தமிழகம் முழுவதும் "பசுமை' பரவ, வீடெங்கும் வீதியெங்கும் சாலை எங்கும் மரங்களை நடுவீர்', "மரங்களை வளர்ப்போம். மழையைப் பெறுவோம்' என்ற கோஷங்கள் சமீப காலமாக தமிழகத்தில் அதிகம் கேட்கின்றன. பசுமை பற்றி பிரசாரம் செய்யும் அமைப்புகள் பெருகிவிட்டன. கடந்த ஆண்டு சாணம் கலந்த மண்ணை உருண்டையாகப் பிடித்து அதனுள் விதைகளை வைத்து தமிழகம் முழுவதும் வீசப்பட்டது.
இந்த அமைப்புகளுள் ஒன்றுதான், டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம். இதை நடத்தி வரும் செங்கல்பட்டு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெயராஜ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடுதோறும் மரம் வளர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ""இதற்கு செலவு அதிகம் தேவையில்லை. அலையவும் தேவையில்லை. எங்களுக்கு போன் செய்தால் போதும்'' என்கிறார். அவருடன் உரையாடினோம்:
"" "தூக்கத்தில் வருவதல்ல கனவு... உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு' என்று கூறியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். அவரது பெயரில் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதை தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திருக்கிறேன். அரசு அனுமதி பெற்று செயல்படும் இந்த அமைப்பில் தமிழ்நாடு, புதுவை முழுவதும் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் செயல் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
எங்களது பிரதான இலக்கு பள்ளிகள்தான். பள்ளிகளில் இடம் இருந்தால் அங்கேயே மரக்கன்றுகளை நடுவோம். விருப்பப்படும் மாணவர்களிடம் மரக்கன்றுகளைக் கொடுத்து அவர்கள் வீட்டிலும் அல்லது அக்கம் பக்கத்திலும் நடச் சொல்கிறோம். இதுவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் நாற்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். அதில் இருபதாயிரம் மரக்கன்றுகளை சுமார் இரண்டரை வயதாகியிருக்கும்.
"தானே' புயல் வந்த போது செங்கல்பட்டு காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன. இந்த இழப்பை ஈடுகட்ட இந்த பசுமைப் பணியை நண்பர்களுடன் இணைந்து செய்து வருகிறோம். மரக்கன்றுகளை "ஈஷா நர்சரி'-யிலிருந்து வாங்குகிறோம். அங்குதான் ஒரு மரக்கன்று, அது எந்த மரமாக இருந்தாலும் சரி, ஏழு ரூபாய்க்கு கிடைக்கிறது. மற்ற இடங்களில் விலை அதிகம். தினமும் காலையில் சைக்கிளில் சென்று மரக்கன்றுகளை நட்டு நீர் பாய்ச்சி வருவேன். சைக்கிளில் இரண்டு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு போவேன். மாலை வேளையில் புதிதாக நட்ட கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு வருவேன். நன்கு வளரும் வரை பராமரிப்பு தொடரும். சுற்று வட்டாரத்தில் திருமணம் நடக்கும் சமயங்களில் அங்கு சென்று மரக்கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி வருகிறோம். ஆரம்பத்தில் நான் சைக்கிளில் சென்று மரக்கன்றுகளை நட்டபோது எல்லாரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். போகப் போக எனது நோக்கத்தைப் புரிந்து கொண்டு என்னோடு இணைந்து உதவுகிறார்கள். களப்பணியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் நிதி உதவி செய்கிறார்கள். மரக்கன்றுகளை வாங்கித் தருகிறார்கள்.
மரங்களில் நிழல் தரும் மரங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். பாரம்பரிய மரங்களான அரச மரம், ஆல மரம், அத்தி, நீர் மருது, சரக்கொன்றை, புன்னை, பூவரசு, வாகை, வேம்பு போன்ற மரங்களை இடங்களைப் பொறுத்து நடுகிறோம். காய்கனி தரும் மரத்திற்கு பராமரிப்பு அதிகம் தேவை. தவிர, காய்கனி தரும் மரங்களை வளர்த்தால் அதை காய்கனிகளைப் பறிக்க பலரும் முயலுவார்கள். குரங்குகள் போன்றவை வரும். பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். அதனால் பலன் தரும் மரங்களைத் தவிர்ப்போம். "வீட்டில் நடுவதற்கு, பலன் தரும் மரங்கள் தேவை' என்று சொல்பவர்களுக்கு மட்டும் அவற்றை வழங்குகிறோம். கோடை விடுமுறையில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். கோடை மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறை வேறு. கோடையில் செடிகளுக்கும் அதிக தண்ணீர் தேவைப்படும். மேலும் சுட்டெரிக்கும் வெயிலில் மரக்கன்றுகள் சீக்கிரம் வாடி செத்துவிடும். அதனால், கோடை மாதங்களில் மரக்கன்றுகள் நடுவதில்லை.
தற்சமயம் புதிதாக ஒரு திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளோம். "ஒரு போன் போட்டால் வீடு தேடி மரக்கன்று வரும்...' என்பதுதான் அது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக்கன்று தேவைப்படுபவர்கள் "7010696804' என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். அவர்கள் இடத்திற்கு சென்று கொடுத்துவிட்டு வருவோம். ஆனால் பலரும், வீட்டில் வைக்க மல்லிகைச் செடி... ரோஜா செடி... செம்பருத்தி வேண்டும் என்கிறார்கள். சிலர் மரக்கன்றை வைத்தால் போதுமா.. வேலி கட்ட வேண்டாமா.. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்..' என்பார்கள்.
பூமி வெப்பமடைதலைத் தடுக்கும் முயற்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்கள் உதவியுடன் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி பாதுகாப்பாக வளர்ப்பதையும் சொல்லித் தருகிறோம். எங்கள் செயல்களை பாராட்டும் விதமாக அமெரிக்காவில் உள்ள "ஸீட்ஸ்', சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள் எங்களுடன் தோள் சேர்த்து நிற்கின்றன'' என்கிறார் ஜெயராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.