக இருக்கக் காரணங்கள்'' என்கிறார் செல்வகோமதி.

 
 

முழு கட்டுரையைப் படிக்க →