"குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' படத்துக்காக ஒரே பாடலை மூன்று கானா பாடகர்கள் பாடியுள்ளனர். புதுமுகங்கள் பலரின் நடிப்பில் உருவாகும் இப்படத்தை பி.எம். தயானந்தன் எழுதி இயக்குகிறார். படம் குறித்து பேசுகையில்... "" சூழ்நிலைகளால் தறிக் கெட்ட வாழ்க்கையை வாழும் ஒருவன், மனம் திருந்தி நல்லதொரு வாழ்க்கையை வாழ நினைக்கிறார். இந்த மன மாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சமூக சூழல், அவர் திருந்தா வண்ணம் செயல்களில் ஈடுபடுகிறது. அந்த இடையூறுகளை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம். வித்தியாசமான ஒரு கானா பாடலை, சங்கர் ராம் இசையில், பாடலின் பல்லவியை கானா பாலா பாட, ஒரு சரணத்தை இசையமைப்பாளர் தேவா பாடுவார். ஒரு சரணத்தை கானா உலகநாதன் பாடுவார். இப்படி இந்தப் பாடல் ஒவ்வொரு வரியிலும் தனித்துவமாக உருவாகியுள்ளது. கானாவில் கைதேர்ந்த மூன்று பாடகர்கள் பாடியுள்ள இந்த கானா பாடல் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்'' என்றார் இயக்குநர்.
ஈழத்தின் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி வாசிப்பாளாரான இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் "போர்க்களத்தில் ஒரு பூ.' இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கைக் குழு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கவில்லை. இதனால் இப்படத்தை வெளியிட முடியாமல் காத்திருக்கிறது படக்குழு. குருநாத் சல்சானி தயாரித்துள்ள இப்படத்தில் நாகிநீடு மற்றும் பிரியா, சுபாஷ் சந்திரபோஸ், கிருபா விஸ்வநாதன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்துக்கு ஏற்பட்டுள்ள தடை குறித்து இயக்குநர்... ""படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு படத்துக்கு உரிய தணிக்கைச் சான்றிதழை வழங்கவில்லை. தணிக்கை மறுக்கப்படுவதற்கு உரிய காரணங்களையும் கூறவில்லை. படத்தை நிராகரிப்பதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. இதனால் மறு தணிக்கைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தணிக்கைக்குழுவின் கேள்விகளுக்கு உரிய பதில் அளித்துள்ளேன். படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் டெல்லியிலுள்ள சிறப்பு தணிக்கைக்குழுவை அணுகியுள்ளேன். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்'' என்றார் இயக்குநர்.
ரியல் எஸ்டேட் மோசடிகளின் பின்னணியை களமாக கொண்டு உருவாகி வரும் படம் "ஜெனிபர் கருப்பையா.' இப்படத்தின் மூலம் டி.எஸ்.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மிருதுளா விஜய் நடிக்கிறார். ரோகிணி, ராஜ்கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். ராஜ்கிரணின் "தலைமுறை' படத்துக்குப் பின் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஜி.எம்.சரவணபாண்டி. படத்தின் கதைக் களம் குறித்து பேசுகையில்... "" நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால் காலம் கண்ணெதிரே எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டு ஒன்றும் அறியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவானாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறோமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்புகிறோமோ அதை வெறுக்கிறோம். ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து, கேட்டதை மறைத்து விளையாடுகிற காலம் இங்கே தனி மனிதனுக்கு எதை பரிசாக அளித்தது என்பதுதான் இந்த திரைக்கதையில் உள்ள சிறப்பு. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சிலரை ஒரு ரியல் எஸ்டேட் கும்பல் எப்படி ஏமாற்றி பணம் பறித்தது? என்பதை சம கால சம்பவங்களோடு இணைத்து சொல்லியிருக்கிறேன். படமாக மட்டுமே அல்லாமல் நல்ல படிப்பினையாகவும் இப்படம் அமையும்'' என்றார் இயக்குநர்.
ஹீரோக்களை முன் நிறுத்தாமல் பெண் புத்திசாலித்தனங்களை மட்டுமே முன் வைக்கிற படங்கள் அவ்வப்போது வெளிவருதுண்டு. அப்படியொரு படமாக உருவாகி வருகிறது "இட்லி.' முன்னணி கதாநாயகிகள் இல்லையென்றால் திருமணத்துக்குப் பின் நடிக்க வரும் நடிகைகளை வைத்து இவ்விதமான படங்கள் உருவாகும். ஆனால், இந்த முறை அம்மா வேடங்களில் புகழ்பெற்றிருக்கும் சரண்யா, எல்லாவித பாத்திரங்களும் ஏற்று நடிக்கும் கோவைசரளா இவர்களோடு ஊர்வசியின் அக்கா கல்பனா ஆகிய மூவரையும் முக்கியக் கதாபாத்திரங்களாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. சரண்யா, கோவைசரளா, கல்பனா ஆகிய மூவரின் கதாபாத்திரங்களுடைய பெயரின் முதலெழுத்துகள்தான் படத்தின் தலைப்பு. இன்பா, ட்விங்கிள், லில்லி என்பது அவர்களுடைய கதாபாத்திரங்களின் பெயர். பரபரப்பான வங்கிக்கொள்ளைதான் படத்தின் பின்னணி. அது எப்படி? அதை யார் செய்தது? என்பதற்கான விடை தேடும் திரைக்கதை. வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, கிரேன் மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்கள் ஏற்று நடிக்கின்றனர். சரத்குமார் நடித்த "வைத்தீஸ்வரன்' படத்தை இயக்கிய வித்யாதரன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.