முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நீங்க உழைக்கத் தயாரா? நாங்க உதவத் தயார்!

தொழில் முனைவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொழில் சார்ந்து என்ன உதவி வேண்டுமானாலும் அதைச் செய்து தருகிறது உலக அளவில் இயங்கி வரும் "டைகான்' (TIECON) என்னும் அமைப்பு.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:04 AM
பகிர்:

தொழில் முனைவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தொழில் சார்ந்து என்ன உதவி வேண்டுமானாலும் அதைச் செய்து தருகிறது உலக அளவில் இயங்கி வரும் "டைகான்' (TIECON) என்னும் அமைப்பு. இந்த அமைப்பு இந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் தொழில் ஒன்றைத் தொடங்கி நடத்திட வழி வகுத்துத் தருகிறது. இதுகுறித்து இதன் சென்னை கிளையின் நிர்வாக இயக்குநரான அகிலா ராஜேஷ்வர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"பண்ங் என்பது "இன்டஸ் தொழில்முனைவர்' அமைப்பு. இது லாப நோக்கம் கொண்ட அமைப்பு அல்ல. 1992-இல் சிலிக்கான் வேலியில் தொடங்கப்பட்டது. தற்போது இதில் 18 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் மொத்தம் 64 கிளைகள். இந்தியாவில் மட்டும் 16 கிளைகள் உள்ளன. அதில் சென்னை கிளை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2014-இல் சிறந்த கிளைக்கான விருதையும் சென்னை கிளை பெற்றிருக்கிறது. "டை' என்பது சாப்ட்வேர் நிறுவனம் சம்பந்தப்பட்டது என பலர் நினைக்கிறார்கள், அது தவறு. இதில் ஹெல்த் கேர், விண்ட் எனர்ஜி, கல்வியாளர்கள், சமூக தொழில் சார்ந்தவர்கள், ஹாஸ்பிட்டாலிட்டி, மாற்றுத் தொழிலகங்கள், உணவு தொழில் என பலதரப்பட்ட தொழில் சார்ந்தவர்களும் 900 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இதன் தலைவராக லஷ்மி நாராயணன் இருக்கிறார்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் டிபிஐ (TBI- Technology Business Incubators). இங்குபேட்டர்ஸ் என்பது என்னவென்றால் கோழிக் குஞ்சுகளைப் பாதுகாத்து, பராமரித்து அடைகாத்து வளர்ப்பதுபோல் தொழில் முனைவோர்களை, பாதுகாத்து வளர்த்துவிடும் அமைப்பு. அதாவது தொழிலில் ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும், ஏற்கெனவே தொழில் நடத்தி வருபவர்களுக்கும் அவர்களது தொழிலில் சிறு தொழிலாக இருந்தாலும் சரி, வேறு எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, அதில் வெற்றியடைய சிறப்பாக வழி வகுத்துத் தருவது.

இந்த ஆண்டு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய நினைத்தோம். உடனே எங்களுக்கு நினைவுக்கு வந்தது இளைஞர்கள்தான். எதிலும் ரிஸ்க் எடுக்கும் தைரியம் இளைஞர்களிடத்தில்தான் இருக்கும். மேலும் கல்லூரி மாணவர்களாக இருந்தால் அவர்கள் ரிசர்ச் செய்து பார்க்க கல்லூரி வளாகங்களிலேயே இடவசதியும், வழி

நடத்திச் செல்ல ஆசிரியர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு நாம் கொஞ்சம் வழிகாட்டினால் போதும். பின்னாளில் சிறந்த தொழிலதிபர்களாக அவர்களால் உருவாக முடியும். அதனால் சில கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்காக "டிபிஐ.யை' நிறுவ வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக டெக்னிக்கல் துறையைச் சார்ந்த பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தேடுத்தோம்.

ஏனென்றால் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியரிடம் புதுப்புதுத் தொழில் திட்டங்கள் நிறைய இருக்கும். அப்படிப்பட்ட தொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கு படிக்கும்போதே அவர்களது தொழிலை வளர்த்துக் கொள்ள நாங்கள் ஒரு வாய்ப்புத் தருகிறோம். ஏற்கெனவே தொழிற்கல்வி கல்லூரிகளான கிண்டி ஐ.ஐ.டி, பி.எஸ்., ஸ்டெப், சர்ச் பார்க் போன்ற 14 கல்லூரிகளில் அரசு மானியம் பெற்று டிபிஐ இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகள் ஏற்கெனவே எங்கள் அமைப்புடனும் தொடர்பில் இருக்கிறார்கள்.

இதுதவிர பல கல்லூரிகளில் இருந்தும் அவ்வப்போது எங்கள் அமைப்பைத் தொடர்புகொண்டு டிபிஐ நிறுவ ஆலோசனை தரும்படியும் கேட்டு வருகின்றனர். சில கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அரசு மானியமும் கொடுத்திருக்கிறது, அதைச் சரியான முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்று எங்களிடம் ஆலோசனையும் கேட்டு வருகிறார்கள். இதனால் நாங்கள் ஒவ்வொரு கல்லூரியாகச் செல்வதற்குப் பதில் ஒரு குழுவாகக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து இந்த அமைப்பை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். இதற்காக இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் "டைகான்' கூட்டத்தின்போது இடிஐ மற்றும் டிபிஐ இரண்டும் இணைந்து புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக பல கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். அப்போது பயிற்சி வகுப்புகளும் இங்குபேட்டர்ûஸ எப்படி வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதற்கான பயிற்சியும், ஆலோசனையும் இங்கே வழங்கப்படும். மேலும் தொழில் முனைவோரை உருவாக்கி, பண வசதி ஏற்பாடு செய்து தரும் அமைப்பான நீட்ஸ் (சங்ங்க்ள்) அமைப்பும் எங்களுடன் தொடர்பில் இருப்பதால் அதன்மூலம் இருந்தும் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறோம்.

இதில் அரசு கல்லூரி, தனியார் கல்லூரி என ஏற்கெனவே 40 கல்லூரிகளுக்கு மேல் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது ஏற்கெனவே கல்லூரிகளில் டிபிஐ நிறுவி உள்ளவர்களும், புதிதாக நிறுவ உள்ளவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் பதிவு செய்து உள்ளனர்.

புதிய தொழிலைப் பொருத்தவரை கல்லூரியில் டெக்னிக்கல் பகுதியைச் சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், வர்த்தகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று "பிஸினஸ்' செய்பவர்களால்தான் கற்றுத் தர முடியும். ஒரு புதிய தொழில் தொடங்க எப்படி பிளான் போடுவது, பணத்திற்கு யாரை அணுகுவது, எந்த மாதிரி பிஸினஸ் பிளானைப் போட்டால் முதலீடு செய்பவரை அணுக முடியும், பிஸினûஸ அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துக்கொண்டு போகலாம் என்பதை நாங்கள் சொல்லித்தருவதுதான் இங்குபேட்டர்ஸின் வேலை.

விரைவில் கலை மற்று அறிவியல் கல்லூரிகளில் உள்ள டிபிஐக்களையும் எங்கள் அமைப்புடன் சேர்த்துக்கொள்ள இருக்கிறோம்.

இந்த "டை' கல்லூரிகளில் மட்டும் அல்லாமல் தனி நபர் தொழில் முனைவோருக்கும் உதவி செய்யும். இதில் ஆண், பெண் என்ற வித்தியாசமோ, கல்வித் தகுதியோ, வயது வரம்போ எதுவும் இல்லை. தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள யாராக இருந்தாலும் எங்களை அணுகினால் அவர்களுக்கு நாங்கள் உதவக் காத்திருக்கிறோம்.

உதாரணத்திற்கு, ஒருவர் பல ஆண்டுகளாக ரைஸ் மில்லில் வேலை செய்து வருகிறார் என்றால், அவருக்குத் தொழில் நன்றாகத் தெரிந்திருக்கும். அவர் ஒரு ரைஸ் மில் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவரிடம் பண வசதியோ, இடவசதியோ இல்லை என்றால் அவரின் தேவைக்கு ஏற்றபடி ரைஸ் மில் வைக்க நாங்கள் உதவுவோம் அல்லது ஒருவர் பியூட்டி பார்லர் நடத்த வேண்டும் என்று வந்தால் அதில் அவர் எந்த அளவுக்குத் திறமையுள்ளவர் என்பதைத் தெரிந்துகொண்டு உதவுகிறோம்.

அப்படியில்லாமல் ""எனக்கு ஏற்கெனவே தொழில் தெரியும்; தொழில் நடத்தி வருகிறேன். எனது உற்பத்திப் பொருளை மார்க்கெட்டிங் செய்ய உதவி வேண்டும்'' என்று வருபவர்களுக்கும் உதவுகிறோம். தொழிலை மேம்படுத்த பண வசதி வேண்டும் என்பவருக்கும் உதவுகிறோம். எங்களால் அவர்களுக்குத் தேவையான பண உதவி செய்யும் முதலீடு செய்பவரைத்தான் கொடுக்க முடியும். நாங்கள் நேரடியாகப் பணத்தை வழங்குவதில்லை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.