ஞாயிறு கொண்டாட்டம்

அரிய வடிவமாகத் திகழும் "கொற்றவை'

பாண்டிய நாட்டில் துர்க்கை (கொற்றவை) சிற்பம் ஒன்று மான் வாகனத்துடன் கண்டெடுக்கப்பட்டதாக செய்தி வெளியாளது. கண்டெடுக்கப்பட்ட கொற்றவையின் வடிவம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

கி.ஸ்ரீதரன்

பாண்டிய நாட்டில் துர்க்கை (கொற்றவை) சிற்பம் ஒன்று மான் வாகனத்துடன் கண்டெடுக்கப்பட்டதாக செய்தி வெளியாளது. கண்டெடுக்கப்பட்ட கொற்றவையின் வடிவம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

மனிதன் தன் துன்பங்களிலிருந்து விடுபட சக்தி வேண்டுமென விரும்புகிறான். அச்சக்தியை கடவுளாக நினைக்கிறான். சக்தியையும் துணையாகவும் இருப்பதுமான "தாய்' என்ற சக்தியை வழிபடுகிறான்.

மனிதன் நாகரீகம் வளர்ந்த நிலையில் தாய் தெய்வத்திற்கு பல்வேறு வடிவங்கள் அளித்து வழிபடத் துவங்கினான். இன்றும் பல ஊர்களில் காவல் தெய்வமாக காளி, பிடாரி, கொற்றவை போன்ற பல பெண் தெய்வங்கள் சிறப்பாக வழிபடப் பெறுவதைக் காணலாம். 

தமிழகத்தில் கொற்றவை என்னும் துர்க்கை வழிபாடு சிறப்பாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. நாட்டை ஆண்ட அரசன் "கொற்றவன்' என அழைக்கப்பட்டான். "கொற்றம்' என்னும் சொல் வெற்றி, வீரம் என்ற பல பொருள் தரும். வெற்றியைத் தருபவள் "கொற்றவை' ஆவாள். கொற்றவை வழிபாடு பற்றிய குறிப்பினை தொல்காப்பியம் முதல் அனைத்து இலக்கியங்களும் புகழ்ந்து பேசுகின்றன. கொற்றவைக்குரிய பல்வேறு பெயர்களாக அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

துன்பம் ஏற்பட்ட காலத்தில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு அச்சத்தைப் போக்கி அருள் தருபவள் "துர்க்கை' எனச் சிறப்பித்து கூறப்படுகிறது.

துர்க்கை வடிவத்தினை சிற்ப நூல்கள் பல வடிவமாக எடுத்துரைக்கின்றன. பல்லவ மன்னர்கள் காலந்தொட்டு சிற்ப வடிவங்களாகத் தொடர்ந்து பார்க்கலாம். மாமல்லபுரத்தில் மும்மூர்த்திகுகை, வராக மண்டபம், ஆதி வராக மண்டபம், பனைமலை போன்ற பல கோயில்களில் துர்க்கையின் அழகிய வடிவங்களாகக் காணலாம். மேலும் திருச்சி மலைக்கோட்டை கீழ் குடைவரை கோயில் திருப்பரங்குன்றம் போன்ற பல குடைவரைகளில் துர்க்கையின் வடிவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தொண்டை நாட்டில் பலகைக் கல்லில் துர்க்கையின் வடிவம் புடைப்புச் சிற்பமாக  வடிக்கப்பட்டு வழிபடப் பெறுகின்றன. சோழ மன்னர்கள் காலத்தில் கோயிலின் கருவரை சுவரில் வடக்குத் தேவ கோட்டத்தில் துர்க்கையின் வடிவம் வழிபடப்பெறுகின்றது.

துர்க்கைக்கு சிம்மமும் மானையும் வாகனங்களாகக் காட்டபடுவதைப் பல சிற்பங்களில் காணமுடிகிறது. பல்லவர் -சோழர் கால சிற்பங்களில் துர்க்கையின் தலைக்கு மேலே சிம்மம் மானின் முகத்தை சிற்ப வடிவில் காட்டியிருப்பதைக் காணலாம்.

தஞ்சைக்கு அருகில் உள்ள புள்ளமங்கை கோயில் துர்க்கை வடிவத்திற்கு இடது புறம் பூத கணம் ஒன்று மானைப் பிடித்திருப்பது போல சிற்பம் காட்டப்பட்டுள்ளது சிறப்பாகும். 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஒரத்தூர் என்னும் ஊரில் ஏரிக்கரையில் கற்பலகையில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள கொற்றவையின் வடிவத்தில் கொற்றவையின் வாகனமாக இரண்டு மான்கள் காலின் பின்புறத்தில் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளன. 

தற்போது ராஜபாளையம் அருகே மாங்குடி -ஆவுடையாபுரம் பகுதியில் மான் வாகனத்துடன் காணப்படும் கொற்றவையின் சிற்ப வடிவம் சிற்பக்கலை ஆய்வாளர்களுக்கு அரிய வடிவமாகத் திகழ்கிறது. 

-கி.ஸ்ரீதரன், தொல்லியல்துறை (பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT