தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது போன்ற காலங்களில் நாம் மண் பானைகளைத் தேடி வாங்குகிறோம். அந்த மண்பாண்டங்களுக்கு இப்போது தனி மவுசு ஏற்பட்டுள்ளது . தென்மாவட்டங்களில் தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள் பல மாநிலங்களுக்கும், மற்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கா வரை நமது மண்பாண்டங்களை விரும்பி வாங்குகிறார்கள்.
நமது முன்னோர்கள் மண் பாத்திரங்களைத் தான் அதிகம் பயன்படுத்தினர். இதனால் எந்த விதமான நோயும் அவர்களை தாக்காமல் முதுமையை கூட சுகமாகக் கழித்தனர். ஆனால் இன்று இளம் வயதினரே சர்க்கரை, இதய நோய் என பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் நமது உணவு முறையும், காலமாற்றத்தால் அலுமினியம், சில்வர், நான்ஸ்டிக் உள்ளிட்ட பாத்திரங்களைப் பயன்படுத்தியது தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நெல்லை அருகேயுள்ள கூனியூர் மண் பாண்டகளுக்குத் தனி மவுசு . காரணம் இங்குத் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள் அமெரிக்கா பறக்கின்றன. மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளான மேலப்பாளையம் குறிச்சி, மாவடி, தென்காசி அருகேயுள்ள இலஞ்சி, தேன்பொத்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்படும் மண்பானைகள், உண்டியல்கள், அடுப்பு, குழம்பு சட்டி, குடிநீர் டேங்க், பூஜை அறையிலுள்ள சாம்பிராணி கிண்ணம், டீ குவளை உள்ளிட்ட பொருட்கள் கேரளா, பெங்களூர், ஐதராபாத், சென்னை, வேலூர், சேலம், திருச்சி, கோவை, மதுரை ஆகிய பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒன்றிணைந்து சம்பாதிக்கிறோம்!
லிலி“""மண் பானைகள் செய்வது எங்களுடைய குடும்பத் தொழில். அதனால் அதனை விடாமல் நானும் என்னுடைய கணவரும் செய்து வருகிறோம். முன்பு போல் இல்லாமல் இப்போது களிமண் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவே இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பம் நடத்தி குழந்தைகளைக் காப்பாற்றுவது சிரமமாக இருந்தது. ஆண்டு ஒன்றுக்கு ஐம்பதாயிரம் வருமானம் பார்ப்பது கடினமாக இருந்தது. எனவே தொழிலை விரிவுபடுத்த நினைத்தோம். எனவே எங்கள் ஊரில் உள்ள பெண்களுக்குப் பானை தயாரிப்பில் பயிற்சியளிக்க "நர்மதா' என்கிற சுய உதவிக் குழுவை தொடங்கினோம். பானைகள் செய்ய கற்றுக்கொடுத்தோம். எங்களது கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் அதிகமான பெண்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளோம். கைகளால் தயாரிக்கப்பட்ட பானைகளை எங்களது உறவினரின் உதவியுடன் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தோம். இப்போது ஆண்டிற்கு இரண்டரை லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறோம் '' என்று சொல்லும் 52 வயதான சாந்தி ""எங்களது வெற்றிக்கு எளிமை தான் முக்கியக் காரணம். எளிமையான வடிவமைப்புகளில் கவனம் செலுத்தி சுத்தமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கிறோம். நாங்கள் அலங்காரமான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மாறாகத் தயாரிப்புகளின் பயன்பாட்டு அம்சங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். மூலப்பொருட்களான களிமண்ணை உள்ளூர் ஏரிகளில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி பெற்று இருக்கிறோம். நான் தனியாக பணிபுரிந்து சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகமான தொகையை நாங்கள் ஒன்றிணைந்து சம்பாதிக்கிறோம். விற்பனையாளர்களுடன் வணிக ரீதியிலான தொடர்பை ஏற்படுத்தியிருப்பதால் விற்பனையும் அதிகரித்துள்ளது. ''
ஆரோக்கியத்துடன் வாழலாம்!
""எங்கள் குடும்பத்தில் எல்லோரும் மண் பாத்திரங்களில்தான் சமைத்து சாப்பிட்டோம். அதில் சமையல் செய்யும் போது சோறும், குழம்பும் மிகவும் ருசியாக இருக்கும். மண் பானை சோறு மற்றும் தண்ணீர் அவ்வளவு வாசமாக இருக்கும். நாளடைவில் உலோக பாத்திரங்களை வாங்கி சமைக்கும் கட்டாயத்திற்கு ஆளான நிலையில் தற்போது பழைமை மாறாமல் மீண்டும் மண்பாத்திரங்களை மக்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது மண்பாண்டங்களின் பயன்பாட்டை பெருக்கினால் நோய் நொடியின்றி நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழலாம்'' என்கிறார் மற்றொரு மண் பாண்ட விற்பனையாளர் மகேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.