வ.செ.நடராசன் 
ஞாயிறு கொண்டாட்டம்

கண்களை பாதுகாப்போம்

நாற்பது வயதில் நம்முடைய மனம் பக்குவப்பட்டிருக்கலாம், ஆனால் உடல் ஒத்துழைக்காது. சில நேரங்களில், உடலோடு சேர்ந்து மனமும் தடுமாறும்.

வனராஜன்

நாற்பது வயதில் நம்முடைய மனம் பக்குவப்பட்டிருக்கலாம், ஆனால் உடல் ஒத்துழைக்காது. சில நேரங்களில், உடலோடு சேர்ந்து மனமும் தடுமாறும். "உடல் சார்ந்த பிரச்னைகளை இனி தடுக்கவே முடியாதா, சரி செய்யவே முடியாதா?' என்ற பயம் மனதில் ஏற்படும். ஆனால், கண் தொடர்பான பிரச்னையில் உங்களுக்குப் பயம் எதுவும் தேவையில்லை. கண்களுக்கான ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, எந்தவொரு பிரச்னையையும் சரியான நேரத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்தால் சரி செய்து விடலாம்" என்று நம்பிக்கையூட்டுகிறார் முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசன்.  கண் நோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் அளித்த விளக்கமான பதில் இதோ:

பொதுவாக கண்ணில் ஏற்படும் நோய்கள் என்ன?

பொதுவாகவே அனைத்து வயதினருக்கும் கண்ணில் அதிகம் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். நோய்த்தொற்று ஏற்பட்டால் கண்ணில் அரிப்பு ஏற்படும். அதனால் கண்கள் சிவக்க ஆரம்பித்துவிடும். இது பாக்டீயாவினால் வரும். வெயில் காலத்தில் "மெட்ராஸ் ஐ' வரும். இது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது. இது மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்க கூலிங் கிளாஸ் அணியலாம். வயதானவர்களுக்குக் கண்புரை, விழித்திரை பாதிப்பு ஏற்படும். அதனால் 50 வயதை கடந்தவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எந்தெந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் கண்ணில் ஏற்படும்?

சிறுவயதில் குழந்தைகளுக்குப் பார்வை குறைபாடு ஏற்படும். இது பரம்பரையினாலும் வரும். பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் கண்ணாடி அணியலாம். இப்போது லேசர் சிகிச்சை மூலம் லென்ûஸ கண்ணில் வைத்து கொள்பவர்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் தொடர்ந்து கண்ணாடி போட வேண்டிய தேவை கிடையாது. குறிப்பிட்ட காலத்தில் சரியாகிவிடும். ஆனால் அவர்கள் கண்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது.

ஐ.டித்துறையில் பணியாற்றும் நடுத்தர வயதினருக்குக் கண் வலி அதிகம் ஏற்படுகிறது. அதற்குக் காரணம் கணினியில் தொடர்ந்து பணியாற்றுவதால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு வலி உண்டாகும். இதன் காரணமாக கழுத்துவலி, தலைவலி உண்டாகும். தொடர்ந்து கணினியில் பணியாற்றுபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களை மூடி திறக்க வேண்டும். ஓடும் வாகனங்களில் பயணிக்கும் போது படிக்கக்கூடாது. இது பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லா வயதினரும் இப்போது செல்போன் பயன்படுத்துகிறார்கள். எனவே இருளில் செல்போன், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

பொதுவாக கண் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

ஆண்டிற்கு ஒரு முறையாவது கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண் மருத்துவர் பரிந்துரைந்தால் கண்ணாடி அணிவது அவசியம். உங்களுக்குக் கண்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை  சென்று பார்க்க வேண்டும். சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. அது உங்களுக்குப் பெரும் ஆபத்தாக மாறிவிடும்.   குறைந்த வெளிச்சத்தில் கண்களுக்கு நாம் வேலை கொடுத்தால் அது கண்களுக்கு கெடுதியை ஏற்படுத்தும். வளமான பார்வைக்கு போதிய வெளிச்சம் தேவை. இரவிலும், பகலிலும் வாகனங்கள் ஓட்டும்போது கண்களில் தூசு விழாதவாறு பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும். குறிப்பாக அழுக்கான கைகளால் கண்களை கசக்கக் கூடாது. சூரிய வெளிச்சத்தை நேரடியாகப் பார்க்கக் கூடாது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலே நம்முடைய கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

கண் புரை நோய் பற்றி?

இந்தியா போன்ற தட்பவெப்ப நிலை மிகுதியாக உள்ள நாடுகளில் 50 முதல் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கண்புரை நோய் வர வாய்ப்பு மிகுதி. ஒரு பொருளினைப் பார்க்கும்போது ஒளிக்கதிர்கள் கண்ணில் உள்ள பளிங்கு போன்ற கண்ணாடி வில்லை(Lens) வழியாகச் சென்று விழித்திரையில் (Retina) பதியும்.  கண்ணாடி வில்லை ஒரு துவரம்பருப்பு அளவே இருக்கும். இது கண்ணாடி போல் மிகவும் தூய்மையாக இருந்தால்தான் ஒளிக்கதிர் அதன் வழியாக ஊடுருவி செல்லும். 

வயது ஆக ஆக கண்ணாடி போல் இருக்கும் இவ்வில்லையில் வெள்ளை படர்ந்து ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்வதைத் தவிர்த்துவிடும். அதனால் கண் பார்வை மங்கும்.தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரியாது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் புரை நோய் 40 முதல் 50 வயதிலேயே வர வாய்ப்பு உண்டு. 

கண் புரை நோயை தடுப்பதற்கு வழிமுறைகள் உள்ளனவா?

கண்புரை நோய் உள்ளவர்களுக்குத்  தொடக்கக் காலத்தில் மூக்குக் கண்ணாடி வாயிலாகப் பார்வையை ஓரளவு சரி செய்யலாம். ஆனால் அது 60 முதல் 70 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்தால் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை நீக்குவதை விட வேறு வழியில்லை. புரை நோயினை அறுவை சிகிச்சை செய்ய வயது வரம்பு இல்லை. மருந்தினால் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சையால்தான் முடியும். அறுவை சிகிச்சை முறை மிகவும் எளிதானது. கண்கள் மரத்துப்போக ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்வதால் எத்துன்பமும் நேர்வதில்லை. 

அறுவை சிகிச்சையால் புரையினை நீக்கிய பின் மூக்குக் கண்ணாடி அணிவதாலும், கண்களில் பார்வைக் கண்ணாடியைப் பொருத்திக் கொள்வதாலும் நல்ல பார்வை கிடைக்கும். அண்மை காலமாக அறுவை சிகிச்சை செய்யும் பொழுதே கண்ணினுள் கண்ணாடி வில்லையை பொருத்தும் நிலை பரவலாக நடந்து வருகிறது. 

நீரிழிவு நோய் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துமா?

நாட்பட்ட நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாதவர்களுக்கும் கண் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது விழித்திரைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. விழித்திரை பாதிப்பால் கண் பார்வை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் தொல்லைகள் ஏதுமின்றி மறைந்திருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வை மங்கும்.

 சிலருக்கு திடீரென்று பார்வைக் குறைபாடு ஏற்படலாம்.  கண்பரிசோதனை மூலம் இத்தொல்லையை எளிதில் கண்டறியலாம். விழித்திரை பாதிப்பினால் கண் பார்வை முழுமையாகக் குறையலாம். கண் விழித்திரை இடம் பெயரலாம். மற்றும் குளோக்கோமா என்ற கண்களுக்குள் ஏற்படும் அழுத்தமும் அதிகரிக்கலாம். லேசர் சிகிச்சையால் ரத்த நாளங்கள் மூலம் வரும் ரத்தக் கசிவை நிறுத்திவிட முடியும்.  இந்த சிகிச்சை முறையினால் கண் பார்வை குறைவதை அதிகமாகாமல் தடுக்க முடியும். ஆனால் இழந்த கண் பார்வையைத் திரும்பப் பெற முடியாது. 

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் சார்ந்த எவ்வித தொல்லைகள் இல்லாமல் இருப்பினும் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சர்க்கரையின் அளவு உயர் ரத்தத்தின் அளவு மற்றும் கொழுப்பு சத்துகளின் அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருந்தால் கண் விழித்திரை பாதிப்பைத் தவிர்க்க முடியும். 

உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களும் கண் பார்வையில் பாதிப்பை உண்டாக்குமா?

உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து அதிகமாக இருப்பின் இது விழித்திரையைப் பாதிக்கும். கண் பார்வை குறைய நேரிடும். இத்தொல்லையை கண் மருத்துவரால் எளிதில் கண்டு லேசர் சிகிச்சையினால் தக்க சிகிச்சை அளிக்க முடியும். இத் தொல்லை வராமல் தவிர்க்க உயர் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். முதுமையில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் தான் கண் அதிகம் பாதிக்கப்படுகிறது. 

கண் பாதுகாப்பிற்கு என்று தனியாகப்  பயிற்சிகள் இருக்கிறதா?

நேராக நின்று கொண்டு பார்வையை மேல், கீழ், இடதுபுறம், வலதுபுறம் என பார்க்க வேண்டும். பத்து முறை இவ்வாறு செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி செய்வதற்கு 5 நிமிடங்கள் மட்டுமே போதும். காலை, மாலை என இரு வேளையிலும் செய்யலாம்.   இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது கண்ணில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பார்வை நரம்புகள், தசைகள் வலுப்பெறும். 

கண்தானத்தின் அவசியம் பற்றி?

நம் நாட்டில் கண் பார்வை இழந்தவர் பல லட்சக்கணக்கானவர்கள் இருப்பினும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த கூடியவர்களாக இருப்பவர்கள் சில லட்சம் பேர்களே. கண் புரை நோயினால் பார்வை இழந்தவர் அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெறுகின்றனர். அதே போல கருவிழியில் பாதிப்பு உள்ளவரும் அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வை பெறுகின்றனர். இந்த அறுவை சிகிச்சைக்கு இறந்தவர்களின் கண்கள் தேவைப்படுகின்றன. 

பழுதடைந்த வெண்ணிறமாய் உள்ள கருவிழியை அகற்றி பளிங்கு போல் உள்ள மாற்றுக் கருவிழியைப் பொருத்த வேண்டும். ஒருவர் இறந்தபின் 6 மணி நேரத்திற்குள் கண்களை எடுத்தால்தான் அவற்றைப் பயன்படுத்த முடியும். 

கண்தானம் செய்ய விரும்புபவர் இறந்தபின் அவர் கண்களின் மேல் நீரினைத் தேங்க வைக்க வேண்டும். இல்லையேல் நீரில் நனைத்த பஞ்சை வைக்க வேண்டும். 

கண் மருத்துவர் வந்து கண்களை எடுக்கும்வரை விழித்திரை உலராமல் இருக்க இம்முறை உதவும். கண் மருத்துவர் கண்களை அகற்றி விட்டு  அதற்குப் பதில் கண் போன்ற பஞ்சு உருண்டையை உள்ளே வைத்து இமைகளைத் தைத்துவிடுவார்.அதனால் விழிகள் அகற்றப்பட்டிருப்பதை எவராலும் எளிதில் கண்டு கொள்ள முடியாது. 

கண்களை எடுக்க மருத்துவருக்கு பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் தான் தேவை. இறந்தவர் கண்களால் பார்வை பெற்றவர் விபரம், கண்தானம் அளித்த உறவினருக்கு உடனே தெரிவிக்கப்படும். ஒருவர் கண் தானத்தால் இருவர் கண் பார்வை பெறுகின்றனர். ஒருவர் இறந்த பின்பும் அவரால் பிறர் கண் பெற்று வாழ்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் மழை

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற முதியவா் கைது

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

வீட்டுமனைப் பட்டாவுக்கு நிலம் ஒதுக்கக் கோரி முற்றுகை

SCROLL FOR NEXT