முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஆசியாவின் பெரிய கலைவிழா..!

ஹிந்திப் படவுலகில் பெண்களுக்கு நாயகியாக வாய்ப்புகள் கிடைக்க ஏணிப்படியாக அமைந்திருப்பது இந்திய, சர்வதேச அளவில் நடக்கும் அழகிப் போட்டிகள். 

Updated On : 21 ஜனவரி, 2018 at 11:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:32 PM

ஹிந்திப் படவுலகில் பெண்களுக்கு நாயகியாக வாய்ப்புகள் கிடைக்க ஏணிப்படியாக அமைந்திருப்பது இந்திய, சர்வதேச அளவில் நடக்கும் அழகிப் போட்டிகள். 
ஜீனத் அம்மன், லாரா தத்தா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா போன்றவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததும் பிரபலமானதும் அவர்கள் இந்திய, சர்வதேச அளவில் அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதினால்தான்..! 
அதேபோன்று, கேரளத்தில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வழி அமைத்துத் தருவது, கேரள அரசு ஆண்டுதோறும் கொண்டாடும் மாணவர் கலைவிழா. 58 ஆண்டுகளாக தவறாமல் கொண்டாடப்படும் இந்தக் கலைவிழாவில் "கலா பிரதிபா' பட்டத்தைப் பெற்ற வினீத் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். 
"கலா திலகம்' பட்டத்தைப் பெற்ற திவ்யா உன்னி, மஞ்சு வாரியர், நவ்யா நாயர், அம்பிளி தேவி, காவ்யா மாதவன், விந்துஜா மேனன் போன்றவர்கள் மலையாள படவுலகில் நாயகிகளாக வலம் வந்தவர்கள். மஞ்சு வாரியர், காவ்யா மாதவன் இன்றும் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். 2000 }இல் நடந்த கலைவிழாவில் மாப்பிள்ளைப் பாடல் பிரிவில் முதல் பரிசு பெற்ற வினித் ஸ்ரீநிவாசன் மலையாள படவுலகில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நடிகர், இயக்குனர். 
பிரபல பின்னணிப் பாடகர்கள் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் மலையாள படவுலகிற்கு அறிமுகம் ஆனதும் அன்று நடந்த "கேரளக் கலோல்சவம்' எனப்படும் கலைவிழா மூலமாகத்தான்..! இன்று சின்னத்திரை 
பிரபலமாகியிருப்பதால், கலை விழாவில் நல்ல மதிப்பெண்கள் ஈட்டும் மாணவ மாணவியருக்கு சின்னத்திரையிலும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன .
கேரள பள்ளிகளின் கலோல்சவம், ஆசியாவில் நடக்கும் மிகப்பெரிய கலைவிழாவாகும். கேரள அரசின் கல்வித்துறை இந்த விழாவினை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது. பாரம்பரிய மற்றும் கிராமிய நடனங்கள், வாய்பாட்டு மெல்லிசை, இசைக் கருவிகள் வாசிப்பு, கதா காலாட்சேபம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் 9 முதல் 12 வகுப்பு மாணவ மாணவிகள் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியில் எடுக்கும் மொத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் போது சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக கலா பிரதிபா, கலா திலகம் பட்டங்கள் வழங்குவதையும், சலுகை மதிப்பெண்கள் வழங்குவதையும் கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்தக் கலைப் போட்டிகளில் தங்களது பிள்ளைகளைத் தயாராக்க பெற்றோர்கள் பல ஆயிரங்களை செலவழிக்கத் தயங்குவதில்லை. மாவட்ட அளவில் முதலாவதாக வரும் மாவட்டத்திற்கு 117.5 பவுனில் செய்யப்பட்ட சுழலும் கோப்பை வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் எல்லா மாணவ மாணவியருக்கும் அவர்களின் பங்களிப்புக்கு ஏற்றவாறு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. 
தொடக்கத்தில் சில நாட்கள் நடந்த இந்தக் கலைவிழா ஏழு நாட்கள் வரை நீண்டது. இந்த ஆண்டு அது ஐந்து நாட்களுக்கு சுருக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.