முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பெண்களுக்காக பெண்களே தொடங்கிய வெப் டிவி!

சென்னையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தன்று குமுதினி, கௌரி, ஸ்ரித்திகா, சுதா, கீத்து என ஐந்து பெண்களால்,உலகில் முதன்முறையாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:55 AM
பகிர்:

சென்னையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தன்று குமுதினி, கௌரி, ஸ்ரித்திகா, சுதா, கீத்து என ஐந்து பெண்களால்,உலகில் முதன்முறையாக பெண்களுக்காக "ஸ்த்ரீ டிவி' என்ற வெப் டிவி துவங்கப்பட்டுள்ளது. இதை அறிந்து, அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர்களில் குமுதினி, ஸ்ரித்திகா இருவரும் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...

குமுதினி கூறியது ""பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் சம்பந்தப்பட்ட "சிநேகிதி' என்ற நிகழ்ச்சியை ஒன்பது மாதங்கள் தொகுத்து வழங்கி வந்தேன். பிறகு சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியைத் தொடர முடியவில்லை. அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது. ரதிபாலா என்பவர்தான் பெண்களுக்காக நாம் சேனல்  துவங்கலாமே? என்று ஐடியா கொடுத்தார். சேட்டிலைட் துவங்குவது என்றால் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வளவு வசதி எங்களிடம் இல்லை. அதனால் வெப் டிவி துவங்க முடிவு செய்தோம். அப்போது என் தோழிகளும் ஆர்வத்துடன் நாங்களும் பங்கு எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். பின்பு 5 பேர் கொண்ட குழுவாக உருவானோம்.

வெப் டிவிக்கான நிறைய விஷயங்களைப் பற்றி கலந்து ஆலோசித்தோம். அதன்பிறகு 6 மாதம்  கல்லூரிப் பெண்கள், உழைக்கும் மகளிர், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பு பெண்களிடமும் ஒரு சர்வே எடுத்தோம்.

பிறகு உலகம் முழுக்க ஆராய்ந்ததில் பெண்களுக்கு என்று எந்த ஆன் லைன் சேனலும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டோம். அந்த நேரத்தில் பத்திரிகை ஒன்றில் சென்னையில் 7.5 சதவீதம் மக்களில் 4.5 சதவீதம் பேர் இண்டர்நெட் உபயோகிப்பதும் தெரியவந்தது. அதனால் தைரியமாக இதில் இறங்கினோம்'' என்றார்.

ஸ்ரித்திகா கூறியதாவது ""எங்கள் வெப் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும், உபயோகம் உள்ள தரமான நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். உதாரணமாக, பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் பொட்டில் இருந்து காலில் அணிந்து கொள்ளும் மெட்டி வரை அறிவியல் ரீதியாக என்ன மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன என்பது நிறைய பேருக்கு தெரியாது. அதை உணர்த்தும்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

அதன்படியே ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொகுத்துள்ளோம். அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆரோக்கியமே அழகு, ஆன்மீக அறிவியல், குயிக் டிபன், குயின் பீ, உணவே மருந்து,வாயாடும் பெண்கள், என் உயிர் தோழி, பெண்ணுரிமை, பொன்மகள், தொழில் முனைவோம், பிள்ளை நிலா, ஆஹா எத்தனை அழகு போன்ற 24 நிகழ்ச்சிகளை உருவாக்கி உள்ளோம்.  மார்ச் 8 பெண்கள் தினத்தன்று எங்களது "ஸ்த்ரீ வெப் டிவி'யை தொடங்கியுள்ளோம்.  அருணா விஸ்வநாதன், மதுவசந்தி மேலும் பல துறைகளில் சாதனை புரிந்த பெண்மணிகள்  தொடங்கி வைத்தனர்.

 வெப் டிவி தொடங்கிய பத்து நாள்களிலேயே யு.கே.வில் வசிக்கும் தமிழ்ப்பெண் ஒருவர் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு பாராட்டுகளைத் தெரிவித்தார். சிலர் பங்குதாரராக இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இவையெல்லாம் எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக நினைக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.