ஞாயிறு கொண்டாட்டம்

மனம் தளராத ராணுவ அதிகாரி

மருத்துவர்கள்  இனி இவர் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லி கைவிடப்பட்டவர் 27 வயதான ராஜசேகர். இன்று இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்

வனராஜன்

மருத்துவர்கள்  இனி இவர் உயிர் பிழைப்பது கடினம் என்று சொல்லி கைவிடப்பட்டவர் 27 வயதான ராஜசேகர். இன்று இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அதுவும் உலகின் மிக உயரமான போர்க்களம் என்று அழைக்கப்படும் சியாச்சினில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மதுரை மாவட்டத்தில் உள்ள மைதான்பட்டி என்ற சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். தந்தை 2005-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போது ராஜசேகருக்கு வயது 15. குடும்பத்தைப் பராமரிக்க அவரது அம்மா தையல் பணியை மேற்கொண்டார். 

ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினார் ராஜசேகர். அதனால் பல கடின முயற்சிகளுக்குப் பின் ராணுவத்தில் சேர தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து ராணுவ  அதிகாரிக்கான (லெப்டினன்ட்) பயிற்சி பெற அழைக்கப்பட்டார். அங்கே நடந்தது தான் எதிர்பாராத சம்பவம்.  இனி ராஜசேகர் பேசுகிறார்:

""உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பயிற்சியின் போது கஷ்டங்கள் பல இருக்கும். மைதானத்தில் அன்றாடம் நடக்கும் பயிற்சிகளை தவிர முக்கியப் பயிற்சியாக முதுகில் அதிகக் கனத்தைத் தூக்கிக்கொண்டு 10 கிலோமீட்டர் ஓடும் பயிற்சியின்போது எனக்கு உடலில் நீர் சத்து குறைந்து போனது. மயங்கிவிழுந்துவிட்டேன். திடீரென்று  என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மருத்துவமனையில் 18 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் 22 நாட்கள் ஏஈம பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் நிச்சயம் பிழைக்கமாட்டேன் என ராணுவ மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். இனி இவர் பயிற்சியை நிறைவு செய்வது கடினம் என்று என்னுடைய பயிற்சியாளர்களிடம் மருத்துவர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

காரணம் என்னுடைய சிறுநீரகமும், கல்லீரலும் 70 சதவீதம் பாதிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.  நான் மனம் தளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும் தினமும் நான்கு மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளத் துவங்கினேன். அது பலனளித்தது. நான் உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் என்னுடைய பயிற்சியை நிறைவு செய்யும் அளவிற்கு உடற்தகுதியும் பெற்றுவிட்டேன். 

40 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். சக பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் அனைத்து பிரச்னைகளையும் எதிர்த்துப் போராடி வெற்றியும் பெற்றேன்.   ஏக்கம், தவிப்பு, துடிப்பு என விலைமதிப்பில்லாத தியாகத்தையும், எண்ணத்தினையும் இந்திய நாட்டிற்கு அர்ப்பணிப்பது இளைய தலைமுறையின் கடமையாகும்'' என்றார் ராஜசேகர். 

இந்தப் போராட்டத்தின் பயனாக அகாதெமியில் சிறந்த ஊக்கமளிப்பவருக்கான விருதைப் பெற்றுள்ளார் ராஜசேகர். வெற்றிகரமாகப் பயிற்சியை நிறைவு செய்த ராஜசேகர்,  12 அசாம் ரைஃபிள்ஸ் படை பிரிவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT