கின்னஸ் உடன்பிறப்புகள்!
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், சரோஜா தம்பதியருக்கு 4 மகன்கள்,ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன்களில் சுந்தரமும்,சங்கர நாராயணனும்
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், சரோஜா தம்பதியருக்கு 4 மகன்கள்,ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன்களில் சுந்தரமும்,சங்கர நாராயணனும் மற்றும் மகள் ரமா உள்ளிட்ட 3 பேருமே கின்னஸ் சாதனை புரிந்தவர்கள் அவர்களிடம் பேசுவோம்:
வாயில் 398 ஸ்டிராக்களை வைத்து கின்னஸ் சாதனை:
ஒரே நேரத்தில் வாயில் 398 ஸ்டிராக்களை அமுக்கி வைத்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்
சுந்தரம்.
""முக்கியப் பிரமுகர்கள்,பத்திரிகையாளர்கள் முன்பாக நிகழ்த்தினேன். சுமார் 100 ஸ்டிராக்களுக்கு மேலாக வாயில் வைப்பதே கடினம். ஆனால் நானோ தொடர்ந்து 6 மாத காலமாக இடைவிடாமல் பயிற்சி செய்தேன். ஸ்டிராக்களை அதிகமாகச் சேர்த்து வாயில் வைத்து அமுக்கும்போது அவை ஈறுகளில் குத்தி ரத்தம் வந்து விடும். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தேன்.
ஈறுகள் புண்ணாக இருக்கும் காலங்களில் எதையும் சாப்பிட முடியாது என்பதால் அதிக நாட்கள் சாப்பிடாமலும் இருந்துள்ளேன். மருந்து போட்டு குணமான பின்பு மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து கின்னஸ் சாதனை புரிந்தேன்.
எனக்கு முன்பு கடந்த 2008ல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த சைமன் எல்மோர் என்பவர் 364 ஸ்டிராக்களை வாயில் வைத்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதனை முறியடிக்கும் வகையில் நான் 398 ஸ்டிராக்களை ஒரே நேரத்தில் வாயில் வைத்து சாதனை புரிந்திருக்கிறேன்'' என்றார் சுந்தரம்.
ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை அனைத்து கின்னஸ் சாதனை புரிந்த சங்கரநாராயணன்:
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறேன். நான் ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அணைத்து கின்னஸ் சாதனை செய்தேன். இந்த விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தேன். இதற்கு மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து தேக்கி வைத்து வெளியே விடும் பிராணாயாமக் கலை மிகவும் அவசியம். இந்தக் கலையை எனது அண்ணனுக்கு பயிற்சியளித்த அதே யோகா மாஸ்டர் பத்மனாபனே எனக்கும் சொல்லிக் கொடுத்தார். வாயால் ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பது என்பது சிரமமானதுதான்.
இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட்லேமி என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டு 117 மெழுகுவர்த்திகளை ஒரே மூச்சில் வாயால் ஊதியணைத்து சாதனை செய்தார். நான் 151 மெழுகுவர்த்திகளை ஊதியணைத்து அவரது முந்தைய சாதனையை
முறியடித்தேன்.
549 தலைமாட்டிகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்த ரமா:
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் எம்.சி.ஏ., படித்துக் கொண்டிருக்கிறார். தனது அண்ணன்களைப் போலவே கின்னஸில் இடம் பிடிக்க விரும்பினார்.
""பெண்கள் தலையில் மாட்டும் வகை,வகையான ஹேர் கிலிப்புகளை (தலைமாட்டிகளை) அதிக அளவில் சேகரித்து கின்னஸில் இடம் பிடிக்க முடிவு செய்தேன். இதற்காகவே திருச்சி,தஞ்சை,கோவை,மதுரை,திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் போது அங்கு விற்பனையாகும் வகை,வகையான ஹேர் கிலிப்புகளை வாங்கிச் சேகரித்தேன்.
தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்ததில் 549 வகைகள் சேர்ந்து விட்டன. இவற்றை நகரில் உள்ள முக்கியப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் முன்பாக ஓர் இடத்தில் பொருத்தி வைத்து அந்த ஆவணங்களை கின்னஸ் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். இதற்கு முன்பு இதுபோன்று யாரும் செய்ததில்லை எனவும் தெரிய வந்தது எனக்குச் சாதகமாக இருந்தது. இப்போது நானும் எனது சகோதரர்களைப் போலவே கின்னஸ் சாதனையாளராகி இருக்கிறேன்'' என்றார்.