முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பிடித்த பத்து: கலைமாமணி விருது பெற்றவரும், கர்நாடக இசை மற்றும் திரைப்பட பாடகியுமான நித்யஸ்ரீ மஹாதேவன் தனக்கு "பிடித்த பத்து' பற்றி கூறுகிறார் 

என்னுடைய குடும்பமே இசை குடும்பமானாலும் நானே ஆசைப்பட்டு கற்றுக் கொண்டேன். "நாதோபாசன" என்பது மனம் லயித்து இசையில் ஒன்றி, நம்மை மறந்து பாடுவதுதான்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

இசை - ஆண்டவன் கொடுத்த வரப் பிரசாதம்
  இசை: என்னுடைய குடும்பமே இசை குடும்பமானாலும் நானே ஆசைப்பட்டு கற்றுக் கொண்டேன். "நாதோபாசன" என்பது மனம் லயித்து இசையில் ஒன்றி, நம்மை மறந்து பாடுவதுதான். நான் கச்சேரி செய்யும் போதெல்லாம் என்னை மறந்து விடுகிறேன். என்னைப் பொருத்தவரை ஆண்டவன் எனக்கு கொடுத்த வரப் பிரசாதம் தான் இசை. இசை என்று சொன்னால் எனது பாட்டி டி.கே.பட்டம்மாளை நினைக்காமல் இருக்க முடியாது.
 நல்ல உள்ளங்கள்: எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அன்பை பொழிபவர்களை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அவர்கள் மேல் ஒரு விதமான மரியாதை ஏற்படும். எனக்கு தெரிந்த ஒரு புற்றுநோய் மருத்துவர் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல் இருக்கிறார். கேட்டபோது, இந்த புற்றுநோயாளிகளின் முகத்தில் என்று நான் நிரந்தரமான புன்னகையை பார்க்கிறேனோ அன்று நான் திருமணம் செய்து கொண்டது போல் இருக்கும் என்று புன்னகையுடன் கூறுகிறார்.
 என் பூஜை அறை: காலையில் நான் அதிகமாக செலவழிக்கும் நேரம் வீட்டு பூஜை அறைதான். குளித்த பிறகு அந்த அறையைத் துடைத்து, படங்களை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக பூக்களால் அலங்கரிப்பேன். இந்த அறையில் மட்டும் தான், நான் அந்த ஆண்டவனுக்கு மனதார நன்றி சொல்லுவது போல் என்னை மறந்து அமர்ந்திருப்பேன். வாழ்க்கையில் நாம் பெற்றதெல்லாம் அவன் கொடுத்ததுதானே.
 உறவுகள்: நமது தமிழர்களின் கலாசாரம், பண்பாடு மிக உயர்ந்தது. காரணம் , நமது உறவு முறைதான். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, மாமா, அண்ணி, கணவர், அண்ணா, தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்கள் நம் மேல் வைத்திருக்கும் பாசம், அன்பு அளவிட முடியாது. இப்படிப்பட்ட உறவுகளை நம்பித்தான் நமது வாழ்க்கையே அமைந்துள்ளது. இவர்களுக்கு என்ன நடந்தாலும் அது நம்மை பாதிக்கும். உறவுகள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
 பயணம்: எங்கே போனாலும் எனக்கு பிடிக்கும். அது ரயில், கார் அல்லது விமானம் எதுவென்றாலும் நான் தயாராகிவிடுவேன். ஒரு காலத்தில் பயணம் என்றால் எனக்கு அவ்வளவாக விருப்பம் இருந்ததில்லை. ஆனால் இன்று பயணம் என்றால் முதலில் நான் தான் தயாராக இருப்பேன். அதிலும் எனது மகள்களுடன் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு புத்தகத்தையோ அல்லது என்னுடைய குறுந்தகடுகளையோ தயாராக வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்.
 பழங்கள்: ஆரோக்கியத்தை அளிப்பது சுவையான பழங்கள் தான். நான் பாடகியாக இருப்பதனால் சில பழங்களைத் தவிர்ப்பதுண்டு. அதிலும் குறிப்பாக எந்த பழங்களில் எல்லாம் புளிப்பு இருக்கிறதோ அவற்றைத் தவிர்த்து விடுவேன். அதே சமயம் புளிப்பாக இருந்தாலும் அன்னாசிப் பழம் என் தொண்டையை ஒன்றும் செய்யாது. இந்த பழங்கள் இல்லாமல் எந்த பழங்கள், எப்பொழுது கொடுத்தாலும் எனக்குப் பிடிக்கும்.
 பட்டுப் புடவை: தமிழர்களுக்கு என்றுமே விருப்பமான ஒன்று இதுதான். என்னை பொருத்தவரை நம் பெண்மணிகளுக்கு ஒரு உயர்வை தருவதும், என்றும் செüகரியமாக இருப்பதும் இதுவே. எங்கே சென்றாலும் அதிகமாக மக்கள் என்னை பார்ப்பது பட்டுப் புடவையில்தான். இந்த மாதிரியான பட்டுப் புடவைகள் என்னிடம் இருக்கின்றன என்பதை விட எனக்கு மிகவும் இந்த புடவைகள் பொருந்துகின்றன. கச்சேரிகளுக்கு பட்டுப் புடவைகளையே உடுத்தி செல்வேன்.
 சிந்தனையை தூண்டும் செய்திகள்: தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி தவிர புத்தகங்கள் மூலமும் செய்திகள் கிடைக்கின்றன. சமீபத்தில் வந்த கட்செவி அஞ்சல் (ரட்ஹற்ள்ன்ல்), முகநூல், டுவிட்டர் என்று கூறிக்கொண்டே கொண்டே போகலாம். நல்ல செய்திகள் எங்கிருந்தாலும் நான் பார்க்காமல் இருந்ததில்லை.
 ஜிமிக்கி: கர்ணனுக்கு கவச குண்டலம் போல் எனக்கு இந்த ஜிமிக்கி. என்னை இது இல்லாமல் பார்த்தவர்கள் மிகவும் குறைவு. அப்படியே பார்த்தாலும் எதோ ஒன்று குறைகிறதே என்று கூறாமல் இருந்ததில்லை. ஒருமுறை வீட்டிற்கு உள்ளேயே மறதியாக வைக்க, அப்புறம் கண்டுபிடித்து போட்டுக்கொண்ட பிறகுதான் எனக்கே சமாதானமாகியது.
 மகள்கள்: எனக்கு இரண்டு மகள்கள். பெரியவள் பெயர் தேஜஸ்ஸ்ரீ, சிறியவள் பெயர் தநுஜஸ்ஸ்ரீ. என்னுடைய உலகமே இவர்கள் தான். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இவர்களுடன் நான் பொழுதை கழிக்கவே விரும்புகிறேன். இன்று இவர்கள் வளர்வதை பார்க்கும் பொது நானும் இவர்களுடன் வளர்ந்து வருகிறேன் என்றுதான் நினைக்கிறேன். அந்த வளர்ச்சி எனக்கு உபயோகமான வளர்ச்சியாகவே இருக்கிறது.
 - சலன்
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →