முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

30 ஆண்டுகள் 15 கி.மீ. நடைப்பயணம்

பல ஆண்டுகளுக்கு முன்னர் தினந்தோறும் ஒருவரின் வருகையைப் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருப்பர் என்று சொன்னால் அது தபால்காரரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

Updated On : 19 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

பல ஆண்டுகளுக்கு முன்னர் தினந்தோறும் ஒருவரின் வருகையைப் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருப்பர் என்று சொன்னால் அது தபால்காரரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. "சார் போஸ்ட்' என்ற அவரின் குரலின்றி எந்த விவரமும் தெரியாது என்ற நிலையே இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்தச் சேவை கையடக்க செல்போன்களுக்கே வந்துவிட்ட பிறகும், அந்தக் காலத்து தபால் சேவையின் சுவாரஸ்யம் இப்போதில்லையே என ஏங்குவோர் பலரும் உண்டு.

நகர்ப்புறங்களில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தாலும் நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் தபால்காரரின் பணி மகத்தானது. அதற்காகவே பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட பின்னரும் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார் குன்னூரைச் சேர்ந்த கிராமிய அஞ்சல் சேவகரான சிவன். தனது 65-ஆவது வயதில் 30 ஆண்டு கால சேவையை முடித்து ஓய்வு பெற்றுள்ள அவர் தனது பணிக்கால அனுபவங்கள் தொடர்பாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

""கடந்த 1985-ஆம் ஆண்டில் தபால்துறையில் தபால் தலை விற்பனையாளராகப் பணியில் சேர்ந்தேன். அதையடுத்து ஹில்குரோவ் அஞ்சல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டேன். போக்குவரத்து வசதி மட்டுமல்ல, சாலையே கூட இல்லாத இடங்கள்தான் எனது தபால் பணி எல்லையாகும். தினமும் குறைந்தது 15 கி.மீ. தொலைவுக்காவது நடந்து சென்றால்தான் அப்பகுதிகளுக்கு வரும் தபால்களை வழங்க முடியும்.

Advertisement

எனது தபால் எல்லைப்பகுதி பழங்குடியினருக்கான குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதோடு அவர்களுக்கு எழுதப் படிக்ககூடத் தெரியாத நிலையில் அவர்களுக்காக அந்த கடிதத்திலுள்ள விவரங்களைப் படித்துச் சொல்வது, அவர்களிடமிருந்துப் பணத்தை பெற்று வந்து அஞ்சல் நிலையத்தில் கட்டுவது, தபால் நிலையத்திலிருந்து அவர்களுக்கான பணத்தை எடுத்து சென்று தருவது என அனைத்து பணிகளும் செய்வேன். ஹில்குரோவ் தபால் நிலையத்திற்கு ரயில் பாதை வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டும். அதேபோல, போகும் வழியிலுள்ள எஸ்டேட் பகுதியை கடக்கும்போது அருவிகள், வழுக்குப் பாறைகள் உள்ளிட்டவற்றோடு யானை, சிறுத்தை, கரடி, பாம்பு எனப் பல்வேறு வனஉயிரினங்களின் நடமாட்டமும் இருக்கும். அவற்றைக் கடந்துதான் செல்ல வேண்டுமென்ற சூழலில் எனது பணிக்காலத்தில் அவற்றையெல்லாம் பார்த்திருக்கிறேனே தவிர அவற்றால் எனக்கு எந்த இடையூறும் வந்ததில்லை'' என்றார் சிவன்.

கடந்த 30 ஆண்டுகளாக காடு, மலை என பாராமல் பணியாற்றி வந்த கிராமிய அஞ்சல் சேவகர் சிவன் ஓய்வு பெற்று 3 மாதங்களாகி விட்டாலும் தற்போதுதான் இவரது சேவை குறித்து வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது சேவையைப் பாராட்டி நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தற்போதைய தமிழக அரசின் முதன்மை செயலருமான சுப்ரியா சாஹூ, ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார்ஆகியோர் தங்கள் சுட்டுரையில் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அதேபோல, மாநிலங்களவை உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சத்தை சிவனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர்கûளைப்போல மேலும் பலரிடமிருந்தும் சிவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.