எழுத்தும் எழுத்தாளரும் நிரந்தரமாக இந்த உலகத்தில் உலவக் காரணமாவது பதிப்பாக்கம். அதற்காகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், தமிழை முன்னிறுத்திக் கொண்ட பதிப்பாளர்கள் மறவாது போற்றத்தக்கவர்கள். அவர்களுள் ஒருவர் சோமையா.
இலக்கியத்தைப் பதிப்பிக்கத் தொடங்கிய தமிழ்ப்பதிப்பக உலகில் "இலக்கியப் பதிப்பகம்' என்றே பதிப்பகம் தொடங்கியவர் இவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (3.3.1918-இல்) காரைக்குடி அருணாசலஞ்செட்டியார் தெய்வானை ஆச்சி தம்பதியருக்குப் பிறந்த இவர், கம்பன்அடிப்பொடி சா.கணேசனின் உறவினர். புதுவயலுக்குச் சுவீகாரம் போனவர். செட்டி நாட்டுச் சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா, காரைக்குடிக்கும் கானாடுகாத்தானுக்கும் மகாகவி பாரதியை அழைத்துவந்த வை.சு.சண்முகஞ்செட்டியார் ஆகியோர் இவர்தம் உற்ற தோழர்கள்.
"அக்ரஹாரத்து அதிசய மனிதர்' என்று புகழ்பெற்ற வ.ரா.விடம் டியூஷன் பயின்றவர். "உலகம் சுற்றிய தமிழன்' என்று பெயர் பெற்ற ஏ.கே.செட்டியாரின் குமரிமலர் இதழிலும் சிறிதுகாலம் பணியாற்றியவர். பணி தொடர்பாகப் பர்மா போகும் வாய்ப்பு ஏற்பட்ட சூழலில் அதைவிடுத்துத் தான் பிறந்த காரைக்குடி மண்ணிலேயே (1945-46-களில்) பதிப்பகம் நிறுவியவர். அதற்குக்காரணமானவர் கம்பன் அடிப்பொடி. கம்பன்மீது மாளாத காதல் கொண்ட சா.க.. புதுக்கோட்டை மகாராஜா கல்லூரி தலைமைத் தமிழாசிரியர் நா.கனகராஜய்யரைக் கொண்டு கம்பன் பிள்ளைத்தமிழ் பாடவைத்து நாட்டரசன்கோட்டை கம்பன் சமாதியில் அரங்கேற்றினார். பின்னர் அதனையே தனிநூலாக்கி, இலக்கியப் பதிப்பகம் வாயிலாய் அச்சேற்றினார்.
அக்காலத்தில், அழகப்பா கல்லூரி மாணவர்களின் இலக்கிய வேடந்தாங்கலாக இவர்தம் பதிப்பகம் இருந்தது என்பார்கள்.
"கலைஞர்கள் கல்லில் சரித்திரத்தை உருவாக்கினார்கள். சங்கீதம் பாடவைத்தார்கள். கவிதையும் சொல்லச் செய்தார்கள். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இந்நூல் வடிவத்திலே நமக்குத்தந்துள்ளார்' என்று தொ.மு.பாஸ்கரத் தொண்டை மானின், "கல்லும் சொல்லும் கவி'. நூலைத் தமது இலக்கியப்பதிப்பக நூல் அட்டைப்பகுதியில் சுட்டுகிறார் சோமையா. இந்நூலைத் தொடர்ந்தோ, முன்னரோ அவர் எழுத இசைந்த நூல் "மாயமான்'. அதுசமயம் தம் பணிதொடர்பாக, சென்னையில் டிபுடி கலெக்டராக இருந்த தொ-மு.பா. தொண்டைமான் கேரளமாநிலத்திற்கு மாறுகிறார் அங்கிருந்த நிலையில், "கேரளமான்களிடையே இந்தத் தொண்டைமான் சிக்கியிருக்கிறேன். "மாயமான் தாமதமாகிறது' என்று சோமையாவுக்குக் கடிதம் எழுதினாராம். அதனைச் சின்னவயதில் பார்த்த ஞாபகம் என்று இத்தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சோமையாவின் புதல்வருள் ஒருவரான கண்ணன் இன்னொரு தகவலையும் நம்மிடம் சொன்னார்
"இலக்கியப்பதிப்பகத்தின் வாயிலாக, அ.ச.ஞானசம்பந்தனின் "இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்' நூலை வெளியிட்ட பின்னர் மதுரையில் தமிழண்ணல் உள்ளிட்ட நண்பர்களுடன் அ.ச.ஞா.வும், சோமையாவும் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த வேளையில், அ.சா.ஞா. சொன்னாராம் "இவர் பதிப்பகத்தால் நான் மாட்சியடைந்தேன். இவர் வீழ்ச்சியடைந்தார்' என்று.
வேடிக்கையாகச் சொன்னாலும் அக்காலத்தில் இது வாடிக்கையாகத்தான் இருந்தது. ஆனாலும், அந்த முயற்சியும் ஆக்கமும் ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்பதற்கு இவர் பதிப்பித்த நூல்கள் சான்றுகளாகும். சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயரின் விறலிவிடுதூது, ராய.சொ.வின் காதற்பாட்டு, ஆகியவற்றோடு, சித.வே.சண்முகநாதபிள்ளையின் வைத்திய சாஸ்திரம் உள்ளிட்ட நூல்களையும் வெளியிட்டிருக்கிறார்.
ஆச்சார்ய கிருபளானியின் "காந்தியவழி', கா.திரவியத்தின் "டில்லி செங்கோட்டை விசாரணை', "ஜீவன்' தந்த கவிதைக் கதம்பம் உள்ளிட்ட நூல்களையும் ஜி.ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் எழுதி, "பம்பாய் ஹிந்த் கிதாப்ஸ் கம்பெனி வெளியிட்ட "அ நட்ங்ஹச் ர்ச் எட்ஹய்க்ட்ண் அய்ங்ஸ்ரீக்ர்ற்ர்ள்' என்ற நூலை, தேவகோட்டை டி.ஆர்.அருணாசலம் என்பாரைக் கொண்டு தமிழாக்கம் செய்வித்து, "மகாத்மா காந்தி ரசமான சம்பவங்கள்' எனும் நூலாக்கி வெளியிட்டார். காந்திஜியின் பிரிட்டிஷாருக்கு எனது வேண்டுகோள்' என்ற நூலையும் இலக்கியப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆட்சிக்காலத்தில், காகிதத்தட்டுப்பாடு ஏற்பட்டபோது, புதுக்கோட்டையில், "கலைப்பண்ணை' என்ற நிறுவனத்தைத் தொடங்கித் தாள்கள் பெற்று அதன்வழி இவர் வெளிக்கொணர்ந்த நூல்கள்தாம், தொ.மு.பா.தொண்டைமானின், கல்லும்சொல்லாதோ கவி, நூல் மற்றும் வையாபுரிப்பிள்ளையின் புறத்திரட்டு நூலின் மூன்றாம் பதிப்பு. இவைபோக, மார்க்கபந்து சர்மாவின் "சிலப்பதிகாரம் ஒரு ரசனை', ரெ.முத்துக்கணேசனின் "வாழிய உலகம்', விளையாட்டுப் பள்ளிக்கூடம் என்ற நர்சரிக்கல்விமுறை நூல் ஆகியனவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.