ஞாயிறு கொண்டாட்டம்

மலைக் காட்டுக்குள் ஒரு பயணம்!

மலைகளில் இருந்துதான் ஆறுகள் உருவாகின்றன என்ற வரியைச் சொல்லிவிட்டு - சரி, மிகச்சரி, இருக்கலாம், தெரியவில்லை என

சா. ஜெயப்பிரகாஷ்

மலைகளில் இருந்துதான் ஆறுகள் உருவாகின்றன என்ற வரியைச் சொல்லிவிட்டு - சரி, மிகச்சரி, இருக்கலாம், தெரியவில்லை என 4 பதில்களைக் கொடுத்து பதில் சொல்லச் சொன்னால், மிகச் சரி என்ற பதிலைக் குறிப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். இதுதான் இன்றைய இளைய தலைமுறையின் இயற்கை குறித்த விழிப்புணர்வு.
 இந்தச் சூழலில்தான் மலைகளுக்குள், குறிப்பாக அடர்ந்த காடுகளுக்குள் இளைஞர்களை அழைத்துச் சென்று, ஆறுகளின் பிறப்பு பற்றியும், காடுகளில் விலங்குகள், மரங்களின் வாழ்க்கை குறித்து விளக்கும் பயிற்சி நீண்ட காலமாகவே நடைபெற்று வருகிறது.
 இதை ஒரு தவமாகவே மேற்கொண்டு வருகிறார் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த "ஓசை' அமைப்பின் தலைவர்
 கே. காளிதாசன்.
 திருச்சியிலிருந்து அண்மையில் 11 பேரைக் கொண்ட ஒரு குழு நீலகிரி மலைக்குச் சென்று திரும்பியிருக்கிறது. 3 நாள் பயணத்தில் அந்த மலைத்தொடரின் மிகச்சிறு பகுதி மட்டுமே அறிமுகப்படுத்த முடிந்திருக்கிறது.பவானி உற்பத்தியாகும் அத்திக்கடவுக்குள்தான் முதலில் நுழைந்திருக்கிறார்கள். அதன் பிறகு அவலாஞ்சியில் ஓர் இரவைக் கழித்துவிட்டு, அடுத்த நாள் பகலில் மலையேற்றம்.
 வழியே நரி, செந்நாய்க் கூட்டம், சிங்கவால் குரங்கு, காட்டு அணில், காட்டுப் பன்றியைப் பார்த்திருக்கிறார்கள். வனத்துறை அதிகாரி ஒருவரும் கூடவே சென்று சில இடங்களைக் காட்டி விவரித்திருக்கிறார்.
 இனி அவர்களே கூறுகிறார்கள்...
 
 ""நீங்கள் சாப்பிடும் சோற்றில் இந்த மலைக்கும் பங்கிருக்கிறது. காவிரியாற்றின் கிளை நதியான பவானி இங்கேதான் உற்பத்தியாகிறது என்று காளிதாசன் சொன்னபோது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது'' என்கிறார் சிரம் இளையோர் மன்றத் தலைவர் ஹரிபிரசாத்.
 ""இங்கே "வற்றிய' ஜீவநதிகளை மட்டுமே பார்த்துப் பழகிய எங்களுக்கு, அங்கே ஆண்டின் எந்த நாளும் பவானி வற்றியதில்லை என்று மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சொன்ன போது நாங்கள் மீண்டும் ஆச்சரியத்துக்குள்ளானோம்'' என்கிறார் அவர்.
 ""ஓரிரு மணி நேரங்களுக்கு முன்புதான் இந்த வழியே ஒரு புலி கடந்து சென்றிருக்கிறது, இதோ அதற்கான கால் தடங்கள் என்று வனத்துறை அதிகாரி எங்களுக்குக் காட்டினார். திக்கென்றிருந்தது'' என்கிறார் அந்த மன்றத்தின் செயலர் கோபி.
 ""ஆனால், வனவிலங்குகளை நாம் யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் ஒருக்காலும் அவை நம்மை ஒன்றும் செய்யாது, இன்னும் சொல்லப் போனால், நம் கண்ணில்படாமல் மறைந்து சென்றுவிடும் என்றெல்லாம் சொல்லித் தந்தார்கள்'' என்கிறார் அவர்.
 ""சில்லென்ற மலைகளுக்கு வந்து பூங்காவைப் பார்த்துவிட்டு, ஏரியில் ஒரு சுற்று வந்துவிட்டால் போதும் என்ற சுற்றுலா மனப்பான்மையை அகற்ற இதுபோன்ற சிறு முயற்சிகளை மேற்கொண்டால் போதும். அவர்களே தொடர்ந்து இயற்கையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிவிடுவார்கள்'' என்கிறார் குழுவை வழிநடத்திய பேராசிரியர் கி. சதீஷ்குமார்.
 ""ஓங்கி உயர்ந்த பட்ட மரத்தின் நடுவே ஒரு மரம் வளர்ந்திருப்பதைக் காட்டி, பறவைகளால் இந்த அற்புதம் நடந்திருப்பதைச் சொன்னார்கள். அந்த மரம் தனியே வளர்ந்திருந்தால் ஒரு வேளை யானைகள் ஒடித்திருக்
 கலாம். பட்டமரம்தான் இந்த மரத்தை வளர்த்திருக்கிறது. எனவே, காடுகள் வளர்ப்பில், அதன் தொடர்ச்சியில் இங்கே அகற்றப்படாமல் இருக்கும் பட்டமரத்துக்கும் பங்கு இருக்கிறது என்று விளக்கினார் காளிதாசன்'' என்கிறார் பரணிதரன்.
 நீலகிரி மட்டுமல்ல, மாநிலத்திலுள்ள எந்த மலையானாலும் அவை குறித்த குறிப்புகளைத் தயாராகவே வைத்திருக்கிறார் காளிதாசன். காட்டுயிர் இயக்கம் பற்றி தனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக கனரா வங்கிப் பணியைத் துறந்துவிட்டு "ஓசை' அமைப்பைத் தொடங்கியவர் அவர்.
 ""ரொம்ப தொலைவு வர வேண்டுமே? என சிரமப்படாதீர்கள் சார். திருச்சியிலிருக்கும் பச்சமலைக்குப் போகலாமா?'' என்றும் கேட்கிறார் காளிதாசன்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT