உடல் பருமன் - அலட்சியம் வேண்டாம்!
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை அப்போலோ மருத்துவமனையின் கொழுஉடல் மருத்துவயியல் (Institute of Bariartric) உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து கொழுஉடல் மருத்துவயியல் நிலைய முதுநிலை ஆலோசனை மருத்துவரும் மற்றும் இயக்குநருமான ராஜ்குமார் பழனியப்பன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""சமீபகாலமாக உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது. இதில் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இன்று நமது நாடு உலக உடல் பருமன் அதிகமுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாட்டில் ஆரோக்கியமற்ற மற்றும் நேரம் தவறிய உணவு உட்கொள்ளும் முறையினால் உடல்பருமன் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
மேலும் இது நீரிழிவு நோய், உயர் அழுத்தம், மாரடைப்பு, மூட்டு அழற்சி, நாளமில்லா சுரப்பி பிரச்னைகள், குழந்தையின்மை, புற்றுநோய் போன்ற இதர சிக்கல்களுக்கும் வழிவகுக்கக்கூடிய ஒரு முக்கிய உடல் நல பிரச்னையாக இருக்கிறது.
இந்த நிலைமாறி ஆரம்ப நிலையிலேயே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
உடல் பருமனை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று உணவு அதிகமாக உட்கொள்வதால் ஏற்படுவது, மற்றொன்று பரம்பரையாக வருவது. நமது இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் உடல்வாகுவினால் ஏற்படும் உடல் பருமன்தான் அதிகம்.
இந்தியர்களின் உடலமைப்பை பொறுத்தவரை சதை பருமனைவிட, கொழுப்பு பருமனே தற்போது அதிகரித்து வருகிறது. காரணம், உணவு பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன. என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம், எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிற நிலை உருவாகிவிட்டது. வெளிநாடுகளை பார்த்து அவர்கள் உணவு பழக்கவழக்கங்கள் மீது மோகம் கொண்டு அந்த உணவுவகைகளை அதிகம் உண்ண பழகிக் கொண்டனர்.
பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் ஃபுட் உணவுகள் நமது இந்தியாவில் நுழைந்துவிட்டன. நாமும் அதன் ருசிக்கு அடிமையாகி எண்ணெய்யில் பொரித்து எடுத்த உணவுவகைகளை குழந்தைகளுக்கும் பழக்கிவிடுகிறோம். இதனால் உடலுக்கு தேவையற்ற கெட்ட கலோரிகள் அதிகம் சேர்ந்துவிடுகின்றன. இதுதான் இன்றைய பெரும்பாலானவர்களின் உடல் பருமனுக்கு காரணம்.
ஓடி ஆடி விளையாட விளையாட்டு மைதானமே இப்போது கிடைப்பதில்லை. அதனால் குழந்தைகள் பள்ளி விட்டு வீடு வந்தால் கம்ப்யூட்டர், டிவி என பொழுதை கழிக்கிறார்களே தவிர உடலை அசைத்து விளையாடுவது கிடையாது. மேலும் குழந்தைகளைப் பொருத்தவரை குண்டாக இருந்தால்தான் குழந்தை ஆரோக்யமாக இருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதுபோல பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அலுவலகம் முடிந்து திரும்பியவுடன் டிவி முன்புதான் அமர்கிறார்கள். இதுவும் உடல் பருமன் ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது.
ஆண்களை விட பெண்கள் அதிகம் உடல் பருமனாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் வீட்டில் சமைத்த உணவுகள் வீணாகக்கூடாது என்று மீந்து போகும் உணவுகளைச் சாப்பிடுவதனால்தான். இன்னொன்று மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் அவர்களுக்கு தெரியாமலேயே அதிக உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். பிடித்த பொருள் என்றால் அதிகமாக உட்கொள்கிறார்கள்.
சாப்பிடும் எனர்ஜியை விட அவர்கள் செலவு செய்யும் எனர்ஜி குறைவு. இதனால்தான் அதிகம் பெண்கள் உடல் பருமனாக இருக்கிறார்கள். அதுபோல பேறு காலம், ஹார்மோன் பிரச்னைகளுக்காக மாத்திரைகள் சாப்பிடுவது, மாதவிடாய் பிரச்னைகள் இதுவும் பெண்களின் உடல் எடை கூட்ட காரணமாகிறது. பொதுவாக பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு சரியான முறையைக் கையாண்டால் இந்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
இரண்டு ஆண்டுகளாக நாங்கள் (Bariartric) அறுவை சிகிச்சையின் மூலம் உடல் பருமனை குறைத்து வருகிறோம். இதுவரை கிட்டதட்ட 250க்கும் மேற்பட்டோரை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தியிருக்கிறோம்.
ரோபோட்டிக் உடல்பருமன் மருத்துவ அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனை என்ற பெருமையையும் இந்நிலையம் பெற்றிருப்பதுடன், அவசர நிலை உடல் பருமன் மருத்துவ அறுவைசிகிச்சை செய்திருக்கும் மிகவும் ஒரு சில மையங்களில் ஒன்று என்ற பெருமையும் பெற்றிருக்கிறது. அளவுக்கு அதிமாக உடல் பருமனாக உள்ளவர்களுக்காகவே இந்த அறுவை சிகிச்சை கொண்டு வரப்பட்டது. இதனால் தற்போது நிறைய பேர் பயன் அடைந்துள்ளார்கள். ஒரு அளவுக்கு கீழ் இருப்பவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதில்லை.
மூன்று மாதம் தொடர்ந்து உடல் பருமன் கூடிக் கொண்டே போனால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். முதலில் உடல் எடைக் கூட காரணம் என்னவென்று நீங்களே ஆராய்ந்து பாருங்கள். அதிகம் சாப்பிடுகிறீர்களா, லைப் ஸ்டைல் மாறியிருக்கிறதா? அல்லது சமையல் எண்ணெய் எதுவும் புதிதாக மாற்றினீர்களா? அதிக மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை பார்த்து சரி செய்யுங்கள்.
அதுபோல வயதாக வயதாக உடல் எடை கூடுகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் அதனை ஆரம்பத்திலேயே குறைத்து விடுங்கள். அப்படி கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் எங்களை போன்ற மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் எடை 2 கிலோ கூடினாலும் உடனே அதற்கான காரணங்களை ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். அதைவிட்டுவிடடு 2 கிலோதானே என்று அலட்சியப் படுத்தினால் 2 கிலோ பத்து கிலோவாக மாறிவிடும்'' என்றார்.