முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கண்ணைக்கட்டும் மாயாஜால வித்தை!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், தியாகராய நகரில் உள்ள "கிருஷ்ணகான சபா'வின் முன் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், என வயது வித்தியாசமின்றி

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம், தியாகராய நகரில் உள்ள "கிருஷ்ணகான சபா'வின் முன் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், என வயது வித்தியாசமின்றி கூட்டம் வழிந்து கொண்டிருந்தது. என்ன விசேஷம்? என் இவ்வளவு கூட்டம் என்று உள்ளே நுழைந்தோம். அங்கே கேரளாவைச் சேர்ந்த பிரபல "மேஜிக்' நிபுணரான பி.எம்.மித்ராவின் "மேஜிக் ஷோ' என்றனர்  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான "அபாஸ் கல்ச்சுரல்' மற்றும் "ப்ரியா கல்ச்சுரல்' உறுப்பினர்கள். சினிமாவுக்கு "ஆஸ்கார் விருது' போல் மேஜிஷியனுக்கு சிறந்த விருதான "மெர்லின் விருது', ஆசிய விருது என ஒன்பது விருதுகள் வாங்கியவர் மித்ரா என்றனர். அது அவருடைய இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் பளிச்சிட்டது. ஒவ்வொருவரும் தங்களை மறந்து இருக்கையின் நுனியில் அமர்ந்து ரசிக்கும்படி இருந்தது அனுபவம். இம்மாத இறுதிவரை திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 7மணிக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 4மணி மற்றும் 7மணிக்கும் நடைபெறுகிறதாம் இந்நிகழ்ச்சி.

மித்ராவுடன் பேசுவோம்:

மேஜிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நாட்டம் எப்படி வந்தது?

 எனக்கு சொந்த ஊர் கேரளாவில் உள்ள கோட்டயம். 1972-இல் நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது முதன்முறையாக மேஜிக் ஷோ ஒன்றை பார்த்தேன். அதனால் மேஜிக் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டு, யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று தேடி அதன் பிறகு

கேரளாவில் உள்ள ஒரு  மேஜிஷியனை கண்டுபிடித்து அவரிடம் சேர்ந்தேன். அவர் மூலமாக கொல்கத்தா சென்றேன். மேஷியன்களுக்கு கொல்கத்தா ஒரு தலைமையிடமாகவே இருந்தது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் மேஜிக் செய்து காட்டுவதற்கான முறையான அனுமதிக்காக சர்க்காரை அணுகினோம். அவர்கள் சில வித்தைகள் செய்து காட்டும்படி சொன்னார்கள். செய்து காண்பித்தேன். அதன்பிறகு  எனக்கு அனுமதி உரிமம் வழங்கினார்கள்.

ஆர்வத்தினால் கற்றுக் கொண்டீர்கள்,  இது தான் வாழ்க்கை என்று எப்போது தீர்மானித்தீர்கள்?

சிறுவயதில்  பொழுபோக்குகாகத்தான் கற்றுக்கொண்டேன். நாளடைவில் புதுப்புது வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமானது. மேலும் மக்கள் கொடுத்த வரவேற்பும் என்னை இதையே தொழிலாக எடுத்துக் கொள்ளும்படி அமைந்துவிட்டது. திறமையை வளர்த்துக் கொண்டு கோட்டயம் வந்து, 1982-இல் முறைப்படி 6 பேரை வைத்து கொண்டு மேஜிக் ஷோ நடத்த ஆரம்பித்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் கோடை விடுமுறை நேரத்தில் வந்து மேஜிக் செய்துவருகிறேன். 

தற்பொழுது பொழுதுபோக்கு துறைகள் நிறைய வந்து கொண்டிருக்கிறது, அதில் உங்களை தக்கவைத்துக் கொள்ள என்ன  முயற்சி செய்கிறீர்கள்?

காலத்திற்கு ஏற்ப புதுப்புதுவித்தைகள் நிறைய முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். 2 மணி நேரம் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் யாருக்கும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் 18 வகையான நிகழ்ச்சிகளை வழங்குகிறேன்.  "பாரிஸ் ஈபிள் டவரில்' இருக்கும் சிலை போன்று செய்து அதை மேடையில் கொண்டு வந்து பிறகு அதனை கண்ணுக்குத் தெரியாமல் மறைப்பது, ஒரு நவீன ரக நிஜக்கார் ஒன்றை மேடைக்குக் கொண்டு வந்து அதனை கண்சிமிட்டும் நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் மறைப்பது, ஆபத்து நிறைந்த வித்தைகளில் இருந்து தப்பித்து வெளியே வருவது,  அந்தரத்தில் அநாயாசமாக நின்று கொண்டு தாளத்திற்கு ஏற்றபடி நடனமாடும் பெண்கள் என புதுவகையான வித்தைகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. இதெல்லாம் பார்வையாளர்களுக்கு புதுமையாகவும், த்ரில்லிங்காகவும் இருக்கும்.

நீங்கள் செய்யும் வித்தைகளில் எது மிகவும் சவால் நிறைந்ததாக உணர்கிறீர்கள்?

பொதுவாக நாங்கள் செய்யும் எஸ்கேப் வித்தைகள் எல்லாமே சவால் நிறைந்ததுதான்.  இருந்தாலும் அதில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.  எல்லோர் முன்னிலையிலும் ஒரு பெரிய பில்டிங்கை மேஜிக் மூலம் முற்றிலும் டமாலிஷ் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது. இதன் மூலம் "கின்னஸ் ரெக்கார்ட்' செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. இதற்கு ஸ்பான்ஸர் கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.

வித்தைகள் காண்பிக்கும் போது  ஆபத்தில் சிக்கியதுண்டா?

1998-இல் கேரளாவில் ஒருமுறை புதுவித்தையைக் காட்சிப் படுத்தினேன். பொதுமக்கள் ஒரு லட்சம் பேர் கூடி இருந்தனர்.  காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், பிரபல பத்திரிகையாளர்கள், முக்கிய பிரபலங்கள் என பல துறையைச் சார்ந்த  51 விஐபிகள் சுற்றி நின்றிருந்தனர். அவர்கள் முன்னிலையில் காவல்துறை கொண்டு வந்த கை விலங்கை என் கைகளில் பூட்டி, அதன்பிறகு  75 அடி நீளம் உள்ள சங்கிலியால் என்னை முற்றிலும் கட்டிவிட்டு ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு கோத்ரேஜ் பூட்டுபோட்டு பூட்டினர். சங்கிலி, பூட்டு எல்லாம் சேர்த்து 38 கிலோ எடை இருக்கும். பிறகு 25 அடி உயர பெரிய வைக்கோல் போர் அமைத்து அதில் தீயை வைத்து என்னை தூக்கிப் போடுவார்கள். 20 விநாடிகளில்  கட்டுகளில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டு வெளியே வரவேண்டும். இதை கேரளாவில் செய்து காண்பித்து வெற்றியும் பெற்றேன். இதற்காக எனக்கு சிறந்த மேஜிஷியன் விருதும் கிடைத்தது. அதே எஸ்கேப் வித்தையை தூத்துக்குடியில் உள்ள பிரபலங்கள் முன்னிலையில் செய்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று கடல்காற்று அதிகமானதால் நெருப்பின் வேகம் அதிகரித்துவிட்டது இதனால் நான் வெளியே வருவதற்குள் தீ மளமளவென பரவிவிட்டது. இதனால் என் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டன. இவ்வாறு எத்தனையோ வித்தைகளில் மறக்க முடியாத சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சவாலாக எடுத்துக் கொண்டுதான் தினமும் நிகழ்ச்சி நடத்திவருகிறேன்.

 வெளிநாடுகளில் மேஜிக் செய்வதற்கும், இந்தியாவில் செய்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? வரவேற்பு எப்படி இருக்கிறது? 

என் அனுபவத்தில் எல்லா இடங்களிலுமே ரசனை ஒரே மாதிரிதான் இருக்கிறது.  நான் சென்ற நாடுகளில் அதிகம் மேஜிக்கை விரும்பியவர்கள் இலங்கை மக்கள்தான். இதுவரை 7 முறை நாங்கள் இலங்கையில் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். சுனாமி ஏற்பட்டதுபோது நாங்கள் அங்கேதான் இருந்தோம். கடல் உள்வாங்கியதை எல்லாம் எங்கள் கண்முன்னே கண்டோம். திடீரென்று போலீஸ் வந்து பதட்டப்படுத்தியதில் எங்கள் ஆட்கள் ஆளுக்கொரு பக்கம் பிரிந்துவிட்டோம். ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் எங்களுக்கு நிகழ்ச்சி வேறு இருந்தது. அதன்பிறகு அனைவரும் ஒன்று கூடி நிகழ்ச்சியை நடத்திவிட்டு வந்தோம். நமது வித்தையைவிட இலங்கையில் இன்னும் அதிகமாக மேஜிக் வித்தை செய்கிறார்கள்.

குடும்பம்?

 என் மனைவி ஹன்ஸு. என்னுடன்தான் நிகழ்ச்சி ஒருகிணைப்பாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேனேஜர், ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருக்கிறார்கள். நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்துதான் ஆபத்து அதிகமுள்ள விளையாட்டுகளைச் செய்வோம். அதில் வேறு யாரையும் விடமாட்டோம்.

இதுவரை எவ்வளவு நிகழ்ச்சிகள் செய்துள்ளீர்கள்?

 இந்திய மாநிலஙகள், கல்ப் நாடுகள், சுவச்சர்லாந்து போன்ற 12 நாடுகளுக்கு சென்றிருக்கிறோம். இதுவரை சுமார் 8,000 நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.