முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிறுவர்களுக்காக நூலகம் அமைக்கப் போகிறோம்!

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் அமிர்தகழியில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளராக இருந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் அமிர்தகழியில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் மேலாளராக இருந்து வருபவர் ஓ.கே.குணநாதன். மதுரை காமராஜர் பல்கலைக்கழக இலங்கை மட்டக்களப்பு கிளையின் இணைப்பாளராகவும் இருந்து வரும் இவர் 30க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்கள், 4 நாவல்கள், ஒரு கவிதை தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்டவற்றையும் படைத்துள்ளார். இவரைப் பாராட்டி இலங்கை அரசு 6 சாகித்ய அகாதெமி விருதுகளையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையின் வரலாறுகளைக் கேள்விப்பட்டு அதனைப் பார்வையிட வந்திருந்தார். வீரபாண்டிய கட்டப்பொம்மனும்,

ஜாக்சன் துரையும் விவாதம் நடத்திய இடம் தான் இந்த அரண்மனை என்று அறிந்து வியந்து போய் விட்டதாகக் கூறிய அவரை சந்தித்துப் பேசினோம்.

""முதல் முதலாக நான் ஒரு புத்தகம் எழுதி அதை பதிப்பிக்க இலங்கையில் பலரை நாடிய போது யாரும் பதிப்பிக்க முன்வரவில்லை. அந்த நேரத்தில் என் தம்பி ஓ.கே.பாக்கியநாதன் எழுத்தாளர்களையும்,படைப்பாளிகளையும் ஊக்குவிக்க நாமே ஏன் ஓர் அமைப்பு துவங்கக் கூடாது என்று கேட்டதுடன் அதை துவக்க நிதியுதவியும் செய்தார். அவரால் உருவாக்கப்பட்டதுதான் இலங்கை மட்டக்களப்பில் உள்ள எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம். புத்தகத்தை பதிப்பிக்க என்னைப் போல யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக உருவாக்கிய அம்மையத்தின் மூலம் இதுவரை வறுமையில் வாடும் எழுத்தாளர்களின்  85 புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளோம். வருடம் தோறும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க விழா நடத்துகிறோம்.

 மூத்த படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் விருதுகளும் வழங்குகிறோம். அயல்நாட்டுப் படைப்பாளிகள் விருது, சிறந்த ஓவியர் விருது,சிறந்த நூல் மற்றும் பதிப்பாளர் விருது உள்ளிட்ட விருதுகளை வருடம் தோறும் வழங்கி எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துகிறோம்.

   இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடந்த கலவர வரலாற்றைச் சொல்லும் "ஆடித் தீ' எனும் நாவல், தாய், மகன் உறவைச் சொல்லும் "விடியலைத் தேடி', "ஊமை நெஞ்சின் சொந்தம்' என்ற இரு நாவல்கள், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் விடிவுக்காக உழைக்கும் ஓர் ஆசிரியரின் தியாக வரலாற்றைச் சொல்லும் "ஒரு துளி' என்ற நாவல் உள்ளிட்ட நாவல்களையும் படைத்திருக்கிறேன்.

சிறுவர்களுக்காக அவர்களைச் சிந்திக்க வைக்கும் வகையிலான நூல்கள் இதுவரை 30க்கும் மேற்பட்டவை எழுதியிருக்கிறேன். இவற்றில்  5 நூல்களுக்கும் "அட்டா துட்டி' என்ற இளைஞர் இலக்கிய நூலுக்கும் சேர்த்து இலங்கை அரசின் சாகித்ய அகாதெமி விருதுகள் கிடைத்தன.

 "வெள்ளைக்குதிரை' என்ற நூல் ஈழ யுத்தத்தில் சிறுவர்கள் படும் அவலங்களையும், சமாதானத்தின் தேவையையும் விரிவாக விளக்குகிறது. இதில் சிறுவர்களுக்கான உளவியல் பாங்கு, உரையாடல், மொழிநடை ஆகியனவற்றுக்காக விருது கிடைத்தது.

சிறந்த படைப்புக்காகவும், சிறந்த வடிவமைப்புக்காகவும் "பறக்கும் ஆமை' எனற நூலுக்கு இரு விருதுகள் கிடைத்தன. இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்ய அகாதெமி விருதும்,நாமக்கல் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதும் கிடைத்தன. சிறுவர்கள் தோல்வி பயம் இல்லாமல் இருக்க புனையப்பட்ட கதை "குறும்புக்கார ஆமையார்' என்ற நூலாகும். இலங்கை சாகித்ய அகாதெமி விருதுடன் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் விருது பெற்றேன்.

  ஒரே கதையில் 10 முடிவுகள் வரும் வகையில் எழுதப்பட்ட சிறுவர்களுக்கான நூல் மாவீரன் புள்ளிமான். இதை படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் கதையின் முடிவை தாங்களே வளர்த்துக் கொள்ளும் திறமையைப் பெரும்  வகையில் எழுதப்பட்டுள்ளது.

 சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்த நூல்கள் தவிர சிறுவர்களுக்காக எழுதப்பட்ட மொத்தம் 30க்கும் மேற்பட்டவை  வெளிவந்திருக்கின்றன. விரைவில் இலங்கை மட்டக்களப்பில் தமிழில் நல்ல நூல்களைப் படைத்த, தமிழுக்காகப் பாடுபட்ட ஈழப்படைப்பாளிகளின் ஆவணங்களைத் திரட்டி ஒரு அருங்காட்சியகமும்,சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →