முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தினமணியும் நானும் 1934-2019: நடுநிலையான தலையங்கம்

1954-ஆம் ஆண்டில் பழநி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நான் ஏழாவது வகுப்பு மாணவனாய் இருந்தபோது எங்கள் வகுப்பின் கரும்பலகையில் அன்றாட நிகழ்வாகத் தினமணியின் செய்திகளைத் தொகுத்து எழுதவேண்டிய

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

1954-ஆம் ஆண்டில் பழநி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நான் ஏழாவது வகுப்பு மாணவனாய் இருந்தபோது எங்கள் வகுப்பின் கரும்பலகையில் அன்றாட நிகழ்வாகத் தினமணியின் செய்திகளைத் தொகுத்து எழுதவேண்டிய பொறுப்பை எனக்குத் தந்திருந்தார் வகுப்பு ஆசிரியர் சக்திவேல்.

கண்டிப்பானவர். ஆறடி உயரம் இருப்பார். தும்பைப் பூ வெண்ணிறத்துத் தூய ஆடையில் முழுக்கைச் சட்டையும், வேட்டியும் நீறணிந்த நெற்றியுடன் தெளிவாகத் திகழ்வார்.

1954-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளில் தினமணியின் முதல் பக்கத்தில் அன்றைய தமிழக முதலமைச்சர் மூதறிஞர் ராஜாஜி படம் போட்ட செய்தியும், மற்றும் பல முக்கியச் செய்திகளும் வந்தன. அத்தனையும் தொகுத்து எழுதுவதற்குப் பத்திரிகையைத் திறந்து வைத்து எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்போதெல்லாம் ஏப்ரல் முதல் நாளை "முட்டாள்கள் தினம்' என்று கூறி மாணவர்கள் ஒருவருக்கொருவர் பேனா மையை அடுத்தவர்கள் ஆடை மீது தெளித்துக் கொள்வது வழக்கம். அப்படித் தெளித்த போது முதலமைச்சரின் படத்தின் மீது பேனா மை பட்டுவிட்டது. உடனே தினமணியை அச்சத்தில் மடித்து வைத்தேன்.

ஆசிரியர் வந்தார். கரும்பலகைச் செய்திகளை ஒரு முறை படித்தார். நாற்காலியில் அமர்ந்து நாளேட்டை விரித்தவரின் விழிகள் சிவந்தன; பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு ""யாரடா இப்படி மையைச் சிந்தியது?''

ஆறடி ஆசிரியர் ஆகாயம் வரை வளர்ந்தவர் போல் ஆனார். யாரும் பதில் பேச வில்லை. அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. அன்றுவரை நான் ஆசிரியரின் செல்லப் பிள்ளை போல் இருந்தேன். ஆனாலும் அன்றாட நாளேட்டிற்குப் பொறுப்பு நான்தானே! மறுக்கவோ மறைக்கவோ முடியாமல் எழுந்து நின்றேன்.

"அய்யா, நான்தான் இதற்குப் பொறுப்பு' என்று கூறாமல் கையை நீட்டினேன். நாணற்பிரம்பு கொண்டு நையப் புடைத்தார். தலைகவிழ்ந்தேன்.

பெஞ்ச் மேல் நின்றேன். என் உயிர்போய் வந்தது! நான் இன்றும் மறக்கவில்லை அன்று "நாளேடும் நாடும்' என்று அவர் கூறிய அறிவுரையை!

எங்கள் காலத்தில் தேர்வு முடிவுகளை கல்லூரி விளம்பரங்களை அரசுத்துறை சார்ந்த பணி நிலவரங்களைத் தினமணி நாளேட்டில் தவறாது கண்டு வந்தோம். 

சீனா- இந்தியா மீது வன்மமாகப் போர் தொடுத்த போது மூதறிஞர் ராஜாஜி ஒரு கட்டுரையை உருக்கமாக எழுதியிருந்தார். வளராத நிலையில் உள்ள நமது பாரதம் வளர்ச்சி பெற்ற சீனாவுடன் சண்டை செய்வதால் பயனில்லை. அதனால் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்றார். ஆசிரியர் ஏ.என்.சிவராமன் காலம் முதல் இன்று வரையும் தினமணி நடுப்பக்கத் தலையங்கமும் நடுநிலையாய் இருக்கும். 

திருக்குறள் ஒன்றைத் தகுந்தபடி தாங்கி வரும்  தலையங்கத்தில் வரும் முறையும் துணைக் கட்டுரைகளும், தினமணி கதிர், ஞாயிறு கொண்டாட்டம், சிறுவர் மணியின் கருவூலமும் இன்றளவும் பிரசித்தி பெற்றவை. சீவலப்பேரி பாண்டி, ஈழத்தமிழர் போன்ற அற்புதத் தொடர்களெல்லாம் படித்து இன்புற்றுள்ளேன்.

சிறந்த தலைவர்களின் பிறந்தநாள், மறைந்த தலைவர்களின் நினைவு நாள் ஆகியவற்றை மறக்காமல் அன்றே பிரசுரித்து அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை இன்றுள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் முறையில் பிரசுரிப்பது தினமணியின்  செயல்பாடுகள் ஆகும்.

கட்டுரையாளர்: ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு அரசு மின்துறை
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.