சைவ சமயம் போற்றும் நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர். இவர்களில் திருநாவுக்கரசர் பெருமான் பக்தியில் கனிந்தவர். இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர். இவருக்கு அப்பர், வாகீசர், சொல்லரசர், தாண்டகவேந்தர் என்ற சிறப்புப் பெயர்கள் உண்டு.
இவர் அருளிய பாடல்கள் 4,5,6 ஆம் திருமுறைகளாகப் போற்றப்படுகின்றது. இவரது பாடல்களில் திருக்கோயில் வகைகள், கோயில் பற்றியக் குறிப்புகள், திருக்கோயிலுக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படுவது சிறப்பாகும்.
இவர் தம் கைகளில் உழவாரக் கருவியை தாங்கியிருப்பதைக் காணலாம். கோயில்களுக்கு செல்லும் பொழுது தம் கையிலிருக்கும் உழவாரப்படையால் திருக்கோயில் சுவர், மண்டபங்கள் மீது வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் செடிகள், கொடிகள் போன்றவற்றை அகற்றும் பெரும் பணியினை செய்து வந்தார்.
திருநாவுக்கரசர் பெருமான் காட்டிய நல்வழியில் திருக்கோயில்களில் உழவாரப் பணியினை பலர் இன்று மேற்கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள "அண்ணாமலையார் அறப்பணிக்குழு' மேற்கொண்டு வரும் ஆன்மிகப்பணி குறிப்பிடதக்கது. இவ்வமைப்பின் தலைவராக ராமசந்திரன் பொறுப்பேற்று பணிகளைச் செய்து வருகிறார். அரசு வங்கியில் பணியாற்றிய இவர் விருப்ப ஓய்வு பெற்று ஆன்மிகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள குரங்கணில் முட்டம் வாலீசுவரர் கோயிலில் புதர்கள் மண்டியிருப்பதாக வந்த செய்தியினை அறிந்து நண்பர்கள் ஐந்து பேருடன் அங்கு சென்று சீர் செய்யும் பணியினை மேற்கொண்டார். இவ்வாறு முறையாக பராமரிக்கப்படாத கோயில்களை சீர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
கடந்த 2006-ஆம் ஆண்டு அண்ணாமலையார் அறப்பணிக்குழுவின் உழவாரப்பணி துவங்கியது. இப்பணியில் 80 முதல் 100 நபர்கள் விருப்பமுடன் பங்கேற்கின்றனர். முறையான பராமரிப்பு இல்லாமலும் செடிகள், மரங்கள் வளர்ந்து பூஜைகள் நடைபெறாமல் உள்ள கோயில்களில் தேவையற்ற செடிகள் முட்புதர்களை உள்ளூர் மக்களின் உதவியுடன் அகற்றும் பணியினை மேற்கொள்கின்றனர்.
பணி முடிந்த பின்னர் பயன் தரும் மரங்கள் பூச்செடிகளை கோயிலைச் சுற்றி நட்டு வைக்கும் பணியினையும் செய்கிறார்கள். உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் அச்செடிகளைப் பராமரிக்கும் பணியினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதுவரை 77 திருக்கோயில்களில் அண்ணாமலையார் அறப்பணிக்குழு உழவாரப்பணியினை செய்துள்ளது. 78-ஆவது திருக்கோயிலாக சின்ன சேலம் அருகில் உள்ள கூகையூர் காரியாம்புரீசுவரர் கோயிலில் நடைபெற்றது.
மணவூர், கற்கடேசுவரர், கீழ்குளத்தூர் போன்ற கோயில்களில் ஊர் மக்கள் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்துள்ளனர். இக்குழுவினர் செம்பரம்பாக்கம் அருகே உள்ள நயப்பாக்கம் என்ற ஊரில் நேத்ரதாயினி சமேத மாசிலாமணீசுவரர் கோயிலில் மேற்கொண்ட பணி குறிப்பிடதக்கது. நாவாஸ்பேட்டை, பென்னலூர் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை அருகே திருசோற்றுத்துறை கோயிலில் இக்குழுவினர் உழவாரப் பணியினை மேற்கொண்ட பின்னர் சுவாமி திருச்சுற்று வலம் வர எளிதாக முடிந்தது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஆன்மீக கண்காட்சியில் இக்குழுவினர் மேற்கொண்ட உழவாரப்பணிகள் பற்றிய நிழற்பட காட்சி அரங்கில் இடம் பெற்றது சிறப்பானது.
உழவாரப்பணியினைப் போற்றிய நாவுக்கரசர் பெருமான் சித்திரை மாதத்தில் திருப்புகலூர் திருத்தலத்தில் சதய நாளில் இறைவனடி கலந்தார்.
நமது பண்பாடு, கலாசாரம், வரலாறு ஆகியவற்றை எடுத்துக்கூறும் திருக்கோயில்களில் உழவாரப்பணியினை மேற்கொள்ளும் அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினரின் மேன்மையானப் பணியினை போற்றி மகிழ்வோம்.
-ஸ்ரீதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.