முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!

""காதுல, கழுத்துல இருக்குற நகை, இடுப்புல இருக்குற குழந்தை, குழந்தைகள் அணிந்திருக்கும் தங்கத் தாயத்து, தங்கசெயின், கால் கொலுசு இவற்றை ஜாக்கிரதையாகவும்,பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

""காதுல, கழுத்துல இருக்குற நகை, இடுப்புல இருக்குற குழந்தை, குழந்தைகள் அணிந்திருக்கும் தங்கத் தாயத்து, தங்கசெயின், கால் கொலுசு இவற்றை ஜாக்கிரதையாகவும்,பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் முந்தானையால் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை மூடிக் கொள்ளுங்கள். புகார்கள் இருந்தால் புறக்காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே காவல்துறை, உதவி செய்யக் காத்திருக்கிறோம். காவல்துறை உங்கள் நண்பன்'' என்ற அறிவிப்பினை தொடர்ந்து 50 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது செய்து வருகிறார் மைக் மூர்த்தி.
 இவரது சிம்மக்குரலை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கேட்டிராதவரே இருந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானவர். 64 வயதைத் தொட்டு விட்ட மைக் மூர்த்தி தனது வசீகரக் குரலால் காவல்துறையின் அறிவிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
 குரல் வளத்துக்காகவும், இவரது சேவைக்காகவும் இவரைப் பாராட்டாத காவல்துறை உயர் அதிகாரிகளே இல்லை எனலாம். இவரது செயலைப் பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் விருதுகளையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இவரது சொந்த ஊர் ராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் உள்ள ஆலப்புழி எனும் குக்கிராமம். இனி அவரிடம் பேசுவோம்:
 
 "" ராமேசுவரத்தில் ஒரு ஹோட்டலில் 1964இல் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்குப் பக்கத்துல இருந்த சொர்ண கணபதின்னு ஒரு எஸ்.ஐ., ஆடி அமாவாசைக்கு காவல்துறை மூலமா அறிவிப்பு செய்ய வர்றீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அறிவிப்பு செய்தேன். அப்ப ராமேசுவரம் வந்திருந்த ஐ.ஜி.அருள் என்னோட குரல் வளத்தைப் பாராட்டி ரூ.100 பரிசாகக் கொடுத்தாரு. அப்ப எஸ்.பி.யா இருந்த மோகன்தாசும் என்னைப் பாராட்டினார். அன்று முதல் இன்று வரை என்னோட அறிவிப்பு சேவையும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.
 1964ல் ராமேசுவரத்துக்கு பஸ் பாலம் இல்லை. அப்ப நான் அறிவிப்பு செய்யிறதுக்காகவே கமுதியில் இருந்து போலீஸ் ஜீப் மண்டபம் வந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் வரும். எனது குரல் தான் எனக்கு பலம். கோவில் திருவிழாவிற்கு வரும் எவரும் என்னோட குரலை கேட்காம இருந்திருக்க முடியாது. படிச்சிருக்கிறது பத்தாம் வகுப்பா இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அறிவிப்பு செய்வேன். திருவிழாவிற்கு வருவோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளாமல் தவறவிட்ட பின்னர் பதற்றத்துடன் வந்து என்னிடம் சொல்வார்கள். எனது அறிவிப்பைக் கேட்ட பக்தர்கள் குழந்தையைத் தேடிக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்து விடுவார்கள். பெற்றோரைத் தவற விட்ட குழந்தை எங்காவது தனியாக அழுது கொண்டிருந்தாலும் பக்தர்களோ அல்லது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களோ என்னிடம் வந்து ஒப்படைப்பார்கள். நான் குழந்தையின் பெயர், நிறம்,உடை,உடலமைப்பு ஆகியனவற்றை மைக்கில் சொல்லுவேன். தவறவிட்ட பெற்றோர்களும் எனது அறிவிப்பைக் கேட்டு என்னிடம் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு மனதார வாழ்த்துவார்கள்.
 இது போன்று 1964 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 50 வருடங்களில் சுமார் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எனது அறிவிப்பால் மீட்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்ற போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் எனது பற்கள் முழுவதும் விழுந்து விட்டன. இறைவன் அருளால் குரல் வளம் மட்டும் குறையவே இல்லை. பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை என்ற பழமொழியும் எனக்காகத்தான் வந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் இதுவரை இந்த சேவையை இலவசமாகவே செய்து வருகிறேன். தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்'' என்றார்.

 

முழு கட்டுரையைப் படிக்க →