அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், சேலத்தை அடுத்த கருப்பூரில் ஸ்ரீ ராதா கோகுலானந்தா திருக்கோயில் சிற்ப வேலைப்பாடுகளுடன் முழுவதும் கற்களைக் கொண்டு, ரூ. 25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
சேலத்தை அடுத்த கருப்பூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் முழுவதும் கற்களைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. 25,000 சதுர அடி பரப்பளவில் கருவறை, மகா மண்டபம், திறந்தவெளி அரங்கம், விறகடுப்பு சமையலறை, பிரசாதம் அருந்தும் கூடம், நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் தங்கும் அறைகள், வேதங்களைக் கற்பிக்கும் அரங்கம், பிரபுபாதா நினைவரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவப்புக் கற்கள், கருப்புப் பளிங்குக் கற்களில் அம்மாநிலக் கலைஞர்களைக் கொண்டு தத்ரூபமாக கிருஷ்ண லீலையை விளக்கும் தத்ரூபமான கற்சிற்பங்களுடன் இஸ்கான் கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
மேலும் வெள்ளைப் பளிங்கு, வெள்ளை கிரானைட், நீல கிரானைட் கற்களைக் கொண்டு கோயில் கட்டும் பணியை ஆனந்த் ஸ்தபதி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2015-இல் தொடங்கிய கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக, சேலம் இஸ்கான் கோயில் துணைத் தலைவர் கிருஷ்ணதாஸ்
கூறியதாவது:
""அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்துக்கு (இஸ்கான்) உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. தமிழகத்தில் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் அற்புதமான கோயில்கள் உள்ளன.
கடந்த 300 ஆண்டுகளில் இதுபோன்று முழுவதும் கற்களைக் கொண்டு எந்தவொரு கோயிலும் கட்டப்படவில்லை என்றே கூறலாம். அந்த வகையில், சேலத்தில் போதிய இடம் இருந்ததால் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ ராதா கோகுலானந்தா கோயில், முழுவதும் கற்களைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
இக்கோயிலின் கருவறை வட இந்திய பாணியிலும், மகா மண்டபம் உள்ளிட்ட கோயிலின் இதர பகுதிகள் தென்னிந்திய பாணியிலும் கட்டப்பட்டு வருகின்றன.
கோயில் கருவறை கோபுரம் 108 அடி உயரத்துக்குக் கட்டப்படும். கோயிலின் நீளம் 250 அடி, அகலம் 100 அடி. 108 கல் தூண்கள், 64 சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், 32 கோயில் வளாகத் தூண்கள், கிருஷ்ண லீலைகளை விளக்கும் 16 சிற்பச் சாளரங்களைக் கொண்டதாக இக்கோயில் கட்டப்பட்டு வருகிறறது.
ஒரே இடத்தில் 1,500 பக்தர்கள் அமர்ந்து பிரசாதம் அருந்தும் வகையில் இரண்டு பெரிய அரங்கங்கள் கட்டப்படுகின்றன. கேரளத்தில் இருந்து தருவிக்கப்பட்ட 3,000 பேருக்கு உணவு தயாரிக்கும் வெண்கலப்பாத்திரம் மூலம் பிரசாதம் தயாரிக்கப்படும். கோயில் முழுவதும் தீபமேற்றி பழங்காலப் பாரம்பரிய முறையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படும்.
இக்கோயிலில் சூரிய ஒளி மின்சாரம் மூலமாக மின் விளக்குகள், மின்விசிறி இயக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், பாகவதம் குறித்த சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கண்ணாடியில் இழைத்து பார்வைக்கு வைக்கப்படும்.
பாகவதம், சைதன்ய சரிதாமிர்தம், ராமாயணத்திலுள்ள காட்சிகளை சிவப்புக் கற்களில் வடிவமைத்து 560 அடி நீளத்துக்கு சுவர்களில் தத்ரூபமாகப் பொருத்தப்படும்.
மேலும் கோயில் வளாகத்தில் 4,000 பேர் அமர்ந்து பல்வேறு உபன்யாசங்கள், பாரம்பரிய கலை, இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வகையில் திறந்தவெளி அரங்கம் ஏற்படுத்தப்பட உள்ளது. மழை, வெயில் காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்க நவீன முறையில் திறந்து மூடும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது. இதுதவிர திருமண வைபவங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்திக்கொள்ளத் தனி அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் 60 சதவீத அளவுக்கு முடிந்துள்ளன. கடந்த 2015-இல் தொடங்கிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போது கரோனா பொது முடக்கத்தால் சில மாதங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளை அடுத்த 3 ஆண்டுகளில் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளோம். முழுவதும் கற்களைக் கொண்டு கட்டுவதால் கூடுதல் நேரமாகிறது. இந்தக் கோயில் கட்டி முடிக்கப்பட்டால் சேலத்தின் அடையாளமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்தக் கோயிலின் திருப்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் 88700 16108 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.