ஞாயிறு கொண்டாட்டம்

மனித உரிமை

"சாப்பாடு ரெடி' என்ற பலகையை கையில் ஏந்தி,  சுட்டு எரிக்கும் வெயிலில்  நெடுஞ்சாலை ஓரம்  நின்று... கடந்து போகிறவர்களிடம் "வாங்க சார்..

சுதந்திரன்

"சாப்பாடு ரெடி' என்ற பலகையை கையில் ஏந்தி, சுட்டு எரிக்கும் வெயிலில் நெடுஞ்சாலை ஓரம் நின்று... கடந்து போகிறவர்களிடம் "வாங்க சார்.. சாப்பிட்டுப் போங்க' என்று அருகில் இருக்கும் உணவு விடுதிக்கு அழைக்கும் நரைத்த தலை முடியுடன் சவரம் செய்யாத முகத்துடன் நிற்கும் வயதானவர்களை நாம் அன்றாடம் கடந்து போகிறோம்.

சாலையின் விளிம்பில் நின்று கொண்டு வருவோர் போவோரை உணவு விடுதிக்கு அழைப்பதுதான் அந்த வயதானவர்களின் அன்றாட வேலை. அவர்கள் கையில் பிடித்திருக்கும் பலகை மட்டும் உணவு வேளைக்கு ஏற்ற மாதிரி "டிபன் ரெடி'.. "சாப்பாடு ரெடி'.... "டிபன் ரெடி' என்று மாறும். ஆனால் அவர் காலையிலிருந்து இரவு வரை ரோடு ஓரத்தில் நிற்பது மட்டும் மாறவே மாறாது.

அப்படி நாள் முழுக்க நின்று வருகையாளர்களை உணவுவிடுதிக்கு அழைக்கும் பணியாளர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள குடையும், உட்கார நாற்காலியும் வழங்க வேண்டும் என மனித உரிமைக் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளத்தில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சாப்பிடக் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வெயிலில் நின்றபடி கையில் போர்டுடன் முதியவர்கள் நிற்பதைப் பார்க்கையில் பரிதாபமாகத் தோன்றினாலும், "ஏன் இப்படி வெயிலில் காய்ந்து கால் கடுக்க நாள் முழுவதும் நிற்கிறார்... குடை கொடுக்கலாமே... சில நிமிடங்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க ஒரு சேர் கொடுக்கலாமே' என்று நினைத்தாலும், அவசர கதி வாழ்க்கையின் மும்முரத்தில் அந்தக் கணமே மறந்து விடுகிறவர்கள்தான் அதிகம். உணவு விடுதிக்கு ஆள் பிடிக்கும் வேலையைப் பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்களே வயிற்றுப் பிழைப்பிற்காகச் செய்கிறார்கள்.

இவர்களின் அவல நிலையைக் கண்ட கேரளம் கொல்லம் நகரைச் சேர்ந்த ஹுமாயுன் என்ற வழக்குரைஞர், வெயிலில் காய்ந்து மழையில் நனைத்து நின்று உணவுவிடுதிக்கு ஆட்களை அழைக்கும் வேலையைச் செய்பவர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் குடையும், வேலைக்கிடையே அமர நாற்காலியும் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேரள மாநில மனித உரிமைக் கமிஷனிடம் புகார் மனு கொடுத்தார். அதன் அடிப்படையில் கேரள மாநில மனித உரிமைக் கமிஷன் குடையும், நாற்காலியும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. உடனடியாகக் கேரள தொழிலாளர்கள் நலத்துறை அதிகாரிகள் கேரள மாநில மனித உரிமைக் கமிஷன் ஆணையை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டிலும் உள்ள ஹோட்டல்களில் இப்படி போர்டுடன் நிற்கும் முதியவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். ஏன்..? இந்தியா முழுவதும் இந்த வேலை பார்க்கும் முதியவர்கள் நிற்கிறார்கள்... நின்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும், நிழலுக்கு குடையும், உட்கார நாற்காலியும் வழங்குமாறு உத்தரவிட எல்லா மாநில மனித உரிமைக் கமிஷன்கள் முன் வந்தால், நீண்ட நேரம் வெயிலில் காய்ந்து கொண்டு கால் கடுக்க நிற்கும் முதியவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT